சென்னையில் அடுத்த 15 நாட்கள் கொசு பிரச்சனை இருக்கும் எனவும், அதன்பின் கொசு தொல்லை குறையும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில வாரங்களாக கொசு தொல்லை நீடித்து வருகிறது. பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் அதிக அளவில் வருகிறது. இந்நிலையில் கொசு ஒழிப்பு பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி பிரியா நியூஸ்18தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணல் அளித்தார்.
கேள்வி : சென்னையில் தற்போது கொசு தொல்லை அதிகளவில் இருக்க என்ன காரணம்?
பதில்: கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பனி அதிகமாக இருப்பதன் காரணமாக கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் கொசு உற்பத்தி அதிகமாக இருப்பதால் சென்னையில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் இதுதொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தி கொசுவை கட்டுப்படுத்தும் பணிகளை இரண்டு மடங்காக அதிகரிக்க உத்தரவிட்டுள்ளோம்.
கேள்வி : சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ள கொசு ஒழிப்பு பணிகள் என்ன?
பதில்: காலை 5 முதல் 7 மணி வரையும், மாலை 5 முதல் 7 மணி வரையும் என இரண்டு நேரமும் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாகனங்கள் மற்றும் கையினால் இயக்கும் இயந்திரங்கள் மூலம் கொசு ஒழிப்புப் புகை பரப்பும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வட்டார துணை ஆணையர்கள், மண்டல அலுவலர்கள், மாநகர நல அலுவலர், தலைமை பூச்சித் தடுப்பு அலுவலர் மற்றும் சுகாதார அலுவலர்கள் கண்காணிப்பில் இப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேள்வி : இன்னும் எத்தனை நாட்களில் கொசு தொல்லை குறையும்?
பதில்: அடுத்த 15 நாட்கள் கொசு பிரச்சனை இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த 15 நாட்களில் மேற்கொள்ளப்படும் கொசு ஒழிப்பு பணிகளின் அடிப்படையில் படிப்படியாக கொசு பிரச்சனை குறையும் என எதிர்பார்க்கிறோம். நீர்நிலை, கால்வாய்கள் என கொசுக்கள் உற்பத்தி ஆகக்கூடிய இடங்களிலேயே அழிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்.
கேள்வி: கொசுவினால் ஏற்படக்கூடிய காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவ முகாம்கள் ஏதேனும் அமைக்க திட்டம் உள்ளதா?
பதில்: காய்ச்சல், சளி பிரச்சனை தொடர்பாக பெரிய அளவில் இதுவரை புகார்கள் வரவில்லை. தேவைப்படும் பட்சத்தில் முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி: சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு வைக்கக்கூடிய வேண்டுகோள் என்ன?
பதில்: வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். தண்ணீரை மூடி வைக்கவும், தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai corporation, Mayor Priya