சென்னை அருகே நூதன முறையில் மனைவியுடன் சேர்ந்து சுமார் 15 லட்சம் மதிப்பிலான காரை திருடி 23 ஆயிரத்திற்கு விற்பனை செய்த ரவுடியை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் ராஜாலிங்கம்(33) பல்லாவரத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் 18ம் தேதி நிறுவனம் சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் அவருக்கு சொந்தமான சுமார் ரூ. 15 லட்சம் மதிப்பிலான டஸ்ட்டர் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது கேளம்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு ஐடி ஊழியர்கள் மீது ராஜாலிங்கம் கார் இடித்ததாக கூறப்படுகிறது. இதை உணராத அவர் காரை நிறுத்தாமல் சென்றதால், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் காரை விரட்டி பிடித்து மடக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது சம்பவ இடத்தில் ஆஜரான ரவுடி முரளி மற்றும் அவரது மனைவி சங்கீதா வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து முரளி ராஜாலிங்கத்தின் கன்னத்தில் அறைந்து விட்டு காயமடைந்த பெண்ணை சிகிச்சைக்கு அழைத்து செல்லுமாறு உத்தரவிட்டு, காரை தான் காவல்நிலையத்தில் ஒப்படைக்கிறேன் என கூறியுள்ளார்.
இதில் அச்சமடைந்த ராஜாலிங்கம் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால், முரளியோ காரை காவல்நிலையத்தில் விடுவதாக கூறிவிட்டு காரை திருடிகொண்டு தப்பி சென்றுள்ளார். சிகிச்சை முடிந்த பின்பு கார் திருடுபோனதை உணர்ந்த ராஜாலிங்கம் , இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார்.
தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமுல்ராஜ் உத்தரவின் பேரில் பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஷ் தங்கையா மேற்பார்வையில் கேளம்பாக்கம் உதவி ஆணையாளர் ரவிக்குமார் தலைமையில் ஆய்வாளர் கிளாட்சன் ஜோஷ், தலைமை காவலர்கள் விஜயகுமார், தாமோதரன், சேவியர், பலமுருகன், பழனி ஆகியோர் கொண்ட 2 தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சி அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் ஓட்டி வந்த இருசக்கர வாகனமே திருட்டு வண்டி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த முரளி பிரபல ரவுடி சூர்யாவுடன் இருந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து போலீசார் தங்களுக்கு ஸ்கெட்ச் போட்டதை உணர்ந்த முரளி அவரது மனைவியுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுகாடு பகுதியில் பதுங்கியுள்ளார். இந்த ரகசிய தகவலை அறிந்த போலீசார், அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்போது தப்பியோட முயற்சித்த போது முரளிக்கு கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் முரளி மற்றும் அவரது மனைவி சங்கீதாவை சுற்றிவளைத்து பிடித்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ராஜாலிங்கத்தின் காரை ஒரு வழக்கறிஞருக்கு வெறும் 23,000-க்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கறிஞரிடம் கேட்ட போது, காரை லீசுக்கு விட்டதாக தெரியவந்தது. இப்படி பலரிடம் கை மாறிய காரை ஒருவழியாக தனிப்படையினர் பத்திரமாக மீட்டு காவல்நிலையம் கொண்டு வந்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட தம்பதி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நூதன முறையில் பல வாகனங்களை திருடி அதை விற்பனை செய்து உல்லாசமாக வாழ்ந்து வந்த தம்பதியினர், தற்போது சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கின்றனர்.
செய்தியாளர்: ப.வினோத் கண்ணன், இசிஆர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arrest, Chennai, Crime News, Theft