சென்னை மாதவரத்தில் இஸ்லாமிய பள்ளியில் அடைத்துவைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட குழந்தைகளை போலீசார் பத்திரமாக மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு அய்யர் தோட்டம் பகுதியில் மதரஸா இஸ்லாமிய பள்ளி இயங்கி வருகிறது. இதனை அதே பகுதியை சேர்ந்த நசீர் என்பவர் கொடுங்கையூரை சேர்ந்த அக்தர் (26) என்பவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன் வாடகைக்கு கொடுத்துள்ளார்.
இந்த இஸ்லாமிய பள்ளியில் பீகாரை சேர்ந்த அப்துல்லா (20) என்பவர் பிள்ளைகளுக்கு பாடம் நடத்தி வரும் ஆசிரியராக இருந்து வருகிறார். இப்பள்ளியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுமார் 10 வயது முதல் 12 வயதுள்ள ஆண் சிறுவர்கள் 12 பேர் அங்கேயே தங்கி இஸ்லாமிய பாடம் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் சிறுவர் ஹெல்ப் பிரிவுக்கு இந்த பள்ளியில் சிறுவர்களின் அபயக்குரல் கேட்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் புழல் உதவி ஆணையர் ஆதிமூலம், மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் காளிராஜ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறுவர்கள் அச்சத்துடனே இருந்தது தெரியவந்தது. பிறகு அவர்களை நெருங்கி சென்று பார்த்த போது, கை, கால், முதுகு, அந்தரங்க பகுதிகள் என அனைத்து இடங்களிலுமே அடித்த தழும்புகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க | 2வது மனைவியை 18 துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு உணவாக்கிய கொடூர கணவன் : அடுத்த பகீர்!
தொடர்ந்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், பீகாரில் இருந்து இஸ்லாமிய மார்க்க கல்வி பெற சிறுவர்களை சென்னைக்கு அழைத்து வந்து அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதாக கூறி இங்கேயே தங்கவைத்து அவர்கள் பெற்றோர்களிடம் மாத மாதம் பணம் பெறுவார்கள் என தெரியவந்தது. இப்படியாக சிறுவர்களை சேர்த்து அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது அவர்களுக்கு பாடம் புரியாமல் திகைக்கும் போது அவர்களை கம்பாலும் ஒயரினாலும் அடித்து சித்ரவதை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவர்களின் இந்த நிலைக்கு காரணமான உரிமையாளர் அக்தர், ஆசிரியர் அப்துல்லா ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுவர்கள், குணமடைந்த பிறகு பத்திரமாக ரயில் மூலம் அவர்களின் சொந்த ஊரான பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொளத்தூர் ஆணையர், புழல் உதவி ஆணையர் உள்ளிட்ட ஏராளமான போலீசார் நேரடியாக சென்று சிறுவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து பத்திரமாக ரயிலில் ஏற்றி விட்டு வழியனுப்பி வைத்தனர்.
செய்தியாளர்: அசோக்குமார், திருவொற்றியூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Attack on muslims, Chennai, Crime News, Local News