Home /News /chennai /

சென்னையில் தனியார் வங்கியில் பட்டப் பகலில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை.. ஊழியரே கைவரிசை காட்டியது அம்பலம்!!

சென்னையில் தனியார் வங்கியில் பட்டப் பகலில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை.. ஊழியரே கைவரிசை காட்டியது அம்பலம்!!

சென்னையில் தனியார் வங்கியில் பட்டப் பகலில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை..

சென்னையில் தனியார் வங்கியில் பட்டப் பகலில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை..

ரூ.15 கோடிக்கும் அதிகமான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வங்கி ஊழியர் மற்றும் அவரது நண்பர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பிரதான சாலையில் ஃபெட் பேங்க் ஃபாஸ்ட் கோல்டு லோன் என்ற தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சென்னையில் மட்டுமின்றி காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த பல நபர்கள் தங்க நகைகள் வைத்து கடன் பெற்றுள்ளனர்.

இன்று மதியம் 3 மணியளவில் இந்த வங்கிக்கு இரண்டு முகமூடி அணிந்த நபர்களும் ஒரு முகமுடி அணியாத நபர் என மூன்று நபர்கள் வங்கியில் உள்ளே வந்து ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி லாக்கரை உடைத்து கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள
தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

தகவல் அறிந்த அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், தகவல் அறிந்து வடக்கு காவல் கூடுதல் ஆணையர் அன்பு ஐ.பி.எஸ்., மேற்கு இணை ஆணையர் ராஜேஸ்வரி ஐ.பி.எஸ், அண்ணா நகர் துணை ஆணையர் விஜயகுமார் ஐ.பி.எஸ்., ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, வங்கி லாக்கரில் இருந்த சுமார் 15 கோடிக்கும் அதிகமான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக வங்கி அதிகாரிகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வங்கியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வங்கியில் தற்போது கஸ்டமர் டெவலப்பிங் மேனேஜராக பணிபுரிந்து வரும் பாடி, படபட்டம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரே இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் என்பது தெரியவந்தது.

சரியாக 3 மணி அளவில் முருகன் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் 2 இரு சக்கர வாகனங்களில் வந்துள்ளனர். பின்னர், முருகன் மட்டும் தனியாக வங்கிக்குள் சென்று வங்கி காவலாளி உட்பட வங்கி ஊழியர்கள் என மூன்று நபர்களுக்கு முன்னரே மயக்க மருந்து கலந்து வைத்திருந்த கூல்ட்ரிங்க்ஸை கொடுத்து குடிக்க வைத்துள்ளார்.

அவர்களும் முருகன் நமது நிறுவனத்தில் பணி புரியும் மேனேஜர் என்ற நம்பிக்கையில் கூல்ட்ரிங்ஸ் குடித்து மயக்கம் அடைந்துள்ளனர். இதன் பின்னர் வங்கிக்கு வெளியே இருந்த தனது நண்பர்களுக்கு கால் செய்த முருகன் இருவரையும் உள்ளே வரச்சொல்லி அழைத்துள்ளார்.

முகமுடியுடன் உள்ளே வந்த இரண்டு நபர்களும் கையில் கத்தியுடன் வங்கி ஊழியர்களை மிரட்டி உள்ளனர். பின்னர் லாக்கர் அறை சாவியை முருகன் எடுத்துக்கொண்டு லாக்கரை திறந்து தங்க நகைகள் வைத்திருந்த லாக்கர்களை உடைத்து அதிலிருந்து சுமார் ரூ.15 கோடிக்கும் அதிகமான தங்க நகைகளை தனது நண்பர்களுடன் கொள்ளையடித்துள்ளார்.

கொள்ளையடித்து முடித்தபின் மூவரும் வெளியே வந்த போது வங்கி ஊழியர்கள் மூவர் இவர்களை தடுப்பதற்காக வந்துள்ளனர். அவர்களை கத்தியை காட்டி மிரட்டி மூவரையும் லாக்கர் அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு முருகன் மற்றும் முருகனின் நண்பர்கள் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வாகன எண்ணை சென்னை காவல்துறை குழுக்களில் பதிவிட்டு வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், முருகனின் செல் நம்பர் சிக்னலை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கொள்ளையர்கள் பிடிப்பதற்காக 4 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது.

வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.15 கோடிக்கும் மேல் அதிகரிக்கலாம் என வங்கி அதிகாரிகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் பட்டப்பகலில் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஊழியரே தனது நண்பர்களுடன் வங்கிக்குள் சென்று வங்கி ஊழியர்களை கத்தியை காட்டுமிரட்டி ரூ.15 கோடிக்கும் அதிகமான தங்க நகைகளை கொள்ளை அடித் சென்ற சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Esakki Raja
First published:

Tags: Bank, Chennai, Robbery

அடுத்த செய்தி