சென்னையிம் நிலத்தடி நீரின் தரம் குறித்து 45 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 25 இடங்களில் அளவிற்கு அதிகமான கன உலோகங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
சென்னையின் நிலத்தடி நீரின் தரம் குறைத்து சயின்ஸ் டைரக்ட் (Science direct) ஆய்வு மேற்கொண்டது. சென்னையில் 45 இடங்களில் 90 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் நாகல் கேனியில் கேட்மியம் நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விட 15 மடங்கு அதிகமாகவும், பம்மலில் நிக்கல் 7 மடங்கு அதிகமாகவும் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும், 25 இடங்களில் ஈயம், 13 இடங்களில் நிக்கல், 3 இடங்களில் குரோமியம், ஒரு இடத்தில் கேட்மியம் என நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதிகளின் நிலத்தடி நீர் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் இளங்கோ கூறுகையில், "நீண்ட கால அடிப்படையில் இந்த நீரை மக்கள் பருகினால் பல்வேறு உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதிகமான தொழிற்சாலைகள் இருக்கக்கூடிய பகுதிளில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது என்பது இந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
குடிநீர் வாரியம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாதுகாப்பானது. இருப்பினும் அந்த குடிநீர் வரக்கூடிய வழி, அதாவது குழாய் உடைப்பு, சாக்கடை நீர் கலந்து வருவது என இதன் காரணமாகவே பொதுமக்களுக்கு கிடைக்கப்பெறும் போது அதன் தரம் குறைகிறது" என்கிறார்.
அதேபோல், சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் குடிநீர் தேவைக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் நீரை பயன்படுத்துவது இல்லை. கேன் குடிநீரையே பயன்படுத்துகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் கூட வருமானத்தில் 12 சதவிகித தொகையை குடிநீர் கேன் வாங்க செலவிடுவதாகவும் ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசின் ஜல் ஜீவன் மீஷன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் சென்னையில் குடிநீர் வாரியம் மூலம் வழங்கப்படும் குழாய் குடிநீர் பாதுகாப்பானது இல்லை என தெரியவந்தது. நிலத்தடி நீர் மற்றும் குழாய் குடிநீர் என இரண்டும் பாதுகாப்பானது இல்லை என்பது சென்னை மக்களுக்கு அதிர்ச்சியான செய்தியாகி உள்ளது. மக்களுக்கு ஆரோக்கியமான குடிநீரை இலவசமாக வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தவதோடு, நிலத்தடி நீர் மேலும் மாசடையாமல் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.