வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியை (Anti Rabies Vaccine) முற்றிலும் இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் செல்ல பிராணிகளுக்கு சிகிச்சை வழங்க நான்கு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கான ஆர்வம் பொது மக்களிடம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டு வருகிறது. பொதுவாக பாதுகாப்பிற்காகவும், மண மகிழ்ச்சிக்காகவும் நாய், பூனை, பறவை இனங்கள் ஆகியவை அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
திரு வி க நகர், நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை மீனம்பாக்கம் உள்ளிட்ட நான்கு மையங்களில் செல்லப்பிராணிகளுக்கு பொதுவாக ஏற்படும் அனைத்து வகை நோய்களுக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்படுவதுடன், உடல்நலக் குறைவு ஏற்படாத வகையில் தடுக்க கால்நடை உதவி மருத்துவர்களால் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021-2022 நிதி ஆண்டில் இம்மையங்களில் 32,790 எண்ணிக்கையிலான செல்லப்பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
Also Read: தமிழ்நாட்டில் 6-ம் தேதிவரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அலெர்ட்!
மேலும், வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை (Rabies free Chennai) என்ற இலக்கினை அடையும் பொருட்டு இம்மையங்களில் அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி (Anti Rabies Vaccine) முற்றிலும் இலவசமாக செலுத்தப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி விதிகளின்படி செல்லப்பிராணிகள் வளர்க்கும் உரிமையாளர்கள் அதற்கான உரிமம் (Pet Licence) பெற்றிருக்க வேண்டும்.
இதற்கென இம்மையங்களில் - செல்லப்பிராணிகளுக்கான உரிமம் ரூ.50 கட்டணத்தில் வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கும் வகையில் வழங்கப்படுகின்றது. தினசரி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை (ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர்த்து) இயங்கும் இந்த கால்நடை மருத்துவ சிகிச்சை மையங்களின் சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai corporation, Dog