ஹோம் /நியூஸ் /சென்னை /

போலீஸ் எனக்கூறி மூதாட்டிகளிடம் கைவரிசை காட்டி வந்த ஈரானி கும்பல்: 200 சிசிடிவி கேமரா... 3 மாத தேடுதலுக்கு பின் ஒருவர் கைது- காவல்துறை எச்சரிக்கை

போலீஸ் எனக்கூறி மூதாட்டிகளிடம் கைவரிசை காட்டி வந்த ஈரானி கும்பல்: 200 சிசிடிவி கேமரா... 3 மாத தேடுதலுக்கு பின் ஒருவர் கைது- காவல்துறை எச்சரிக்கை

ஈரானிய கொள்ளை கும்பலில் ஒருவன் கைது

ஈரானிய கொள்ளை கும்பலில் ஒருவன் கைது

Chennai | 200 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஈரானி கும்பலைச் சேர்ந்த குற்றவாளியை தட்டிய தூக்கிய அடையாறு போலீஸ்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை அடையார் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் ஸ்ரீ லதா(68). இவர் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி சாஸ்திரி நகர் மெயின் ரோடு சந்திப்பு அருகே நடந்து வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மூன்று நபர்கள் மூதாட்டி ஸ்ரீ லதாவிடம், போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டு, இந்த பகுதியில் கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும், உடனடியாக தங்க நகைகளை கழற்றி பாதுகாப்பாக பைக்குள் வைக்குமாறு அந்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைக் கேட்டு அருகில் இருந்த மற்றொரு நபர் தனது நகைகளை கழற்றி பைக்குள் வைத்ததை பார்த்த மூதாட்டி தனது 8 சவரன் தாலி செயின் மற்றும் தங்க வளையல்களை கழட்டி உள்ளார். பின்னர் மூதாட்டிக்கு அந்த நபர்கள் உதவுவது போல நடித்து கவனத்தை திசை திருப்பி  தங்க நகைகளை கொள்ளை அடித்து விட்டு, வெறும் பேப்பரை மட்டும் சுற்றி மூதாட்டி பைக்குள் வைத்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.

சிறிது தூரம் சென்ற மூதாட்டி பையை திறந்து பார்த்தபோது அதில் வெறும் பேப்பர் மட்டும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

குறிப்பாக, அந்த நபர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த எண்கள் போலியானது என்பது தெரிய வந்தது. இதனையடுத்து காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை நபர்களை பின் தொடர்ந்தனர்.

ஆந்திர மாநிலம் வரை சென்று கொள்ளையர்கள் மறைந்துள்ளனர். போலீசாரின் தொடர் விசாரணையில் கொள்ளை நபர்கள் ஆந்திராவில் இருசக்கர வாகனத்தை விட்டு காரில் தப்பி செல்வது தெரியவந்தது. சுமார் 200க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த தனிப்படை போலீசார், மூன்று மாதங்களாக தேடி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஆந்திரா மாநிலம் பில்லேரு பகுதியைச் சேர்ந்த இம்தியாஸ்(30) என்பவரை கைது செய்தனர்.

கைது செய்த இம்தியாஸிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. மூதாட்டிகளை மட்டுமே குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டு வந்த இவர்கள் ஈரானி கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் போன்ற மொழிகளை சரளமாக பேச கற்றுக்கொண்டு தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, பெங்களூரு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு குழுக்களாக சென்று மூதாட்டிகளை மட்டுமே குறி வைத்து இதுபோன்ற பாணியில் கொள்ளை அடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேபோலத்தான் ஈரானிய கொள்ளை கும்பலின் தலைவனான பாகர் என்பவருடன் இந்தியாஸ் உட்பட 5 நபர்கள் சென்னைக்கு போலீஸ் போல டிப்டாப்பாக வந்து மூதாட்டியிடம் கைவரிசை காட்டி இருப்பதும் தெரியவந்தது. கொள்ளையடித்த இவர்கள் ஆந்திரா மாநில எல்லை வரை இருசக்கர வாகனத்தில் சென்று பின்னர் கார்களில் மாறி தப்பித்துச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் சமீபத்தில் சென்னையில் சாஸ்திரி நகர், ஆவடி, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, சென்னையை தவிர்த்து கோவில்பட்டி, திண்டுக்கல், மதுரை, நெல்லை போன்ற மாவட்டங்களிலும் மூதாட்டிகளிடம் கைவரிசை காட்டி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் பில்லூர், குண்டக்கல் ஆகிய பகுதிகளில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இது போன்ற கொள்ளையில் ஈடுபடுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எந்த மாநிலத்திற்கு செல்கிறார்களோ அந்த மாநிலத்தின் நம்பர் பிளேட்டுகளை போலியாக தயாரித்து அதை பொருத்திக்கொண்டு இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் சென்று கைவரிசை காட்டிவிட்டு திரும்பி வருவது அவர்களின் ஸ்டைல்.

இந்த ஈரானி கொள்ளையர்கள் ஒரு நாளைக்கு சுமார் பத்துக்கும் மேற்பட்ட சவரனை மூதாட்டியிடம் கைவரிசை காட்டிவிட்டு, அதை சொந்த ஊருக்கு எடுத்து சென்று விற்று, ஆளுக்கு 5000 முதல் 10,000 வரை பிரித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.

சரளமாக தமிழ்பேசுவதால் யாருக்கும் சந்தேகம் வராது என்றும் , திண்டுகல் மாவட்டத்தில் அவர்கள் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கி கைவரிசை காட்டியுள்ளதாவும், அது பற்றி மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளதாக தெரிவித்த போலீசார் கைது செய்யப்பட்ட இம்தியாஸை  சிறையில் அடைத்தனர். இந்த கொள்ளை கும்பலை சேர்ந்த மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் அம்பிவெளி, கர்நாடக மாநிலம் பிதர் ஆகிய இடங்களில் வசிக்கும் ஈரானி கொள்ளையர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்குள் வந்து அடிக்கடி மூதாட்டியை குறிவைத்து கொலை நடக்கிறது, கலவரம் நடக்கிறது நகைகளை கழட்டி வைக்குமாறு கூறி கவனத்தை திசைதிருப்பி கைவரிசை காட்டி விட்டு விமானத்தில் தங்கள் சொந்த மாநிலத்திற்கு தப்பி சென்று வந்தனர்.

தமிழக போலீசாரின் தொடர் கைது நடவடிக்கைகளால் சமீப காலமாக ஈரானி கொள்ளையர்கள் தமிழகத்திற்குள் வராமல் இருந்தனர். ஆனால், தற்போது ஆந்திராவை சேர்ந்த ஈரானி கொள்ளையர்கள் தமிழகத்திற்குள் நுழைந்து கைவரிசை காட்ட தொடங்கி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை கழற்றி பைக்குள் வைக்குமாறு  எந்த ஒரு போலீசாரும் சொல்வது கிடையாது எனவும் கலவரம் நடக்கிறது, கொலை நடக்கிறது தங்க நகைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிக்கும் கும்பலிடம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Also see...கல்லூரி மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த இளைஞர் கைது

மேலும் இது போன்ற சந்தேக நபர்கள் பற்றி தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனே காவல் உதவி செயலி அல்லது 100, 112 என்ற அவசர அழைப்பு எண்களை அழைத்து தகவல் தெரிவிக்கலாம் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிறப்பாக பணியாற்றி குற்றவாளியை பிடித்த அடையாறு காவல் உதவி ஆணையர் தனிப்படை போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai, Crime News