முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் காவலரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடி - சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ!

சென்னையில் காவலரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடி - சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ!

சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி - 2வது படம்: காவல் உதவி ஆய்வாளர் மீனா

சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி - 2வது படம்: காவல் உதவி ஆய்வாளர் மீனா

Chennai Lady Sub-Inspector Shoot Rowdy | காவலர்களை கத்தியால் வெட்டி தப்பிக்க முயன்ற ரவுடியை பெண் காவல் உதவி ஆய்வாளர் சுட்டுப்பிடித்தார்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

காவலர்களை கத்தியால் குத்தி தாக்கிவிட்டு தப்ப முயன்ற பிரபல  ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சென்னை அயனாவரம் பகுதியில் கடந்த 20 ஆம் தேதி அதிகாலை அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் என்பவர் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் உதவி ஆய்வாளரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது. இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக அயனாவரம் காவல்துறையினர் கொலை முயற்சி உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சம்பவத்தின்போது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் கெளதம் என்பதும் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்தவர் சூர்யா என்கிற பெண்டு சூர்யா என்றும், அவரின் பின்னால் அமர்ந்து இருந்தவர் அஜித் என்பதும் இவர்கள் புளியந்தோப்பு திருவிக நகர் 7வது தெருவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட ரவுடிகள்

இதைத்தொடர்ந்து அயனாவரம் பெண் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தலைமை காவலர் அமானுதீன், காவலர்கள் சரவணன், திருநாவுக்கரசு ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்ட கெளதம் மற்றும் அஜித் ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். மேலும் உதவி ஆய்வாளர் சங்கரை தாக்கிய பெண்டு சூர்யாவை பிடிப்பதற்காக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பெண்டு சூர்யா திருவள்ளூர் மாவட்டத்தில் தனது அக்கா வீட்டில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படையினர், அவரை கைது செய்து அயனாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது சிறுநீர் கழிக்க வேண்டுமென பெண்டு சூர்யா கேட்டத்தை அடுத்து நியூ ஆவடி சாலையில் இருக்கும் ஆர்டிஓ அலுவலகம் அருகே வாகனத்தை நிறுத்தினர்.

இதையும் படிங்க: மார்க் ஷீட் தராமல் இழுத்தடித்த கல்லூரி முதல்வர்... ஆத்திரத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவன்... ஷாக் சம்பவம்..!

அப்போது இளநீர் கடை அருகே பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்து காவலர் அமானுதீன் மற்றும் சரவணன் ஆகியோரை வெட்டியுள்ளார். இதனை உதவி ஆய்வாளர் மீனா துப்பாக்கியை காட்டி எச்சரிக்கை விடுத்தபோதும் கையில் இருந்த கத்தியால் காவலர்களை மீண்டும் தாக்க முற்படும்போது உதவியாளர் மீனா பெண்டு சூர்யாவின் இடது கால் முட்டியில் துப்பாக்கியால் சுட்டு தப்பி செல்ல முயன்ற ரவுடி பெண்டு சூர்யாவை பிடித்தார்.

பிடிபட்ட பெண்டு சூர்யா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இரு காவலர்களும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெண்டு சூர்யா மீது 14 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் ரவுடி பெண்டு சூர்யா கத்தியால் தாக்கியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருக்கும் காவலர்கள் அமானுதீன் மற்றும் சரவணன் ஆகியோரை இன்று மதியம் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சம்பவம் குறித்து அயனாவரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவலர்களை கத்தியால் தாக்கி தப்பிச் செல்ல முயன்ற பிரபல ரவுடியை தமிழகத்திலேயே  முதன் முறையாக பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சுட்டு பிடித்திருப்பது தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. மேலும், துரிதமாக செயல்பட்டு ரவுடியை சுட்டு பிடித்த பெண் உதவி ஆய்வாளர் மீனாவை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

First published:

Tags: Chennai, Chennai Police, Crime News