முகப்பு /செய்தி /சென்னை / "அவரின் பெயரை உச்சரிக்க கூட நான் விரும்பவில்லை" - நிர்வாகிகள் கூட்டத்தில் கொந்தளித்த ஓபிஎஸ்

"அவரின் பெயரை உச்சரிக்க கூட நான் விரும்பவில்லை" - நிர்வாகிகள் கூட்டத்தில் கொந்தளித்த ஓபிஎஸ்

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

4 முக்கிய தீர்மானங்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது என ஓபிஎஸ் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்  மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் எழும்பூரில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பேசிய மனோஜ் பாண்டியன், “நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்குங்கள். இரட்டை இலை சின்னம் இல்லயே என்ன செய்ய போகிறோம் என நீங்கள் நினைக்கலாம். கண்டிப்பாக ஓ.பி.எஸ் இறுதிவரை போராடுவார் அதில் வெற்றி பெறுவார். சர்வாதிகாரத்தை எதிர்த்து வெற்றி பெறுவார். அவருக்கு நாம் தோளோடு தோள் நிற்க வேண்டும். கட்சி சட்ட விதியின்படி ஜெயலலிதா தான் நிரந்தர பொது செயலாளர் என்று முடிவு செய்தோம். அதை உறுதி செய்வோம். தென் மாவட்டங்களில் ஓ.பி.எஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் கட்சி யார் பக்கம் என தெரிந்துவிடும். மாபெரும் கூட்டத்தை கூட்டுங்கள். யாருக்கு பலம் இருக்கு என்பதை நிரூபிப்போம்” என பேசினார்.

பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், "திருச்சியில் ஒரு மாநாட்டை நடத்த வாய்ப்பு தாருங்கள். அதன் மூலமாக அந்த கும்பலை தூங்க விடாமல் செய்வோம். வரும் மார்ச் மாதம் நல்ல விடியல் தரும். அந்த விடியலில் ஓ.பி.எஸ் தலைமையில் கட்சியை மீட்டு எடுப்போம். இயக்கத்தை கொள்ளையடிக்கும் கூட்டத்தலைவனாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தான் ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணம். ஓபிஎஸ் எண்ணத்திற்கு உறுதுணையாக நாம் அனைவரும் இருக்க வேண்டும். தேர்தல் விதிப்படி இரட்டை இலை சின்னம் ஒருங்கிணைப்பாளருக்கு தான் கிடைக்கும்.

ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய ஓபிஎஸ், “அதிமுக தொண்டர்கள் இயக்கமாக தொண்டர்களுக்கான இயக்கமாக எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தை உருவாக்கினார். அதன் பின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இந்த இயக்கத்தை வழி நடத்தினார். தமிழ்நாடு அரசியலில் யாராலும் வீழ்த்த முடியாத சக்தியாக இருந்தார்கள். எம்.ஜி.ஆர் உயிர் இழக்கும் நேரத்தில் அதிமுகவில் 70 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர், அதன் பின் பல்வேறு தடங்கல்கள் இருந்தாலும் ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட ஒரு இயக்கமாக ஜெயலலிதா உருவாக்கினார்கள். இந்த இரண்டு தலைவர்களும் மக்கள் ஆட்சி தத்துவபடி நல்ல திட்டங்களை செயல்படுத்தினார்கள்.

எல்லா பிரச்சனைக்கு யார் காரணம் என்று தெரியும் அவர் பெயரை உச்சரிக்க கூட நான் விரும்பவில்லை. அதற்கான தகுதியை அவர் இழந்துவிட்டார். ஜெயலலிதா மறைவிற்கு பின் நிரந்திர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என அறிவித்து நாம் அனைவரும் உவகை கொண்டோம். அதன் பின் நடைபெற்ற சம்பவங்கள் உங்களுக்கு தெரியும்.

எம்.ஜி.ஆர் பின் பல லட்சம் தொண்டர்கள் இருந்தாலும் ஒரு சிலரை மாவட்ட செயலாளர்களை வைத்து நீக்கினார். அடிப்படை உறுப்பினர்கள் மூலம் மட்டுமே தலைமை பொறுப்பில் உள்ள நபர்களை கட்சியில் இருந்து நீக்க முடியும் தேர்வு செய்ய முடியும் என விதிகளை உருவாக்கினார். ஆனால் இன்று அந்த சட்ட விதிகளை எந்த அளவிற்கு சிதைக்க முடியுமோ அதை சிதைத்து உள்ளனர்.

அனைவரும் இணைந்து உருவாக்கப்பட்ட தீர்மானங்களை, சர்வாதீகரத்தின் உச்சமாக சென்று அந்த தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என யார் ஒப்புதலும் இல்லாமல் தெரிவித்தனர். 13 ஆண்டுகளாக பொருளாளராக இருந்த என்னை பொதுக்குழுவில் வரவு செலவு தாக்கல் செய்ய முடியாத அளவிற்கு அன்று நடந்து கொண்டனர்.

நியாயமான தீர்ப்பு மக்கள் மூலம் வரும். தர்மத்தின் பக்கம் நியாயத்தின் பக்கம் நாம் உள்ளோம். சட்ட விதிகளை பாதுகாக்க என்னுடன் உள்ள உங்களுக்கு நன்றி. இதற்கு நாங்கள் நன்றி கடன் பட்டுள்ளோம். ஒரு தொண்டனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளராக, முதலமைச்சராக உருவாக்குவோம் அதுதான் தர்மயுத்தத்தின் கொள்கை” என தெரிவித்தார்.

4 முக்கிய தீர்மானங்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. அதிமுகவை மீட்டெடுக்க தீர்மானம், அதிமுகவின் நிரந்திர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என தீர்மானம், புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய, பகுதி, பேரூராட்சி அளவில் நிர்வாகிகள் நியமனம் செய்ய தீர்மானம், முக்கியமாக எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அதிமுகவின் பொன்விழா என முப்பெரும் விழாவை மார்ச் மாதம் நடத்த தீர்மானம் ஆகியவை நிறைவேற்றப்பட்டது. மேலும் அதில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது என்று  தீர்மான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செய்தியாளர் : சுரேஷ்

First published: