போக்சோ வழக்கில் தொடர்புடையவர்களும், குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர்களும் குழந்தைகள் நலக் குழுமத்தில் தேர்ந்தெடுக்கபடுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
தீர்ப்பு விவரம் என்ன?
கடந்த 2000ம் ஆண்டில் முதன் முதலில் சிறார் நலச்சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி குழந்தை நலக் குழுமம் மற்றும் சிறார் நீதி வாரியம் (Juvenile Justice Board) போன்ற குழுக்கள் நியமிக்கப்பட்டன. இதில் 5 பேர் கொண்ட குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டு குழந்தைகள் மற்றும் சிறார் நலனை பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதற்கான மாதிரி விதிகள் 2001ம் ஆண்டு இயற்றப்பட்டன. அதன்படி மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி ஆகிய 3 பேர் அடங்கிய குழு குழந்தைகள் நலக் குழுமத்திற்கான 5 பேர் அடங்கிய குழுவைத் தேர்ந்தெடுப்பார்கள்.
இந்த விதிகளில் 2006ம் ஆண்டு சிறு சிறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதன் பின் 2015ம் ஆண்டு முழுமையான குழந்தைகள் மற்றும் சிறார் நீதி சட்டத்தை இந்திய அரசு இயற்றியது. 2016ம் ஆண்டு இந்த சட்டத்திற்கு முழுமையான மாதிரி விதிகளை உருவாக்கி சட்டமாக இயற்றப்பட்டது
இதில் சிறார் நீதிச்சட்டம் 110வது விதியின் படி, இந்திய அரசு இயற்றிய மாதிரி விதிகளுக்கு உட்பட்டு மாநில அரசுகள் தங்களுக்கு தகுந்தாற்போல் குழுக்களை நியமிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் தமிழக அரசு 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறார் நீதிச் சட்ட மாதிரி விதிகளை தமிழக அரசிதழில் பிரசுரித்தது. அதில், இந்திய அரசு கொண்டு வந்த விதி எண் 110ஐ மதிக்காமல் 2001ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிறார் நீதிச்சட்டத்தின் படி மூவர் குழுவைக் கொண்டே குழுக்களை தேர்ந்தெடுக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன்படி கடந்த 5 வருடங்களாக குழந்தைகள் நலக்குழு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு வந்தனர். இதில் பல்வேறு முறைகேடுகளும், அத்துமீறல்களும் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
தங்களுக்கு வேண்டிய நபர்களை நியமிப்பதும், போக்சோ வழக்கில் தொடர்புடையவர்கள், குழந்தைகளிடம் அத்துமீறியவர்கள் போன்றவர்களை அதிகாரிகளாக நியமிப்பதும் போன்ற அத்துமீறல்கள் இதன் மூலம் அரங்கேற்றப்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன்மூலம் குழந்தைகள் நலன் வெகுவாக பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் குழந்தைகள் நலக் குழும உறுப்பினராக இருந்த ஜஹிருதின் என்பவர் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் தமிழக அரசு பிரசுரித்த சிறார் நீதி மாதிரி விதிகளில், விதி எண் 16 மற்றும் 17 இந்திய அரசின் சிறார் சட்ட விதிகளுக்கு புறம்பானது என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதாவது விதி எண் 16ன் படி மாவட்ட நீதிபதி குழுவே குழந்தைகள் நலக் குழுமத்தை நியமிக்கலாம். அதே போல் விதி எண் 17ன் படி குழந்தைகள் நலக் காப்பகங்கள் நடத்துபவர்கள் குழந்தைகள் நலக்குழுமத்தில் தேர்ந்தெடுக்கப்படலாம்.
ஆனால் இந்த 2 விதிகளையும் இந்திய அரசின் சிறார் நீதிச் சட்டம் விதி எண் 87 மற்றும் 88 அனுமதிப்பதில்லை. எனவே விதி எண் 16 மற்றும் 17 சட்ட விதிகளை செல்லாது என அறிவிக்க கோரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தமிழக அரசின் 2 விதிகளும் சட்டத்திற்கு புறம்பானது என அறிவித்து கடந்த 3ம் தேதி உத்தரவிட்டது.
தமிழக அரசு புதிய விதிகளை ஏற்படுத்தும் வரை இந்திய அரசின் 87 மற்றும் 88 விதிகளே செல்லும் என்றும் தீர்ப்பளித்தது. அதன்படி இனி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவே சிறார் நலக்குழுமத்தை நியமிக்க முடியும். குழந்தைகள் காப்பகம் நடத்துபவர்கள், அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை தங்கள் சுயநலத்திற்காகவும், சம்பாதிக்கும் நோக்குடனும், குழந்தைகள் நலக்குழுமத்தில் தேர்ந்தெடுக்கப்பட முடியாது.
Also see... தக்கலையில் லோடு ஆட்டோ-கார் மோதி விபத்து... மூன்று பேர் படுகாயம்
இதன் மூலம் தகுதியானவர்கள் குழந்தைகள் நலக்குழும அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை அதிகாரிகளாக நியமிக்கும் போக்கு கட்டுப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Chennai High court, Child Care, Pocso