அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ. 24.50 கோடி மதிப்பிலான சான்றிதழ்கள் வீணாகியுள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கணக்கு தணிக்கை அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறை அலுவலராக செயல்பட்ட உமா முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரது காலத்தில் மாணவர்களுக்கான சான்றிதழ்களை டிஜிட்டல் மயம் ஆக்குவதற்கு தகுதியற்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தங்களை அளித்ததன் மூலம் 11 கோடியே 41 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டிய மாணவர்களின் சான்றிதழ்களின் எண்ணிக்கை 7,33,720 ஆனால் 20,92,035 சான்றிதழ்கள் டிஜிட்டல் மயம் ஆக்கப்பட்டதாக போலியாக கணக்கு காட்டப்பட்டு தனியார் நிறுவனத்திற்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் தரச் சான்றிதழ், தற்காலிகச் சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ், பட்டயச் சான்றிதழ் ஆகியவற்றை அச்சிடுவதற்காக வாங்கப்பட்ட வெற்று சான்றிதழ்களிலும் முறைகேடுகள் நடந்திருப்பதை கணக்கு தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு தேவைப்படும் 17,15,441 சான்றிதழ்களுக்கு பதிலாக 1,63,30,000 வெற்று சான்றிதழ்கள் 57 கோடி ரூபாய்க்கு அச்சிடப்பட்டுள்ளது.
அதில் செப்டம்பர் 2021 வரை 50 சதவீத சான்றிதழ்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது சான்றிதழ்களின் வடிவத்தை மாற்றியதால் 24.50 கோடி ரூபாய் மதிப்புள்ள வெற்று சான்றிதழ்களை தற்போது பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கணக்குத் தணிக்கை துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவைக்கு ஏற்ப வெற்று சான்றிதழ்களை அச்சிட்டிருந்தால் இந்த பெரும் இழப்பினை தவிர்த்திருக்க முடியும் என்றும் கணக்கு தணிக்கை துறையின் அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த வகையில் சான்றிதழ்களை டிஜிட்டல் மயம் ஆக்குவதில் நடைபெற்ற முறைகேடு மற்றும் தேவைக்கு அதிகமான வெற்று சான்றிதழ்களை முறைகேடாக வாங்கியதால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 35 கோடியே 90 லட்சம் ரூபாய் ஒட்டுமொத்தமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.