Home /News /chennai /

நடிகர் வடிவேலுவின் "ஸ்டைல் பாண்டி" பாணியில் மற்ற வீடுகளை பூட்டி விட்டு கொள்ளை.. சிசிடிவியில் பதிவான காட்சிகள்

நடிகர் வடிவேலுவின் "ஸ்டைல் பாண்டி" பாணியில் மற்ற வீடுகளை பூட்டி விட்டு கொள்ளை.. சிசிடிவியில் பதிவான காட்சிகள்

திருட்டு

திருட்டு

கொள்ளையடிக்கும் வீடுகளில் பெரும்பாலும் வீட்டினுள் குடியிருப்பு வாசிகள் தூங்கிக் கொண்டிருக்கும்போதே அவர்களுக்கே தெரியாமல் லாபகமாக கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்து வெளிவந்த படம் "நகரம்". இந்த திரைப்படத்தில் வடிவேலு  கொள்ளையராக நடித்திருப்பார். இதில் ஒரு காட்சியில் அக்ரகாரத்திற்கு திருடச் சொல்லும் வடிவேலு திருடச் சொல்லும் வீட்டை மட்டும் விட்டுவிட்டு மற்ற அனைத்து வீடுகளையும் பூட்டு போட்டு பூட்டி விடுவார். உடன் வந்த வடிவேலுவின் விழுதுகள் எதற்காக மற்ற வீட்டுகளை பூட்டுப் போட்டுப் போடுகிறீர்கள் என கேட்பர்.

அதற்கு வடிவேல், கொள்ளை அடிக்கும் போது மாட்டிக் கொண்டாலும் அக்கம் பக்கத்தினரிடம் சிக்காமல் இருப்பதற்காக அனைத்து வீடுகளிலும் பூட்டுப் போடுவதாக தெரிவிப்பார்.
இதே பாணியில் தந்தையும் மகனும் என இருவர் சென்னை முழுவதும் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் துணிச்சலாக அரை நிர்வாணத்தோடு சென்று கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலம் கே.வி காலனி 2 வது தெரு பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கடந்த 6 ம் தேதி தனது குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்றுள்ளார். உறவினர் ஒருவர் இவர் வீட்டுக்கு வந்த பார்த்தபோது, கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அந்நபருக்கு தகவல் அளித்துள்ளார்.
தனது குடும்பத்தோடு ராமேஸ்வரம் சென்ற நபர் சென்னை வந்து பார்த்த போது 37 சவரன் தங்க நகைகள், ரூ.57 ஆயிரம் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதற்கு அடுத்த சில தினங்களில் ரயில்வே பார்டர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் கதவுகளை உடைத்து 20 க்கும் மேற்பட்ட சவரன் நகைகள் மற்றும் பீரோவில் இருந்த பணத்தையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றதாக அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இரண்டு வீடுகளுக்கும் நேரில் சென்று விசாரணை செய்தபொது கொள்ளையர்கள் கொள்ளையடிக்கும் வீட்டை தவிர மற்ற வீடுகளின் பூட்டை பூட்டிவிட்டு ஒரு வீட்டை மட்டும் குறிவைத்து கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: தத்ரூபமாக உருவாக்கப்பட்ட வங்க புலியின் சிற்பம்.. கைவினை கலைஞர் அசத்தல்

மேலும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது இரண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டதும் ஒரே நபர்கள் தான் என தெரியவந்தது. இதனையடுத்து அஷோக் நகர் உதவி ஆணையர் தனசெல்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் குற்றவாளிகள் இருவரையும் போலீசார் அடையாளம் கண்டனர். அவர்கள் பெரும்பாக்கம் சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள பிளாட்பார்ம் பகுதிகளில் தங்கி இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த  வெங்கடேசன்(28) மற்றும் அவரது சித்தப்பா ரவிக்குமார் (47) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் அடுக்குமாடி குடியிருப்புகளை நோட்டமிட்டு நள்ளிரவு நேரங்களில் கொள்ளையடித்து வந்ததும் தெரிய வந்தது.

குறிப்பாக ரயில்வே சாலை பகுதிகளை மட்டுமே குறியாக வைத்து அங்கு இருக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை ஓரிரு தினங்கள் நோட்டமிடுகின்றனர். பின்னர் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் வெங்கடேசன்  அவரது சித்தப்பா ரவிக்குமார் மற்றும் இவர்களது உறவினர் ஒருவர் என மூன்று நபர்கள் கொள்ளையடிக்க  வருகின்றனர். அதில் உறவினர் வீட்டின் வெளியே ஏதேனும் ஆபத்து இருந்தால் சத்தமிடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டு பின் வெங்கடேசனும் அவரது சித்தப்பா ரவிக்குமாரும் வீட்டுக்குள் சென்று கொள்ளையடித்து வருவதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளனர்.

மேலும் படிக்க: அதிவேகமாக வந்து பைக் மீது மோதிய கார்: தூக்கி வீசப்பட்ட பெண்.. பதற வைக்கும் வீடியோ

குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்று அங்கு கொள்ளை அடிக்க திட்டமிட்டு இருக்கும் வீட்டை மட்டும் விட்டுவிட்டு மற்ற அனைத்து வீடுகளையும் வெளிப்புறமாக பூட்டு போட்டு பூட்டி விடுகின்றனர். பின்பு கொள்ளையடிக்க திட்டம் போட்ட வீட்டில் நுழைந்து பீரோ, லாக்கர் ஆகியவற்றை கள்ளச்சாவி போட்டு திறந்து கையில் கிடைக்கும் தங்க நகை, வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளனர்.

குறிப்பாக கொள்ளையடிக்கும் வீடுகளில் பெரும்பாலும் வீட்டினுள் குடியிருப்பு வாசிகள் தூங்கிக் கொண்டிருக்கும்போதே அவர்களுக்கே தெரியாமல் லாபகமாக கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். கொள்ளையடிக்கும் போது யாரும் தங்களை பிடித்து விடக்கூடாது என்பதற்காக கொள்ளையர்கள் மேல் சட்டை , வேட்டி, லுங்கி என எதுவும் அணியாமல் அரை ட்ரவுசர் மட்டுமே அணிந்து கொண்டு அரை நிர்வாணமாக கொள்ளையடித்து வந்துள்ளனர்.
கொள்ளையடித்த நகைகளை நகை கடைகளில் கொடுத்து பாதி விலைக்கு விற்பனை செய்து வந்ததும், அதில் சொகுசாக வாழ்ந்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

சென்னையில் அசோக் நகர் கோடம்பாக்கம், தாம்பரம், சங்கர் நகர், பெசன்ட் நகர் போன்ற பகுதிகளிலும் சென்னையை தவிர்த்து தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொள்ளையடித்துள்ளனர். இவர்கள் மீது சுமார் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக ஓட்டத்தை மட்டுமே மூலதனமாக வைத்து இவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருவரையும் பல கிலோமீட்டர் தூரம் ஓடியே துரத்தி கைது செய்ததாகவும் சுவர்கள், மரங்கள் மீது அனாயசமாக இவர்கள் இருவரும் ஏறி தாவி குறித்து ஓடியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 47 சவரன் தங்க நகைகள் ரூபாய் ஆறரை லட்சம் பணம் பறிமுதல் செய்துள்ளனர். கொள்ளையடித்த நகைகளை விற்பனை செய்யும் நகை கடைகளில் போலீசார் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
Published by:Murugesh M
First published:

Tags: Chennai, Crime News, Theft

அடுத்த செய்தி