சென்னை மாநகரில் கடற்கரை துாய்மையில் பெசன்ட் நகர் கடற்கரை பகுதி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
சென்னை மாநகரில் உலகின் நீளமான இரண்டாவது கடற்கரையான மெரினா உட்பட ஏழு கடற்கரை உள்ளன. சென்னையில் வசிக்கும் மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு இடங்களாக கடற்கரை பகுதிகள் அமைந்துள்ளன. மேலும், காலையில் நடைபயிற்சி போன்றவற்றிற்கும் கடற்கரை பகுதிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவில் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியரையும் கடற்கரை பகுதிகள் கவர்ந்து வருகின்றன. இவ்வளவு சிறப்புகள் கொண்ட கடற்கரை பகுதிகள், மது பாட்டில்கள், பிளாஸ்டிக், குப்பை போன்றவற்றால் அசுத்தம் நிறைந்தவையாக காணப்படுகிறது. இவற்றை தடுக்கும் வகையில், மாநகராட்சி சிறப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி, கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிஸ்க் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் மக்கும், மக்காத குப்பையை சேகரிக்கும் வகையில், இரண்டு விதமான குப்பை தொட்டிகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு வைக்காத கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஒவ்வொரு பகுதியையும், காலை மற்றும் மாலை நேரங்களில் துாய்மைப்படுத்தும் வகையில், ஒவ்வொரு வாரமும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், கடற்கரை பகுதிகள் துாய்மை அடிப்படையில், ‘ரேங்க்’ பட்டியல் தயாரிக்கப்பட்டு முதலிடம் பிடிக்கும் கடற்கரையை பராமரிக்கும் துாய்மை பணியாளர்கள், அதிகாரிகள் கவுரவிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் தொடர்ந்து இந்த வாரமும் பெசன்ட் நகர் கடற்கரை பகுதி துாய்மையில் முதலிடம் பிடித்துள்ளது. அதேநேரம், மூன்றாம் இடத்தில் இருந்த மெரினா கடற்கரை இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. திருவான்மியூர் கடற்கரை மூன்றாம் இடமும், திருவொற்றியூர் நான்காம் இடமும், பாலவாக்கம் ஐந்தாம் இடமும், அக்கரை ஆறாம் இடமும், நீலங்கரை ஏழாம் இடமும் பிடித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.