சென்னையில் முன்னறிவிப்பின்றி மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் தோண்டிய பள்ளத்தில் மருத்துவரின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சென்னை அடையார் கஸ்தூரிபா நகர் 3வது தெருவில் சிட்டி டவர் என்ற அடுக்குமாடி அலுவலக கட்டடம் இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தில் இயங்கி வரும் ஆலன் கேரியர் இன்ஸ்டிட்யூட் என்ற நீட் பயிற்சி மையத்தில் மருத்துவ பேராசிரியராக ஆந்திராவைச் சேர்ந்த நாகமல்லையா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை இவர் தனது ஹூண்டாய் க்ரெட்டா காரில் அலுவலகம் வந்து கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு தனது அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
பின்பு பணியை முடித்துவிட்டு 6 மணி அளவில் தனது காரை வெளியே எடுத்துள்ளார். காம்பௌண்ட் சுவர் 'கேட்டை விட்டு வெளியே வந்ததும் அங்கு மாநகராட்சி ஒப்பந்ததார்கள் தோண்டிய 5 அடி ஆழத்திற்கும் அதிகமான பள்ளத்தில் கார் நிலைதடுமாறி கீழே சரிந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தால் அந்த சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த அடையாறு போலீசார் மற்றும் அடையாறு போக்குவரத்து போலீசார் சம்பவ இடம் விரைந்து போக்குவரத்து நெரிசலை சீராக்கினார். மேலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அலுவலகத்தின் வெளியே இன்று காலை எந்தவித பள்ளமும் இல்லாத நிலையில் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் மாலை 4 மணி அளவில் அலுவலகத்தை சுற்றி எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் மழை நீர் பள்ளம் தோன்றியதே இந்த விபத்திற்கு காரணம் என தெரியவந்தது.
இதையும் படிங்க:FREE FIRE தடை பண்ணுங்க.. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை
குறிப்பாக பள்ளத்தை தோண்டி விட்டு அலுவலகம் விடும் நேரத்தில் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் யாரும் வாகன ஓட்டிகளிடம் எந்தவிதமான முன்னறிவிப்பும் செய்யாமல் இருந்ததுள்ளனர். இதனால் வழக்கம் போல பேராசிரியர் காரை ஓட்டி வெளியே வந்த போது விபத்து நடந்துள்ளது. இதனைடுத்து மாநகராட்சி ஒப்பந்தகாரர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் கார் பாதிப்படைந்த நிலையில் யாருக்கும் எந்தவிமான காயமோ அசம்பாவிதமோ ஏற்படவில்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.