முகப்பு /செய்தி /சென்னை / அசாம் டூ சென்னை.. சினிமாவை விஞ்சும் கஞ்சா விற்பனை.. ஷாக்கான போலீஸார்

அசாம் டூ சென்னை.. சினிமாவை விஞ்சும் கஞ்சா விற்பனை.. ஷாக்கான போலீஸார்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்

Chennai Kanja sale Aquest Arrest | சினிமாவை மிஞ்சும் அளவுக்கு கஞ்சா விற்பனையை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த வட மாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக அடையார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அதன் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் விமல், சிறப்பு உதவியாளர் திருப்பரமன், தலைமை காவலர்கள் அச்சுதராஜ், கௌதம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருபவர் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கஞ்சா வியாபாரியான வட மாநிலத்தவரின் செல்போன் என்னை கைப்பற்றிய மதுவிலக்கு அமலாக்க பிரிவு தனிப்படையினர் வாடிக்கையாளர் போல் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி ஒரு கிலோ கஞ்சா விலையை கேட்டுள்ளனர். அப்பொழுது கஞ்சா வியாபாரியான வடமாநிலத்தவர் ஒரு கிலோ கஞ்சா 20,000 எனக் கூறியுள்ளார்.

விலை குறித்து பிரச்னை இல்லை என்று ஒப்புக்கொண்ட தனிப்படையினர் கஞ்சாவை அடையாறில் கொடுக்கும்படி கூறியுள்ளனர். ஆனால் கஞ்சா வியாபாரி போலீசார் அவர்களை நோட்டமிட்டு பிடித்து விடுவார்கள் என்பதால் எப்போதும் வாடிக்கையாளர்கள் கூறும் இடத்தில் கஞ்சாவை கொடுக்காமல் இவர்களே ஒரு இடத்தை கூறி அங்கு வர சொல்லி அங்கு வைத்து கஞ்சாவை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Also Read:  உடன்கட்டை ஏற்றுதலை பெருமையாக பேசுவது வெட்கப்பட வேண்டிய செயல் - நாடாளுமன்றத்தில் கனிமொழி பேச்சு

அதேபோல் தனிப்படையினர் அடையார் பகுதியில் கஞ்சா கொடுக்க வேண்டும் என்று கூறிய நிலையில் கஞ்சா வியாபாரி சென்னை கிண்டிக்கு வரும்படி கூறியுள்ளார் கிண்டிக்குச் சென்ற தனிப்படையினர் பல பகுதியில் பிரிந்து மறைந்திருந்து நோட்டமிட்டனர். வாடிக்கையாளர்கள் போல பேசி தனிப்படையினர் கஞ்சா வியாபாரியை நேரில் சந்திக்க காத்திருந்தபோது திடீரென ஒருவர் வந்து கஞ்சா வாங்குவதற்காக வைத்திருந்த ரூ.20,000  மட்டும் பெற்றுக் கொண்டு சென்றுள்ளார். கஞ்சா எங்கே என்று கேட்டதற்கு சிறிது நேரத்தில் வேறு ஒரு நபர் எடுத்து வருவார் என்று கூறிவிட்டு பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.

பணத்தை வாங்கியவர் கூறியதுபோல் சுமார் 30 நிமிடங்கள் கழித்து செல்போனில் தொடர்பு கொண்ட வேறு ஒரு நபர் எங்கே நிற்கிறீர்கள் என்ன நிறம் சட்டை அணிந்து இருக்கிறீர்கள் என்று அங்கம் அடையாளம் கேட்டு பின்னர் வந்து கஞ்சாவை கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். கஞ்சா வியாபாரிகள் சினிமா காட்சியில் வரும் காட்சியை விட மிகவும் பாதுகாப்போடு நிஜ வாழ்க்கையில் கஞ்சா வியாபாரம் செய்து வருவதாக அடையார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு தனிப்படையினர் தெரிவித்தனர்.

ஒருவருக்கு கஞ்சா விற்பனை செய்வதற்கு முன்பு அந்த இடத்தை பலர் வந்து நோட்டமிட்டு செல்வதாகவும் குறிப்பாக காவல்துறையினர் எங்கேயும் உள்ளாரா என்றும் பலர் பல இடத்தில் நோட்டமின்றி சென்று விட்டு பின்னர் வாடிக்கையாளர்கள் எங்கு உள்ளார் என்பதையும் நோட்டமிட்டு அவரிடம் பணம் வாங்குவதற்காக ஒருவரை அனுப்பியும் பின்னர் கஞ்சா கொடுப்பதற்கு மற்றொருவரை அனுப்பியும் மிகவும் சாமர்த்தியமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.

கஞ்சாவை வாடிக்கையாளர் போல் நடித்த தனிப்படையினரிடம் விற்பனை செய்துவிட்டு திரும்பிச் சென்ற வடமாநிலத்தவரை மறைந்திருந்த தனிப்படையினர் சுற்றி வளைத்து கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர் கைதான வடமாநிலத்தவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 26-வயதான ஆகாஷ் என்பதும், இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே மாத்தூர் கிராமத்தில் கடந்த ஆறு வருடங்களாக வாடகை வீடு ஒன்று எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த ஆறு வருடங்களாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளத்துடன் லேத் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.  அசாம் மாநிலத்தில் இருந்து சென்னைக்கு மனைவி குழந்தைகளுடன் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு வருவதுபோல் ரயிலில் குறைந்த பட்சம் ஒருமுறை 10 கிலோ கஞ்சாவுடன் அசாம் மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வருவதாக விசாரணையில் கூறியுள்ளார்.

அசாம் மாநிலத்தில் ஒரு கிலோ கஞ்சா ரூ.3000-க்கு வாங்கி சென்னையில் ஒரு கிலோ கஞ்சாவை ரூபாய் 20 ஆயிரத்திற்கு விற்பனை செய்து அதிகம் லாபம் ஈட்டி வந்துள்ளார்.  வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப கொண்டு வரும் கஞ்சா விற்பனைக்கு ஏற்ப மாதம் இருமுறை அல்லது மூன்று முறை அசாம் மாநிலத்தில் இருந்து கஞ்சாவை சென்னைக்கு எடுத்து வருவதாகவும், ஒரு சில நேரங்களில் அவரது உறவினர்கள் மூலம் அங்கிருந்து கஞ்சாவை ரயில் மற்றும் பேருந்து மூலம் எடுத்து வந்ததாகவும் விசாரணையில் கூறியுள்ளார்.

மேலும் ரயிலில் வரும்போது கஞ்சா எடுத்து வந்தால் சோதனையில் எங்கேயாவது சிக்கிக் கொள்வோம் என்பதற்காக மனைவி குழந்தைகளுடன் ஊரிலிருந்து சென்னைக்கு பிழைக்க வருவது போல் கஞ்சாவையும் கடத்தி வந்ததும்,  அதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருவதற்கு முன்னதாகவே ரயிலில் இருந்து இறங்கி அங்கிருந்து ஆட்டோ அல்லது பேருந்து மூலம் அவர்கள் செல்லக்கூடிய இடத்திற்கு அசாம் மாநிலத்தில் இருந்து கடத்தி வரும் கஞ்சாவை சுலபமாக போலீசார் கண்ணீல் சிக்காமல் எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து கைதான அசாம் மாநிலத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரி ஆகாஷ் வசித்து வந்த ஸ்ரீபெரும்புதூர் அருகே மாத்தூர் கிராமத்திற்கு சென்ற தனிப்படையினர் அவர் வீட்டில் சோதனை செய்துள்ளனர். மற்றொரு இடத்தில் அவர் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

தங்குவதற்கு ஒரு வீடு கஞ்சாவை பதுக்கி வைக்க மற்றொரு வீடு என இரு வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தது விசாரணையில் தெரியவந்தது. வடமாநிலத்தில் இருந்து சென்னைக்கு வந்து லேத் வேலை செய்யும் இவர் மாதந்தோறும் உழைத்தால் ரூ.12000 மாத சம்பளம் ஆனால் ஒரு கிலோ கஞ்சாவை விற்பனை செய்தால் ரூ.20000 கிடைக்கின்றது. இதுபோன்று கஞ்சா விற்றால் அதிகம் லாபம் கிடைக்கும் என்பதால் முழு நேரம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளார். கஞ்சா விற்பனை நடைபெறாத நேரத்தில் மட்டுமே லேத் வேலை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த அடையார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைதான அசாம் மாநிலத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரி ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  சிறப்பாக செயல்பட்டு வடமாநில கஞ்சா வியாபாரியை கைது செய்து 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த அடையார் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் விமல், சிறப்பு உதவியாளர் திருப்பரமன், தலைமை காவலர்கள் அச்சுதராஜ், கௌதம் ஆகியோர் அடங்கிய தனிப்படையினரை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெகுவாக பாராட்டினார்.

செய்தியாளர்: வினோத் கண்ணன்

First published:

Tags: Chennai, Crime News