முகப்பு /செய்தி /சென்னை / மயக்கும் குரல்.. கோடிக்கணக்கில் மோசடி.. பிடிபட்ட பிரபல நடிகையின் சகோதரி...!

மயக்கும் குரல்.. கோடிக்கணக்கில் மோசடி.. பிடிபட்ட பிரபல நடிகையின் சகோதரி...!

கைதான ஷோபா

கைதான ஷோபா

கடந்த 10 மாதங்களாக இவரை தேடி வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கேளம்பாக்கத்தில் உள்ள அவர் தங்கி இருந்த விடுதியில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

திரைப்பட நடிகை அல்போன்சாவின் சகோதரி ஷோபா வசந்த் பல ஆண்டுகளாக வளசரவாக்கத்தில் பிளாஷ் கன்சல்டேஷன் என்ற பெயரில் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலமாக சிங்கப்பூர், கனடா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இரண்டு முதல் மூன்று லட்ச ரூபாய் மாத சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்திருக்கிறார்.

இதனைப் பார்த்த பலர் இவரிடம் நேரடியாக அணுகி தங்களுடைய மகன் மற்றும் உறவினர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருமாறு  கூறி இருக்கிறார்கள். அணுகும் அனைவரிடம் தனது மயக்கும் குரலால் பேசி, வருபவர்களை எளிதில் கன்வின்ஸ் செய்து அவர்களுடைய மனதில் எளிதில் நம்பிக்கை பெற்றுவிடுவார் என இவரிடம் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

அம்பத்தூரை சேர்ந்த அஷ்ரப் அகம்மது என்பவர் தன்னுடைய மகனுக்கு, சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதற்காக மூன்றரை லட்ச ரூபாய் பணத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு வளசரவாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து பணத்தை கொடுத்து இருக்கிறார். ஆறு மாதங்களைக் கடந்தும் வேலை வாங்கி தராததால், தொடர்ந்து அது குறித்து கேட்டு வந்திருக்கிறார். பல்வேறு காரணங்கள் கூறி காலத்தை கடத்தி இருக்கிறார் ஷோபா.

இதையும் படிக்க :  மக்களே உஷார்.. செல்போன் SMS மூலம் லட்சக்கணக்கில் திருட்டு.. சிக்கிய ஆன்லைன் மோசடி கும்பல்..!

தொடர்ந்து பணத்தை கொடுத்தவர்கள் பலரும் சோபாவை அணுகவே, உடனடியாக வளசரவாக்கத்தில் இருந்து தன்னுடைய அலுவலகத்தை நொளம்பூருக்கு யாரிடம் சொல்லாமல் கொள்ளாமலே ஒரே இரவில் மாற்றி இருக்கிறார். இதனை தொடர்ந்து ஷோபாவால் பாதிக்கப்பட்ட பலரும் சேர்ந்த ஒரு வாட்ஸ் அப் குழுவை அமைத்து, அவரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இறுதியாக நொளம்பூரில் அலுவலகத்தை நடத்தி வந்ததை கண்டுபிடித்து அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது மீண்டும் பல்வேறு காரணங்களை கூறி இழுத்து அடித்திருக்கிறார்.

இறுதியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனைவருக்கும் சொன்னபடி வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்து இருக்கிறார். வேறு வழி இல்லாமல், அவர் கூறியதை நம்பி இருக்கிறார்கள். அவர் கூறியபடி மார்ச் மாதம் நொளம்பூர் அலுவலகத்திற்கு சென்று பார்த்த போது, அந்த அலுவலகத்தையும் காலி செய்துவிட்டு செல்போன்களை எல்லாம் சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவானது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் ஷோபா மீது அகம்மது அஷ்ரப், ரஜினி ராணா, சீனிவாசன் உள்ளிட்ட பலர் மோசடி புகாரை அளித்தனர். தொடர்ந்து, அவரை கடந்த 10 மாதங்களாக தேடி வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  கேளம்பாக்கத்தில்  அவர் தங்கி இருந்த விடுதியில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.

இதனை கேள்விப்பட்ட ஷோபாவால் ஏமாற்றப்பட்ட சுமார் 20 க்கும் மேற்பட்டோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தனர். தனது மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏழு லட்ச ரூபாயை ஷோபா பெற்று மோசடி செய்து விட்டதாக ரஜினி ராணா என்ற பெண் தெரிவித்துள்ளார்.

இதே போல ஆவடியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் பி.டெக் படித்த தன்னுடைய மகனுக்கு துபாயில் மூன்று லட்ச ரூபாய் மாத சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 15 லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டதாக தெரிவித்திருக்கிறார். இதுவரை பலகோடி ரூபாய் பணம் ஷோபா ஏமாற்றியுள்ளார் என்றும், இவரால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Chennai, Crime News, Job, Scam