Home /News /chennai /

சென்னை ஆலந்தூரில் பெயர் பலகை விழுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, பேருந்து ஓட்டுநர் கைது!

சென்னை ஆலந்தூரில் பெயர் பலகை விழுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, பேருந்து ஓட்டுநர் கைது!

இந்த விபத்தில் ராட்சத வழிகாட்டி பெயர்பலகை அடியோடு பெயர்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
பெருங்களத்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் 70V என்ற தடம் எண் கொண்ட மாநகரப் பேருந்து நேற்று மதியம் சரியாக 3:00 மணி அளவில் கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது ஆலந்தூர் மெட்ரோ எதிரே அதிவேகமாக வந்து கொண்டிருந்த பேருந்து சாலை வளைவில் இருந்த ராட்சத வழிகாட்டி பெயர் பலகை கம்பத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ராட்சத வழிகாட்டி பெயர்பலகை அடியோடு பெயர்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

அப்போது, அங்கு பயணம் செய்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பலகை விழுந்ததால் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு நபர்களும் ராட்சத பெயர்பலையின் அடியில்  சிக்கிக்கொண்டனர். மேலும், அடுத்தடுத்து வந்த மினி வேன் மற்றும் ஆட்டோ ஆகியவையும் விபத்துக்குள்ளானது.

விபத்தில் பெயர்ந்து விழுந்த ராட்சத வழிகாட்டி பெயர் பலவகையின் கீழ் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்களை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் சிக்கி கவிழ்ந்த மினி வேன் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை பொதுமக்கள் மீட்டனர்.

தகவல் அறிந்த செயிண்ட் தாமஸ் மௌண்ட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், இந்த விபத்தால் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் சீராக்கினர். விபத்து ஏற்படுத்திய மாநகர் பேருந்து ஓட்டுநர் ஜாபர்கான்பேட்டை சேர்ந்த சண்முகசுந்தரம் மற்றும் நடத்துனர் சின்னையா ஆகியோர் தலைமறைவாகினர்.

இந்த நிலையில் செயிண்ட் தாமஸ் மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் 279 - அதிவேகமாக வாகனம் ஓட்டுவது.
337 - மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கக்கூடிய செயல் செய்தல்.
338 - மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கும் வகையில் கவனக்குறைவாக அல்லது அசட்டு தைரியத்துடன் செயல்படுவது.
உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரைத தேடி வந்தனர்.

இதனிடையே, மாலையில் ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ரகுநாத்(41) மற்றும் நடத்துநர் சின்னையா ஆகியோர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இந்த சம்பவத்தில் நடத்துநருக்கு சம்பந்தம் இல்லை என்பதால் சின்னையாவை விடுவித்து, பின் ஓட்டுநர் ரகுநாத்தை கைது செய்து காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

இந்த நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சண்முகசுந்தரம் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதனையடுத்து 304(A) - அஜாக்கிரதையாக செயல்பட்டு பிறருக்கு மரணம் ஏற்படுத்துதல், என்ற பிரிவு சேர்க்கப்பட்டு பேருந்து ஓட்டுநர் ரகுநாத்தை கைது செய்தனர். மேலும், இந்த விபத்து சம்பவம் குறித்து செயிண்ட் தாமஸ் மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்தது. இதனால் நடக்கவிருந்த பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Published by:Esakki Raja
First published:

Tags: Accident, Chennai

அடுத்த செய்தி