சென்னை ஆயிரம் விளக்கு ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் மோக்கா(எ) மோகன். அவருக்கு வயது 22. இவரது நண்பர் ஷாம் (எ) அருணாச்சலம் என்பவரின் மனைவிக்கு பிறந்த நாள் என்பதால் நேற்று முன் தினம் இரவு புதுப்பேட்டை லப்பை தெருவிற்கு கேக் வெட்டும் நிகழ்ச்சிக்கு மோக்கா மோகன் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். பின்னர் பிறந்தநாள் நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்த போது, இரண்டு நபர்கள் கையில் ராடு வைத்துக்கொண்டு ஷாமை விசாரித்து சென்றதாக அங்கிருந்த நபர்கள் மோகனிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மோக்கா மோகன் அவரது நண்பர்களான சந்தோஷ், ஷாம்(எ) அருணாச்சலம், சுனில்குமார், மனோஜ் ஆகியோரை அழைத்துக்கொண்டு, ஏரியாவில் ஷாமை விசாரித்து சென்ற நபர்களைத் தேடி புதுப்பேட்டையில் உள்ள பம்பிங் ஸ்டேஷனிற்கு சென்றுள்ளனர். அங்கு ஷாமை தேடி வந்த 8 பேர் கொண்ட கும்பல் இருந்ததால், இரண்டு கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
எதிர் கோஷ்டி திடீரென கத்தி மற்றும் இரும்பு ராடை எடுத்ததால் மோகன் உட்பட அனைவரும் சிதறி ஓடியுள்ளனர்.
புதுப்பேட்டை அய்யாசாமி தெரு வழியாக மோகன் தப்பித்து ஓடி அங்கிருந்த வீட்டிற்குள் புகுந்து ஒளிந்ததாக தெரிகிறது. அப்போது வீட்டிலிருந்த பெண் கூச்சலிட்டதால், மோக்கா மோகான் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். இதனை அறிந்து சுற்றி வளைத்த கும்பல் மோகனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
கொலை தொடர்பாக எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஏற்கனவே மோக்கா(எ) மோகன் மீது ஆயிரம் விளக்கு காவல் நிலையம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் செயின் பறிப்பு, மொபைல் பறிப்பு, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
புதுப்பேட்டையை சேர்ந்த விக்ரம், யூடியூப்(எ) வெங்கடேசன், மோசஸ்(எ) சரண், அபு(எ) அருண், நரேஷ், வசீகரன் ஆகியோர் மோகனை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய நிலையில் தலைமறைவாக இருந்த விக்ரம், யூடியூப்(எ) வெங்கடேசன், மோசஸ், அபு, நரேஷ், வசீகரன் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் எழும்பூர் பகுதியை சேர்ந்த புறா சசி என்பவரின் நண்பர்கள் என தெரியவந்தது. புறா சசி என்பவர் செயின் பறிப்பு மற்றும் மொபைல் பறிப்பு சம்பவத்தில் திருவல்லிக்கேணி தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்பதும் தலைமறைவாக இருந்த புறா சசியை கைது செய்ய தனிப்படை போலீசாருக்கு சாம்(எ) அருணாச்சலம் தான் தகவல் அளித்துள்ளார் என புறா சசியின் நண்பர்கள் நம்பி வந்துள்ளனர்.
மேலும் புறா சசி தரப்புக்கும், சாம்(எ) அருணாச்சலம் நண்பர்களுக்கும் செயின் பறிப்பு, மொபைல் பறிப்பு சம்பவங்களில் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததும் போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் தமது நண்பரான புறா சசியை தனிப்படை போலீசாரிடம் காட்டிக் கொடுத்தது ஷாம் (எ) அருணாச்சலம் தான் என நம்பிய புறா சசியின் நண்பர்கள், ஷாம்(எ) அருணாச்சலத்தை நேற்று முன்தினம் இரவு விசாரிப்பதற்காக வந்துள்ளனர்.
இதனை அறிந்த மோக்கா மோகன் தனது நண்பரான ஷாம் (எ) அருணாச்சலம் உள்ளிட்ட சில நண்பர்களுடன் அவர்களை தேடி பம்பிங் ஸ்டேஷன் சென்ற போது இரண்டு தரப்புக்களும் அடிதடி தகராறு எழுந்துள்ளது.
முறைகேடாக பணம் வசூல் புகார்: கார்த்திக் கோபிநாத்தின் வங்கி கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்த தகராறில் மோக்கா மோகன் எதிர் தரப்பினரை தாக்க, எதிர் தரப்பினர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் இரும்பு ராடை எடுத்து தாக்குதலில் பயன்படுத்தியுள்ளனர். இதனால் மோகன், அருணாச்சலம் உள்ளிட்டோர் அங்கிருந்து தப்பி ஓட, எதிர்த்தரப்பு அனைவரையும் துரத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் மோக்கா மோகன் நண்பர்கள் அனைவரும் தப்பிவிட மோக்கா மோகன் மட்டும் புறா சசி நண்பர்களிடத்தில் மாட்டிக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த புறா சசி நண்பர்கள் அருணாசலத்தின் நண்பரான மோக்கா மோகனை கொடூரமாக கொலை செய்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து இரண்டு கத்தி மற்றும் ஒரு இரும்பு ராடு ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் குற்றவாளிகளிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் நகரத்திலிருந்து(Chennai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.