சென்னை மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர் இடையே நீர்வழிப்பாதையில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை மாநகரத்தின் போக்குவரத்துக்கு நெரிசலை குறைப்பதற்கான அதிவிரைவு மெட்ரோ ரயில் திட்டம் 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்டிரல் முதல் கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரையிலும், விம்கோ நகர் முதல் கிண்டி வழியாக விமான நிலையம் வரையிலும் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன. மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 3 வது வழித்தடத்தில் 45.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது.
இதேபோல், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை 4-வது வழித்தடத்தில் 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்தில் 47 கிலோ மீட்டர் தொலைவுக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்தப் பணிகளை 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 ஆம் கட்ட மெட்ரோ பணிக்காக, 163 கோடியே 31 லட்சம் ரூபாய்க்கு ஜப்பான் நிறுவனத்துடன் மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.
இதில், மாதவரம்- சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவைக்காக, அடையாறு ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில் சுரங்கப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 1,242 சதுர மீட்டர் பரப்பளவு கடலோர ஒருங்குமுறை மண்டத்தில் வரும் நிலையில், அதற்கு மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, அடையாறு ஆற்றின் அடியில் 666 மீட்டர் நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்க அனுமதி கிடைத்துள்ளது. பக்கிங்காம் கால்வாயை பொறுத்தவரை, தரமணியில் 495 மீட்டர் நீளத்துக்கும் மயிலாப்பூரில் 58.3 மீட்டர் தூரத்துக்கும் சுரங்க ரயில் பாதை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து சுரங்கம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்பணிகளுக்காக சீனா மற்றும் ஜெர்மனியில் இருந்து 23 போரிங் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Chennai metro, Metro Rail, Metro Train