சென்னை அயனாவரம் கே.கே.நகர் 8-வது தெருவில் வழக்கறிஞர் ஸ்ரீதர் என்பவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 10-கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இவரது வீட்டிலிருந்து ஒரு ஆடு காணாமல் போனது. யார் திருடியது எனத் தெரியாமல் வழக்கறிஞர் குழம்பிய நிலையில், சில தினங்களில் மீண்டும் ஒரு ஆடு காணாமல் போனது. அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் ஸ்ரீதர் தனது வீட்டில் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்களை பொருத்தினார்.
இதையடுத்து அதற்கு அடுத்த மாதம் மீண்டும் அவரது வீட்டில் இருந்து இரண்டு ஆடுகள் காணாமல் போனது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதிகாலை வேளையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஆடுகளை திருடி செல்வது தெரியவந்தது. சிசிடிவி ஆதாரங்களுடன் அயனாவரம் காவல் நிலையத்தில் ஸ்ரீதர் கடந்த ஆண்டு புகார் கொடுத்தார். ஆனால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தி வந்துள்ளனர்.
இதனையடுத்து வழக்கறிஞர் ஸ்ரீதரே குற்றவாளியை பிடிக்க நேரடியாக களத்தில் இறங்கினார். கடந்த ஒரு வருடமாக மர்ம நபரை தேடி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு வழக்கறிஞர் சென்றபோது, அங்கு ஆடு திருடனும் தற்செயலாக வந்துள்ளார். காத்திருந்து திருடனை பின் தொடர்ந்த வழக்கறிஞர், கொரட்டூர் வரை பின் தொடர்ந்து சென்று அவரது முகவரியைக் கண்டறிந்தார். திங்கள் கிழமை காலை கொரட்டூர் பகுதியில் வைத்து ஆடு திருடனை கையும் களவுமாக பிடித்த வழக்கறிஞர் ஸ்ரீதர் அயனாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதையும் படிக்க : மனைவியை கொலை செய்து உடலை பல துண்டுகளாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூர கணவர்!
போலீசார் விசாரணையில் ஆடு திருடன் ரெட் ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த 37 வயதான அக்பர் என தெரியவந்தது. 2015ம் ஆண்டிலிருந்தே அவர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருடப்பட்ட ஆடுகளை கொரட்டூர் பகுதியில் தான் பணியாற்றி வந்த மட்டன் கடை உள்ளிட்ட பல கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
நடப்பு ஆண்டில் மட்டும் 25 க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடியிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அக்பர் இதுவரை எவ்வளவு ஆடுகள் திருடியுள்ளார். எங்கெங்கு திருடியுள்ளார், இந்த ஆடு திருட்டில் யார் யார்க்கெல்லாம் தொடர்பு உள்ளது? என அயனாவரம் போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளுடன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தானே முயன்று ஆடு திருடனைப் பிடித்ததாக வழக்கறிஞர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai