ஹோம் /நியூஸ் /சென்னை /

சிநேகம் பவுண்டேசன் விவகாரம்.. ஒருசார்பாக செயல்படும் போலீஸ்.. நடிகை ஜெயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு..

சிநேகம் பவுண்டேசன் விவகாரம்.. ஒருசார்பாக செயல்படும் போலீஸ்.. நடிகை ஜெயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு..

சினேகன் - ஜெயலட்சுமி

சினேகன் - ஜெயலட்சுமி

தான் பாஜகவை சேர்ந்தவர் என்பதாலேயே தன் மீது பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தன் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சிநேகம் பவுண்டேசன் விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போலீசார் ஒரு சார்பாக செயல்படுவதாக நடிகை ஜெயலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார். 

  மக்கள் நீதிமய்யம் கட்சி நிர்வாகியும், சினிமா பாடலாசிரியருமான சினேகன் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை பதிவு செய்தார்.

  அதில் தான் நடத்தி வரும் சினேகம் பவுண்டேஷன் அறக்கட்டளையை தவறாக பயன்படுத்தி துணை நடிகை ஜெயலட்சுமி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்து வருவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

  சினேகன் புகாருக்கு மறுப்பு தெரிவித்த நடிகை ஜெயலட்சுமி தன் மீது சினேகன் அவதூறு பரப்புவதாக கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

  இந்த புகார்களின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் இருதரப்பையும் அழைத்து விசாரித்தனர். ஆனால் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை, அதன் பின் இருதரப்பினரும் நீதிமன்றத்தை நாடியதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் சினேகன் மற்றும் ஜெயலட்சுமி மீது திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  இந்நிலையில், காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி ஜெயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன் மீது அவதூறு பரப்பிய சினேகன் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் கடந்த மாதம் 20ம் தேதி உத்தரவு பிறப்பித்தும், தற்போது வரை திருமங்கலம் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

  நீதிமன்ற உத்தரவோடு தான் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்ய போலீசார் தயக்கம் காட்டி வருவதாகவும் கூறியுள்ளார். அதேநேரம் சினேகன் தொடுத்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதாக பரவிய செய்தியும் பொய் என மறுத்துள்ளார்.

  நீதிமன்றம் அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பதை தன் வழக்கறிஞர் மூலமாக கேட்டு தெரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். தான் பாஜகவை சேர்ந்தவர் என்பதாலேயே தன் மீது பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தன் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

  இதையும் வாசிக்க: காதலி கொடுத்த ஜூஸை குடித்த கல்லூரி மாணவன் உயிரிழப்பு... கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம். 

  இதுகுறித்து திருமங்கலம் காவல்நிலைய போலீசாரிடம் விசாரித்த போது, இருதரப்பு மீதும் நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பதாக திட்டவட்டமாகக் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் இருதரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வரும் நிலையில், போலீசாரின் தெளிவான அறிக்கையே உண்மையைத் தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: BJP, Tamilnadu police