முகப்பு /செய்தி /சென்னை / பரோட்டா சாப்பிட்டு உறங்கிய நபர் உயிரிழப்பு - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

பரோட்டா சாப்பிட்டு உறங்கிய நபர் உயிரிழப்பு - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

உயிரிழந்த கார்த்திக்

உயிரிழந்த கார்த்திக்

இளைஞர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் கார்த்திக் (வயது 27). இவர் கொளத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு வியாசர்பாடி பகுதியில் உள்ள ரோட்டோர கடையில் பரோட்டா வாங்கி வந்து குடும்பத்தில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விட்டு படுத்து உறங்கினர். இரவு 11 மணி அளவில் கார்த்திக்கு மட்டும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடல்நிலை மோசமாக உள்ளது என்று கூறி மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார்த்திக்கின் உறவினர்கள் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே கார்த்திக் மயக்கம் அடைந்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் கார்த்திக்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த செய்தியை கேட்ட அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

நேற்று இரவு பரோட்டா சாப்பிட்ட பிறகு, கார்த்திக் பாட்டிலில் அடைத்து வைக்கப்படும் ஜூஸ் ஒன்றை குடித்துள்ளார். அதன் பிறகு வேறு எதுவும் சாப்பிடவில்லை. குடும்பத்தில் உள்ள அனைவரும் பரோட்டா சாப்பிட்டு விட்டு உறங்கி சென்றுள்ளனர். ஆனால் மற்றவர்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாத நிலையில், கார்த்திக் மட்டும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக எம்.கே.பி நகர் போலிசார் வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் கார்த்திக் உயிரிழப்புக்காண முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

செய்தியாளர் : அசோக் (சென்னை)

First published:

Tags: Chennai, Death, Parotta