சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் வழக்குகளை துரிதமாக கையாண்டு உடனுக்குடன் குற்றவாளிகளை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்டவர்களின் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ் சென்னை காவல் ஆணையரகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 2017ம் ஆண்டில் இருந்து 40க்கும் மேற்பட்ட போலி கண்டெய்னர் நிறுவனங்கள் தொடங்கி அவற்றின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்த பொன்ராஜ், டேவிட் (எ) கெவிராஜ், கோகுல்நாத் (எ) டேனியல், பேட்ரிக்மாரி விஜயமுருகப்பா ஆகிய 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து ரூ.58 லட்சம் ரொக்கப்பணம், 188 கிலோகிராம் தங்க நகைகள், விலை உயர்ந்த சொகுசு கார்கள் இரண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல, மத்திய மற்றும் மாநில அரசுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி போலியாக அரசு முத்திரைகளை பயன்படுத்தி, போலி நியமன ஆணைகளை வழங்கி சுமார் 100க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூ.5 கோடிக்கு மேல் பணம் பெற்று மோசடி செய்த ரேணுகா, ரஞ்சித் (ரேணுகாவின் கணவர்), பிச்சாண்டி, ஜித்தேஷ், காந்தி, மோகன்ராஜ், ராஜேந்திரன், ரவிகுமார், சீனிவாசன், மோகனசுந்தரம், மதன்குமார் ஆகிய 11 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ரேணுகா, மோகன்ராஜ் மற்றும் பிச்சாண்டி ஆகியோர் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த காவல்
ஆணையர் சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ், அரசு வேலையை தனி நபரால் வாங்கி தர இயலாது எனவும் வேலை வாய்ப்பு பற்றிய விளம்பரம் அரசு இணையதளங்களில் வெளியாகும் எனவும் தேர்வில் வெற்றி பெற்றால் தான் அரசு பணிக்கு செல்ல முடியும் என தெரிவித்தார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை 79 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த மே மாதத்தில் சென்னையில் அதிக அளவிலான கொலைகள் நடந்ததாக சமூகவலைதளங்களில் வதந்தி பரவுவதாக தெரிவித்த அவர், கடந்த மே மாதத்தில் சென்னையில் 10 கொலைகள் மட்டுமே நடந்ததாகவும் அவற்றில் மூன்று கொலைகள் மட்டுமே மோட்டிவ் காரணமாக ரவுடிகளால் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். மற்றவை குடும்ப பிரச்சனை காரணமாக நிகழ்ந்துள்ளதாகவும், மற்ற மாநில மாநகரங்களை விட சென்னையில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என தெரிவித்த அவர் குற்றங்களை முழுமையாக தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் அரசியல்வாதிகளின் தலையீடு மற்றும் அழுத்தம் உள்ளதா? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, எந்தவிதமான அழுத்தமும் தங்களுக்கு இல்லை எனவும் தாங்கள் சுதந்திரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
உங்கள் நகரத்திலிருந்து(Chennai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.