எங்களுக்கும் குண்டுவைக்கவும் தெரியும் துப்பாக்கிச் சுடத் தெரியும் என சென்னையில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் பாண்டியன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் தொட்டி அருகே துணி துவைத்த ராணுவ வீரர் உறவினருக்கும் திமுக கவுன்சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டார். இந்த நிலையில் ராணுவ வீரர் பிரபு மரணத்திற்கு நீதி கேட்டு பாஜகவினர் தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் ராணுவ வீரர் கொலை பாஜக நிர்வாகி தடா பெரியசாமி இல்லம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது போன்ற சம்பவங்களை கண்டித்து திமுக அரசுக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பேசிய தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டத்தில் பேசிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர் லெப்டினன்ட் கர்னல் பாண்டியன், இந்திய ராணுவம் உலகிலேயே இரண்டாவது பெரிய ராணுவம். இந்திய ராணுவ வீரர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள். அவர்களைச் சீண்டுவது சரியல்ல என்றும் ராணுவத்தில் பணிபுரிந்த பிரபு அவர்களை திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் படுகொலை செய்திருக்கிறார். நான் உன்னை என்ன செய்தாலும் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. எனக்கு என்னுடைய திமுக தலைவர்கள் ஆதரவாக இருப்பதால் நான் எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற நினைப்பில் செய்திருப்பதாக பாண்டியன் பேசினார்.
திமுக தைரியத்தால்தான் ராணுவ வீரரைக் கொலை செய்திருக்கிறார்கள். திமுகவினர் கொள்ளையடிப்பதிலும் கொலை செய்வதிலும் தைரியமானவர்கள். தொண்டர்களுக்கு பக்க பலமாகவும் இருப்பதாக ஓய்வுபெற்ற ராணுவ வீரர் லெப்டினன்ட் கர்னல் பாண்டியன் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. இது போன்று இனி நடக்கக் கூடாது. அப்படிச் செய்தால், மேடையில் இருக்கும் அத்தனை ராணுவ வீரர்களுக்கும் மிக நன்றாகவே குண்டுவைக்கத் தெரியும், துப்பாக்கிச் சுடத் தெரியும் என்றார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடும் என்பதால் தமிழக அரசை எச்சரிக்கிறேன் என்றும் எங்களை அந்த நிலைக்குத் தள்ளிவிட வேண்டாம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாண்டியன் இனிமேலும் இது நடந்தால் நாங்கள் செய்வோம். திமுக கவுன்சிலருக்கு அதிகபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் எனப் பேசினர்.
ஓய்வுபெற்ற ராணுவ வீரர் லெப்டினன்ட் கர்னல் பாண்டியனின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் சட்ட ஒழுங்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பேசிய முன்னாள் ராணுவ வீரர் பாண்டியனை கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.