முகப்பு /செய்தி /சென்னை / காட்டிக்கொடுத்த சாமி டாலர்.. அசாம் மலைப்பகுதியில் சென்னை இளம்பெண் சடலம்.. விசாரணையில் வெளியான ஷாக் தகவல்!

காட்டிக்கொடுத்த சாமி டாலர்.. அசாம் மலைப்பகுதியில் சென்னை இளம்பெண் சடலம்.. விசாரணையில் வெளியான ஷாக் தகவல்!

கொலையான பெண்

கொலையான பெண்

Crime News : கள்ளக்காதல் விவகாரத்தில் சென்னை இளம்பெண்ணை கடத்தி அசாமில் கொலை செய்த ராணுவ லெப்டினண்ட் கர்னல் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

அசாம் மாநிலம் காம்ரூப் மலைப்பகுதியில் கடந்த 15ம் தேதி பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருப்பதை காம்ரூப் மாவட்ட போலீசார் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் இளம்பெண் பற்றிய எந்த விவரங்களும் போலீசாருக்கு துப்பு கிடைக்கவில்லை. பின்னர், இளம்பெண் கழுத்தில் அணிந்திருந்த சாமி டாலரை கைப்பற்றிய போலீசார் அதன் மூலமாக விசாரணையை தொடங்கினர். அதில் இளம் பெண் கழுத்தில் அணிந்திருந்த சாமி டாலரானது கோயம்புத்தூர் பகுதியில் உள்ள பைரவர் கோவிலில் வழங்கப்படும் டாலர் என போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து, அந்த கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு டாலர் வாங்கிய நபர்கள் குறித்த தகவலை அசாம் போலீசார் வாங்கியுள்ளனர். மேலும், சில சிசிடிவி காட்சிகளையும் அசாம் போலீசார் சேகரித்தனர். அதன் அடிப்படையில் கோவிலில் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து டாலர் வாங்கிய நபர்களின் வீட்டுக்கு அசாம் போலீசார் செல்போனில் பேசியுள்ளனர். அந்த வகையில் சென்னையை சேர்ந்த வயதான தம்பதிகளுக்கு கால் செய்துள்ளனர்.

அப்போது வயதான தம்பதிகள் தங்களின் மகள் வாரணாசிக்கு செல்வதாக கூறியதாகவும், மேலும், அவருடன் 4 வயது கைக்குழந்தையுடன் சென்றதாகவும் தெரிவித்தனர். பின்னர் புகைப்படத்தை வாங்கி ஒப்பிட்டு பார்த்தபோது கொலை செய்யப்பட்ட பெண் சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த வந்தனாஸ்ரீ (36) என்பது போலீசருக்கு தெரியவந்துள்ளது. வந்தனா ஸ்ரீயின் பெற்றோரிடம் வந்தனா ஸ்ரீயின் செல்போன் நம்பரை வாங்கி கால் ட்ரேஸ் செய்தபோது ராணுவ லெப்டினண்ட் கர்னல் ஒருவர் தொடர்ச்சியாக கால் செய்து வந்ததும், கொலை செய்யப்படுவதற்கு முன்பாக இருவரின் செல்போன் நம்பர்களும் சில நாட்கள் ஒரே சிக்னலில் பதிவானதும் தெரியவந்தது.

இதனையடுத்து ராணுவ லெப்டினண்ட் கர்னல் அம்ரேந்தர் சிங் வாலியா என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் தொடர் விசாரணையில் ராணுவ லெப்டிணண்ட் கார்னல் அமரேந்தர் சிங் வாலியா, சென்னையைச் சேர்ந்த இளம் பெண் வந்தனா ஸ்ரீயை கொலை செய்து பிளாஸ்டிக் கவரில் கட்டி அடர்வனப் பகுதியில் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. மேலும், சென்னை அடையாறு பகுதி ஜீவரத்தினம் நகர் முதல் தெருவில் உள்ள ராகமாலிகா அடுக்குமாடி குடியிருப்பில் தனது பெற்றோருடன் வசித்து வந்த வந்தனா ஸ்ரீ, லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

பின்னர் இருவரும் பிரிந்துள்ளனர். லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நபரிடம் பணம் கேட்டு சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதனிடையே, ஆன்லைன் மூலமாக பழக்கமான ராணுவ லெப்டினண்ட் கர்னல் அமரேந்தர் சிங் வாலியா என்பவருடன் நட்பு ஏற்பட்டு பின் அவ்வப்போது வந்தனா ஸ்ரீ அசாம் சென்று ராணுவ லெப்டினண்ட் கர்னல் அம்ரேந்தர் சிங் வாலியாவை சந்தித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், வாரணாசியில் கோவிலுக்கு செல்வதாக கூறி கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி வந்தனாஸ்ரீ தனது 4 வயது கைக்குழுந்தையுடன் அசாம் சென்று தலைநகர் கவுகாத்தியில் ராணுவ லெப்டினண்ட் கர்னல் அமரேந்தர் சிங் வாலியாவுடன் சொகுசு விடுதியில் அறை எடுத்து ஒன்றாக தங்கி வந்ததும் தெரியவந்தது. கடந்த பிப்ரவரி 14ம் தேதி வந்தனா ஸ்ரீக்கும் இராணுவ லெப்டினெண்ட் கர்னல் அம்ரேந்தர் சிங் வாலியா இருவருக்கும் இடையே திருமணம் குறித்து பேச்சு ஏற்பட்டு இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்போது திடீரென அவர்களுக்கு இடை ஏற்பட்ட தகராறில் அம்ரேந்தர் சிங் வாலியா தன் கையில் அணிந்திருந்த காப்பால் வந்தனா ஸ்ரீ கழுத்தில் ஓங்கி குத்தியுள்ளார். அதில் அவர் கழுத்து எலும்பு உடைபட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது தெரியவந்தது. பின்னர், கொலையை மறைப்பதற்காக தனது வாகனத்தில் வந்தனா ஸ்ரீயின் உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள கம்ரூப் மாவட்ட அடர் வனப்பகுதியில் உடலை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றதும் கம்ரூப் மாவட்ட போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், வந்தனா ஸ்ரீயை கொலை செய்துவிட்டு அவரது 4 வயது கைக்குழந்தையை காரில் அழைத்துச் சென்று கொல்கத்தா ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றதும், அங்குள்ள குழந்தைகள் நல அமைப்புகள் அந்த குழந்தையை மீட்டு காப்பகத்தில் பத்திரமாக சேர்த்ததும் தெரியவந்தது. வந்தனா ஸ்ரீ கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த அவரின் பெற்றோர் நேற்று முன்தினம் அசாமுக்கு சென்று அங்கேயே வந்தனா ஸ்ரீ உடலை அடக்கம் செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, கொல்கத்தா ரயில் நிலையத்தில் ராணுவ அதிகாரி அம்ரேந்தர் சிங் வாலியாவால் நிர்கதியாக விடப்பட்ட 4 வயது குழந்தையை மீட்பதற்காக வந்தனா ஸ்ரீயின் பெற்றோர் கொல்கத்தா சென்றுள்ளனர். கள்ளக்காதல் விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கொலை செய்துவிட்டு ராணுவ உயர் அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Chennai, Crime News, Local News