புயல் எச்சரிக்கையின் காரணமாக பொதுமக்கள் மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டால் உடனடியாக வெளியேற்ற 805 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களை தங்க வைப்பதற்காக 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும் பொழுது காற்றின் வேகத்தின் காரணமாக விழும், மரம் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்கான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு வார்டிலும் அவசர கால தேவைக்காக ஒரு சிறிய இலகுரக வாகனம் மற்றும் 10 பணியாளர்களை தயார்நிலையில் வைத்திருக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கையின் காரணமாக பொதுமக்கள் மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் மரங்களின் அருகாமையில் நிற்பதையோ அல்லது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களின் கீழ் நிற்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் அவசர உதவி, மற்றும் புகார்களை தெரிவிக்க 1913 என்ற உதவி எண்ணில் அழைக்கலாம் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னையில் உள்ள பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புயலின்போது மரம் மற்றும் மரக் கிளைகள் சாய்ந்து விழக்கூடிய அபாயம் உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்து. இதையடுத்து, மாமல்லபுரம் அருகேயுள்ள கொக்கிளமேடு, தேவநேரி, வெண்புருஷம் ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள், தங்கள் படகுகளையும் மீன்பிடி வலைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் சென்றனர். மாமல்லபுரம் மற்றும் தேவநேரி பகுதியில் மீன்பிடி படகுகளை நிறுத்துவதற்கு போதிய இடமில்லை என மீனவர்கள் கூறியுள்ளனர். எனவே, பேரிடர் காலங்களில் மீன்பிடி படகுகளை நிறுத்துவதற்கு நிரந்தர இடம் ஒதுக்கித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.