ஹோம் /நியூஸ் /சென்னை /

Deepavali: ஆபத்தான நிலையில் சென்னை? அச்சுறுத்தும் காற்று மாசு! - மாசு கட்டுப்பாடு வாரியம் அலெர்ட்!

Deepavali: ஆபத்தான நிலையில் சென்னை? அச்சுறுத்தும் காற்று மாசு! - மாசு கட்டுப்பாடு வாரியம் அலெர்ட்!

காற்று மாசு

காற்று மாசு

Chennai | தீபாவளி பண்டிகையையொட்டி தீபாவளியன்று சென்னையில் காற்று மாசுபாடு அபாயகரமான அளவினை எட்டியதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai, India

    சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி காற்றின் மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் பெரும்பாலான பகுதிகளில் பட்டாசுகள் வெடித்ததால் சென்னை முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.

    இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,” இந்திய உச்சநீதிமன்றம் ஆணையின் படி மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள்/ மாசு கட்டுப்பாடு குழுமங்கள் முக்கியமான நகரங்களில் குறுகிய கால கண்காணிப்பாக அதாவது 14 நாட்களுக்கு (தீபாவளிக்கு 7 நாட்களுக்கு முன்பாகவும் தீபாவளிக்கு 7 நாட்களுக்கு பின்பாகவும்) முக்கிய காற்று மாசு காரணிகளின் அளவுகளை கண்காணிக்க மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது.

    இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் (2022) தீபாவளி பண்டிகை அன்று காலை 06.00 முதல் 07.00 மணி வரையிலும், இரவு 07.00 முதல் 08.00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவித்தது.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசுபாட்டுத் தாக்கத்தை கண்டறிய சுற்றுப்புற காற்றின் தர ஆய்வையும் ஒலி மாசு அளவையும் பெருநகர சென்னை மாநகரத்தின் பெசன்ட் நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சௌக்கார்பேட்டை, வளசரவாக்கம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய ஏழு இடங்களில் மேற்கொண்டது.

    உச்சநீதிமன்ற ஆணையின் அடிப்படையில் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டு வரைமுறைகளின் படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 14 நாட்களுக்கு (அதாவது தீபாவளிக்கு 7 நாட்களுக்கு முன்பாகவும் தீபாவளி அன்றும் தீபாவளிக்கு 7 நாட்களுக்கு பின்பாகவும்) காற்று மாசு காரணிகளின் அளவுகளை கண்காணித்து வருகிறது.  மேலும் ஒலி மாசுபாட்டின் அளவு தீபாவளிக்கு முன் (அதாவது) 18.10.2022 மற்றும் தீபாவளி பண்டிகையன்று 24.10.2022 மேற்கொள்ளப்பட்டது.

    பெருநகர சென்னை மாநகரத்தின் 3 ஆண்டுகளின் காற்றின் தரம் மற்றும் ஒலி அளவு ஆய்வு பற்றிய அறிக்கை அட்டவணை 1 மற்றும் 2-ல் இணைக்கப்பட்டுள்ளது.

    அட்டவணை 1 : சுற்றுப்புற காற்றுத்தர ஆய்வறிக்கை மற்றும் காற்றுத்தரகுறீயீடு

    அட்டவணை 2: ஒலி மாசுபாட்டு அளவின் ஆய்வறிக்கை

    தீபாவளி பண்டிகைக்கு முன் அதாவது 18.10.2022 அன்று குறைந்த அளவாக ஒலி மாசு பெசன்ட் நகரில் 54.84 dB(A)ம், அதிக அளவாக ஒலி மாசு வளசரவாக்கத்தில் 65.5 dB(A)ம் ஆக கண்டறியப்பட்டது, மேலும் தீபாவளி அன்று (அதாவது 24.10.2022) குறைந்த அளவாக ஒலி மாசு பெசன்ட் நகரில் 66dB(A)ம், அதிகபட்ச அளவாக ஒலி மாசு திருவொற்றியூரில் 79.7 dB(A)ம் கண்டறியப்பட்டது. மேற்கூறிய கண்டறியப்பட்ட ஒலி மாசு அளவுகள் தீபாவளி அன்று வரையறுக்கப்பட்ட தேசிய ஒலிமாசுபாட்டின் அளவுகளை விட அதிக அளவாக உள்ளது என கண்டறியப்பட்டது. (பகல் நேரங்களில் 65.0 dB(A), இரவு நேரங்களில் 55.0 dB(A).

    தீபாவளி நாளான 24.10.2022 அன்று, காற்றுத்தர குறியீட்டு அளவு காலை 6.00 மணி முதல் மறுநாள் 25.10.2022 காலை 6.00 மணி வரை, மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி 345 லிருந்து  786 வரை (மிக மோசமான அளவுகள்) என கண்டறியப்பட்டது. (குறைந்த அளவாக பெசன்ட் நகரிலும் (345) அதிக அளவாக சௌக்கார்பேட்டையிலும் (786) கண்டிறியப்பட்டது).

    இதற்கு முக்கிய காரணிகளாக, பொதுமக்கள் பெறுமளவில் பட்டாசுகளை வெடித்தும் வாண வெடிகளை பெரும் அளவுகளில் வெடித்ததினாலும் மேலும் காற்றில் காணப்பட்ட அதிகமான ஈரத்தன்மையும் மற்றும்  காற்றின்  மிகக் குறைந்த வேகமும் ஆகும். மேற்கூறிய வானிலை அமைப்பு, பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் புகை வான்வெளியில் விரவுதற்கு ஏதுவான சூழ்நிலை அல்ல. இதுவே, சென்னை மாநகரத்தின் காற்றுத்தர குறியீட்டு அளவு 2022 ஆம் ஆண்டின் தீபாவளி அன்று அதிகமானதற்குக் காரணம் ஆகும்.

    இதையும் படிங்க: தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததில் சென்னையில் மட்டும் 211 மெட்ரிக் டன் குப்பை அகற்றம்

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியாளர்கள், மாநகராட்சி ஆணையாளர்கள், காவல்துறை, பள்ளி, கல்லூரி மாணவர்கள், செய்தி மற்றும் ஊடகங்கள் மூலமாக பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் தாக்கத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டது. தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் மக்களிடம் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை கையாளும் படியும், பட்டாசுகளை மருத்துவமனை, வழிபாட்டுதளங்கள், எளிதில் தீ பற்றக்கூடிய இடங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் வெடிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியது.

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Air pollution, Chennai, Deepavali, Diwali festival, Pollution, Pollution contorl board