சென்னையில் நேற்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சினிமா தயாரிப்பாளரை, தரகர் கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை சின்மயா நகர், நெற்குன்றம் சாலை பகுதியில் உள்ள கால்வாயில் நேற்று காலை துப்புரவு பணியாளர்கள் பணி செய்து கொண்டிருந்தபோது கருப்பு கலர் பிளாஸ்டிக் கவர் சுற்றப்பட்ட நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற விருகம்பாக்கம் போலீசார் பாலித்தீன் கவரை மீட்டு பிரித்து பார்த்தபோது அதில் ஆண் சடலமொன்று நைலான் கயிறால் பின்புறமாக கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாயில் துணி வைத்து அடைக்கப்பட்ட நிலையில் உடல் முழுவதும் ரத்தக் கறையோடு இருந்துள்ளது.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் ஆதம்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபரும், சினிமா தயாரிப்பாளருமான பாஸ்கரன்(67) என்பது தெரியவந்தது. மேலும், கொலை செய்யப்பட்ட பாஸ்கரன், லக்ஷ்மி கரண் எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு கம்பெனி நடத்தி 1997 ம் ஆண்டு நடிகர் ராம்கி நடிப்பில் வெளிவந்த "சாம்ராட்" மற்றும் "ஒயிட்" ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில் தொழிலதிபரும் சினிமா தயாரிப்பாளருமான பாஸ்கரனை கொலை செய்துவிட்டு நெற்குன்றம் பகுதியில் தலைமறைவாக இருந்த விருகம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் (37) என்ற நபரை விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் கணேசன், பாலியல் புரோக்கர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சம்பவத்தன்று திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பாஸ்கரன் மது போதையில் உல்லாசமாக இருப்பதற்காக இரண்டு பெண்களை கணேசனிடம் கேட்டுள்ளார். கணேசனும் ஏற்பாடு செய்து கொடுக்கவே, பெண்கள் வர தாமதமாவதாக கூறி பாஸ்கரன் கணேசனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த கணேசன், பாஸ்கரனை ஓங்கி அடித்ததில் அவர் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், பிறகு கொலை செய்யப்பட்ட பாஸ்கரனை பாலித்தின் கவரில் சுற்றி நள்ளிரவு நேரத்தில் தனது தோளில் சுமந்து இருசக்கர வாகனத்தில் வந்து சம்பவ இடத்தில் போட்டு விட்டு சென்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த கொலை சம்பவத்தை துப்பு துலக்கி குற்றவாளியை உடனடியாக கைது செய்த விசாரணை அதிகாரி காவல் ஆய்வாளர் சுமதி மற்றும் காவல் துறையினரை, காவல் துறை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Murder, Murder case, Tamilnadu