சென்னையில் 9 மற்றும் 13 ஆகிய இரண்டு மண்டலங்களில் பாதிப்பு அதிரிகரிக்கிறது என்றும் பாதிப்பு வேகம் அதிகமாக இருந்தாலும் உயிரிழப்பு இல்லை என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகர் கிரி சாலையில் உள்ள குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா தொற்று இந்தியா முழுவதும் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதாக தெரிவித்தார்.
மேலும்,”தமிழகத்தில் சுகாதரத்துறை, உள்ளாட்சி அமைப்புகளை மிகுந்த கவனத்துடன் இருக்க முதலமைச்சர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு மேலாக உயிரிழப்பு இல்லாத பாதிப்பு என்கிற நிலை இருந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழகம், சத்ய சாய், ஐஐடி, விஐடி ஆகிய கல்லூரிகளில் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது .ஆனால் 4 கல்லூரிகளிலும், மாணவர்கள் மாஸ்க் அணிவது, உணவருந்தும் போது சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து வருகின்றனர். இதனால் தொற்று பாதிப்பு இந்த கல்லூரிகளில் வெகுவாக குறைந்து வருகிறது.
சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்பு சற்று அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் 9 மற்றும் 13 ஆகிய மண்டலங்களில் தொற்று அதிகமாக உள்ளது. சென்னையில் மொத்தம் 370 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளனர். சென்னையிலும் ஒரு சில இடத்தில் மட்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இதையும் படிங்க: ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணியில் சிறப்பாக விளையாடி திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
தி.நகரில் ஒரு குடும்பத்தில் 6 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் 6 பேரும் நலமுடன் இருக்கிறார்கள். பாதிப்பின் வேகம் சற்று அதிகமாக இருந்தாலும் உயிரிழப்பு போன்ற நிலை இல்லாததால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய தேவையில்லை.தொற்று பாதிப்பு எங்கெல்லாம் அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் சுகாதரத்துறை அதிகாரிகள் உடனடியாக சென்று தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Corona, Minister Ma.Subramanian