சென்னையில் விதிமுறைகளை மீறி பொருத்தப்பட்டு இருந்த நம்பர் பிளேட்டுகளை அகற்றி போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.
சென்னை முழுவதும் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் விதிகள் மீறி வைக்கப்பட்டிருந்தால் அபராத சலான் ஒட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என சில தினங்களுக்கு முன் போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் சர்த்கர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அந்த அறிவிப்பின்படி
சென்னை முழுவதும் உள்ள பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் போக்குவரத்து விதிகள் மீறி வைக்கப்பட்டிருந்தால் அவற்றிற்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.குறிப்பாக போக்குவரத்து விதிகள் மீறி நம்பர் பிளேட் வைத்திருப்பவர்கள் வாகனத்தில் 500 ரூபாய்க்கு அபராதம் விதிக்கப்பட்டு போக்குவரத்து போலீசாரால் சலான்கள் ஒட்டப்பட்டன.
இந்த வகையில் அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்கள் அபராதம் செலுத்தாமலோ? அல்லது நம்பர் பிளேட்டுகளை மாற்றாமலோ மீண்டும் போக்குவரத்து போலீசாரிடம் பிடிபடும் போது அபராதத்தொகையை விட மூன்று மடங்கு கூடுதலாக ரூ.1500 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து போலீசாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அபராதம் கட்ட தவறும் பட்சத்தில் அவர்களது வாகனங்கள் அப்போதே பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இன்று கோயம்பேடு, பாண்டி பஜார், பூக்கடை, ஆலந்தூர், பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர் ரயில் நிலையம், காவல் ஆணையர் அலுவலகம் என சென்னையின் முக்கிய இடங்களில் உள்ள பார்க்கிங்கில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு அபராத சலான் ஒட்டினர். குறிப்பாக சென்னை காவல் ஆணையர் உள்ளே இருக்கக்கூடிய இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் அதிரடி சோதனை மேல் கொண்ட வேப்பேரி போக்குவரத்து போலீசார், அங்கு விதிமுறைகள் மீறி நம்பர் பிளேட் ஒட்டியிருந்த காவலர்கள் மற்றும் ஊடகத்துறையினருக்கு சொந்தமான இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
குறிப்பாக நம்பர் பிளேட்டில் போலீஸ்,பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனங்கள், நம்பர் பிளேட்டில் நடிகர்களின் புகைப்படங்கள் பதிந்த இருசக்கர வாகனங்கள் என விதிமுறைகள் மீறி நம்பர் பிளேட் வைத்திருந்த காவலர்கள் ஊடகத்துறையினரின் இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம் ஒட்டி நடவடிக்கை எடுத்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டி வேல், சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான மால்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என அரசு மற்றும் தனியார் வாகனங்கள் நிறுத்தும் பார்க்கிங் பகுதியில் அந்தப் பகுதிக்குட்பட்ட போக்குவரத்து போலீசார் சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியபடி நம்பர் பிளேட்களில் விதிமுறை மீறல் இருந்தால் அங்கேயே அபராதம் ரூ.500 விதிப்பதாகவும், ஒரு முறை அபராதம் விதிக்கப்பட்ட வாகனம் மறுமுறையும் போலீசாரிடம் பிடிபட்டால் மூன்று மடங்கு அதிகமான அபராதம் விதிக்கபடும் என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Traffic Police