அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடபட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்துவதற்கு சிபிசிஐடி காவல்துறைக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தது. அப்போது ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓ.பி.எஸ். ஆவணங்களை எடுத்து சென்றுவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்துறையில் புகார் அளித்தார்.
அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலக மோதல், கலவரம், ஆவணங்கள், சொத்துகள் சூறை தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான நான்கு வழக்குகளையும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சி.வி.சண்முகம் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அதிமுக அலுவலக கலவரம், சூறையாடப்பட்டது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய பிறகும் இதுவரை விசாரணையை தொடங்கவில்லை எனவும், குற்றச் செயல் நடந்த இடத்திற்கு வந்து பார்வையிடாதது அதிர்ச்சியளிப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், கடுமையான குற்றங்கள் இருந்தபோதிலும், விசாரணையைத் தொடங்குவதில் சிபிசிஐடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், பகல் நேரத்தில் கேமராக்களுக்கு முன்பாகவும், கதவுகளை உடைத்தும் கொள்ளையடித்த நபர்கள் மீது தெளிவான ஆதாரம் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
Also Read: வெள்ளலூர் பேருந்து நிலையம் அவசியம்.. அதே இடத்தில் வரவேண்டும் - எஸ்.பி.வேலுமணி
திருடப்பட்ட பொருட்களை மீட்பதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மேலும், தெளிவான புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் இருந்தும் குற்றச் செயல் நடந்த இடத்தை புலனாய்வுக் குழு பார்வையிடாததால், பிரதான எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும், இதனால் ஆளும் ஆட்சிக்கு நன்மை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
மேற்கொண்டு சிபிசிஐடி முறையாக விசாரணை நடத்தும்படி தகுந்து உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபி தவறினால், வேறொரு விசாரணை அமைப்புக்கு மாற்றுவது கட்டாயமாகிறது என வலியுறுத்தி உள்ளார். எனவே, அதிமுக தலைமை அலுவலம் சூறையாடபட்ட விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க சிபிசிஐடிக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் படி தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த கூடுதல் மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Admk Party, CV Shanmugam