முகப்பு /செய்தி /சென்னை / காணாமல் போகும் முதியவர்களை கண்டறிய வளையல் திட்டம்.. சென்னை காவல்துறையின் அசத்தல் திட்டம்!

காணாமல் போகும் முதியவர்களை கண்டறிய வளையல் திட்டம்.. சென்னை காவல்துறையின் அசத்தல் திட்டம்!

மூதாட்டி மீட்பு

மூதாட்டி மீட்பு

Chennai Bangles | வீட்டிலிருந்து மாயமான மூதாட்டியை 2 மணி நேரத்தில் கண்டுபிடித்து கொடுத்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai | Chennai [Madras]

சென்னையில் காணாமல் போன 77 வயது மூதாட்டியை 2 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார், இனிவரும் காலங்களில் முதியவர்கள் காணாமல் போகாமல் இருக்க சூப்பர் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ராஜேஸ்வரி ( வயது 77) என்பவர் கடந்த 28-ம் தேதி மாலை 3 மணியளவில் வீட்டிலிருந்து திடீரென மாயமாகியுள்ளதால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து சுற்று புறங்களில் தேடியவர்கள் ராஜேஸ்வரி கிடைக்கவில்லை என மனமுடைந்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்த அவர்கள், வயது மூப்பின் காரணமாக ராஜேஸ்வரிக்கு ஞாபக மறதி குறைபாடு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜேஸ்வரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக சென்னையில் உள்ள அனைத்து காவல்நிலைய வாட்ஸ் அப் குரூப்பிலும் ராஜேஸ்வரியின் புகைப்படத்தை அனுப்பி விட்டு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், புகைப்படத்தில் இருந்த மூதாட்டியை வண்ணாரப்பேட்டை போலீசார் ஒருவர் தண்டையார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே இரவு 11 மணியளவில் பார்த்துள்ளார்.

Also Read: பச்சிளம் குழந்தையை கைப்பையில் சுற்றி சாலையில் வீசிய கொடூரம்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்

இதனை தொடர்ந்து மூதாட்டி ராஜேஸ்வரி என்பதை உறுதி செய்த அவர், உடனடியாக அரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். அரும்பாக்கம் போலீசார், மூதாட்டியின் குடும்பத்தினருடன் நேரில் சென்று அவரை மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து மூதாட்டியிடம் எப்படி வந்தீர்கள் என விசாரணை செய்ததில், அவரால் பதில் தெரிவிக்க முடியவில்லை.

வயது முதிர்வால் ஏற்படும் ஞாபக மறதியால் அடிக்கடி முதியவர்கள் காணாமல் போகின்றதை உணர்ந்த உதவி ஆய்வாளர் பிரகாஷ், ராஜேஸ்வரிக்கு 400 ரூபாயில் வளையல்கள் வாங்கி கொடுத்து அதில், குடும்பத்தாரின் தொலைப்பேசி எண்ணை பொறித்து கொடுத்திருக்கிறார். இதன் மூலம் அவர் எளிதாக மீட்கப்படுவார் என்ற எண்ணத்தில் இதனை செய்துள்ளார்.

மூதாட்டியை 2 மணி நேரத்தில் கண்டுபிடித்ததோடு, இனிமேல் காணாமல் போகாமல் இருக்க வளையல் திட்டத்தை அறிமுகப்படுத்திய காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து பேசிய அரும்பாக்கம் போலீஸார், இந்த பகுதியில் உள்ள வயதானவர்கள் பட்டியலை எடுத்து வருகிறோம். சாலையில் சுற்றி வருபவர்களுக்கு குடும்பத்தினர் போன் நம்பர் பதிந்த வளையல்களை கொடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

First published:

Tags: Chennai, Local News, Tamil News