ஹோம் /நியூஸ் /சென்னை /

கனமழையை எதிர்கொள்ள சென்னையில் முழு வீச்சில் ஏற்பாடுகள்.. தயார் நிலையில் 860 பம்புகள்

கனமழையை எதிர்கொள்ள சென்னையில் முழு வீச்சில் ஏற்பாடுகள்.. தயார் நிலையில் 860 பம்புகள்

சென்னை வெள்ள தடுப்பு நடவடிக்கை

சென்னை வெள்ள தடுப்பு நடவடிக்கை

மக்கள் புகார்களைத் தெரிவிக்க 15 இணைப்புகளுடன் கூடிய 1913 உதவி எண்ணும், 044-2561 9206, 044-2561 9207 மற்றும் 044-2561 9208 ஆகிய தொலைபேசி எண்களும், 94454 77205 என்ற வாட்ஸ்ஆப் செயலியும்  செயல்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னையில் கனமழையை எதிர்கொள்ளும் வகையில், தாழ்வான பகுதிகள் மற்றும் கால்வாய்களில்  860 பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாநகராட்சி மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தற்போது பார்க்கலாம்.

கடந்த அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி சென்னையில் சுமார் 35 செ.மீ., மழை பதிவாகியது. ஆனால், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மழை நீர் தேங்கும் இடங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக தென் சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் வழங்கமாக தண்ணீர் தேங்கக்கூடிய இடங்களில் மழை நீர் தேங்கவில்லை.

சென்னையில் பல்வேறு திட்டங்களின் மூலம் பிரதான பகுதிகளில் சுமார் 220 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் சுமார் ரூ.710 கோடி மதிப்பீட்டில் மே மாதம் துவங்கப்பட்டு 157 கி.மீ. நீளத்திற்கு பணிகள் முடிகப்பட்டுள்ளன. இந்த மழை நீர் வடிகால் பணிகள் மழை நீர் தேங்குவதில் இருந்து கைகொடுத்துள்ளது.

இருப்பினும் வடச்சென்னை பகுதிகளில் மழை நீர் தேங்கும் நிலை நீடிக்கிறது. இந்நிலையில், சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் சூழலில்,  பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

24 மணி நேரமும் செயல்படும் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் 4 அலுவலர்கள், துணை ஆட்சியர் நிலையில் 3 அலுவலர்கள், 3 செயற்பொறியாளர்கள் மற்றும் 54 இதர நிலையிலான அலுவலர்கள், பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள்: வரைவு பட்டியலை வெளியிட்ட மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு

மேலும், இதர சேவைத் துறைகளான சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீகரற்று வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் நீர்வளத்துறை ஆகிய துறைகளைச் சார்ந்த புகார்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய துறைகளின் அலுவலர்களும் கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வருகின்றனர்.

மழை நீர் தேங்க வாய்ப்பு இருக்கக்கூடிய தாழ்வான இடங்கள் மற்றும் கால்வாய்களில் 860 மோட்டார் பம்புகள் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில்  கனமழைக்கு பின், மழை நீர் வடிந்து செல்ல ஏதுவாக 1,312கி.மீ., நீளம் உள்ள வடிகால்கள் துார்வாரப்பட்டுள்ளது. வடசென்னையில் உள்ள, பிரதான கால்வாய்கள் துார்வாரப்பட்டுள்ளது. இதுவரை 85 லட்சம் கிலோ கழிவுகளை அகற்றப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகாலுக்கான 22,996 வண்டல் வடிகட்டி தொட்டி துார்வாரப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 2,500 கிலோக்கு மேல் வண்டல் அகற்றப்பட்டுள்ளது.

நவம்பர் 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை 1018 மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு பாரம் குறைக்கப்பட்டுள்ளன. மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்ற 238 பவர் ரம்பங்கள் மற்றும் இரவு நேரங்களில் பணியாற்றும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: திருச்சியில் அரசு பேருந்தில் ஆபத்தாக பயணித்த இளைஞர்கள்... பின்னால் காரில் வந்தவர் என்ன செய்தார் தெரியுமா?

அதிக கனமழை வந்தால் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ள இடங்களில் 109 மீட்பு படகுகள், சமுதாய நலக்கூடங்கள், பள்ளி வளாகங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 169 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்க ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உணவு சமைத்து வழங்கும் வகையில் பொது சமயற்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசரகால சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொண்ட குழுவினர் மழையின் போது ஏற்படும் மின்கசிவைத் தடுக்க தெரு விளக்குகள், பில்லர் பாக்ஸ்கள் உள்ளிட்டவற்றை சோதனை செய்ய வருகின்றனர்.

மழைநீர் தேக்கம், சாய்ந்த மரங்கள் மற்றும் மரக்கிளைகள், எரியாத தெருவிளக்கு மின்கம்பங்கள், மின்சாரப் பெட்டிகள் மற்றும் மின்கம்பங்களில் ஏற்படும் மின்கசிவு, மின் இணைப்பு துண்டிப்பு, குடிநீர் விநியோகம், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருதல், சாலை மற்றும் தெருக்களில் வெளியேறும் கழிவுநீர் குறித்து மக்கள் புகார்களைத் தெரிவிக்க 15 இணைப்புகளுடன் கூடிய 1913 உதவி எண்ணும், 044-2561 9206, 044-2561 9207 மற்றும் 044-2561 9208 ஆகிய தொலைபேசி எண்களும், 94454 77205 என்ற வாட்ஸ்ஆப் செயலியும்  செயல்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகள், நீர்வழிக் கால்வாய்கள், ஏரிகள் மற்றும் கடல் முகத்துவாரங்களில் பொருத்தப்பட்டுள்ள 68 கண்காணிப்பு கேமராக்களின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் 22 சுரங்கப்பாதைகள் மற்றும் நீர்வழிக் கால்வாய்களில் செல்லும் வெள்ள நீரின் அளவினை அறிய 38 இடங்களில் வெள்ள உணரிகள் (Flood Sensors) அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் பொழியும் மழையின் அளவினை கண்டறிய மாநகராட்சியின் சார்பில் ஒரு மண்டலத்திற்கு 2 என 15 மண்டலங்களில் 30 மழைமானிகள்  பொருத்தப்பட்டுள்ளது.

Published by:Murugesh M
First published:

Tags: Chennai corporation, Rain