இந்தியாவில் உள்ள ஆறுகளில் கூவம் ஆறுதான் மிகவும் மாசடைந்த ஆறு என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மாசு அடைந்த ஆறுகளின் பட்டியலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு வருகிறது. அதன்படி 2022ம் ஆண்டுக்கான அறிக்கையை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2019ம் ஆண்டு இதுபோன்ற அறிக்கையை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது. இந்த அறிக்கையில் இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 311 மாசடைந்த ஆறுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
311 ஆறுகளில் 4,000-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயாலஜிக்கல் ஆக்சிஜன் டிமாண்ட் (Biochemical oxygen demand ) என்ற ஆய்வு முறையில் இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி ஒரு நதியில் இருந்து எடுக்கப்படும் 1 லிட்டர் தண்ணீர் தூய்மையான தண்ணீராக மாற தேவைப்படும் ஆக்சிஜனின் அளவைப் பொறுத்து இந்த BOD கணக்கீடு செய்யப்படுகிறது.
எடுத்துக்காட்டாக ஒரு ஆற்றில் எடுக்கப்படும் தண்ணீரில் தூய்மையான தண்ணீராக மாற குறைந்த அளவு ஆக்சிஜன் தேவைப்பட்டால் அந்த ஆறு குறைவாக மாசடைந்து உள்ளதாகவும், மிக அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்பட்டால் அதிகமாக மாசு அடைந்து உள்ளதாகவும் எடுத்துக் கொள்ளப்படும்.இதன்படி, இந்தியாவில் உள்ள ஆறுகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் கூவம் ஆற்றில் எடுக்கப்பட்ட தண்ணீர் தான் தூய்மையான தண்ணீராக மாற அதிக அளவு ஆக்சிஜனை எடுத்துக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
கூவம் ஆற்றில், அடையாறில் இருந்து சத்யா நகர் வரை உள்ள வழித்தடத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீர் தூய தண்ணீராக மாற 345 மில்லி கிராம் ஆக்சிஜன் தேவைப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆறு மற்றும் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பகிலா ஆறு மிகவும் மாசடைந்த ஆறாக கண்டறியப்பட்டுள்ளது.
சபர்மதி ஆற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் தூய தண்ணீராக மாற 292 மில்லி கிராம் ஆக்ஸிஜனும், பகிலா ஆற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் தூய தண்ணீராக மாற 287 மில்லி கிராம் ஆக்ஸிஜனும் தேவைப்படுவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Polluted river, Tamil News