சென்னையில் குழந்தைகள் விளையாடும் போலி பணத்தை கொண்டு தொழிலதிபர்களிடம் கோடி கணக்கில் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை அடையாறை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தொழில் பெருக்கத்திற்காக "வட்டியில்லாமல் கோடிக்கணக்கில் கடனாக பணம் கொடுக்கப்படும்" என்ற பிரபல நாளிதழில் வந்த விளம்பரத்தை" பார்த்து அதில் கொடுக்கப்பட்டுள்ள நம்பருக்கு கால் செய்ததாகவும் பின்னர் நேரில் அந்த நபரை சந்தித்து ஆவணங்களை கொடுத்ததாகவும் மேலும் அந்த நபர் தயார் ஆகிவிட்டதாக கூறி ரூ.20 லட்சம் பணம் பெற்று தன்னை ஏமாற்றி விட்டார் எனவும் அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும், அந்த நபர் தன்னிடம் தெரிவித்த அவரது பெயர் உள்ளிட்ட முகவரிகள் அனைத்தும் போலியானது எனவும் புகாரில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அடையாறு காவல் உதவி ஆணையர் தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க | மரண குழியில் இருந்து போலீசாருக்கு சென்ற போன்கால்.. சினிமாவை மிஞ்சும் ஷாக் சம்பவம்!
சிசிடிவி காட்சிகளில் தொழிலதிபரும் வட்டியில்லாமல் கோடிக்கணக்கில் பணம் தருவதாக கூறிய மர்ம நபரும் இருப்பதும் தெரியவந்தது. மேலும், மர்ம நபர் காரில் செல்லும் காட்சிகளும் கிடைக்கப்பெற்றது.
இதனையடுத்து போலீசார் தொடர் விசாரணையில் தொழிலதிபரை ஏமாற்றி பணம் பறித்தவர் கோயம்புத்தூர் அன்னூர் அடுத்த பசூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார்(43) என்பதை கண்டறிந்து அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுரேஷ் குமாரை போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர் பிரபல நாளிதழில் "வட்டியில்லாமல் கோடிக்கணக்கில் பணம் கடனாக அளிக்கப்படும்" என விளம்பரம் கொடுத்து அதன் மூலம் தொழிலதிபர்களை குறி வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
தனக்கு நிறைய தொழிலதிபர்களுடன் தொடர்பு இருப்பதாகவும், கேட்கும் கடனில் 80 சதவிகிதம் பணம் ரொக்கமாக கொடுப்பதாகவும், மேலும் இந்த பணம் தொழிலதிபர்களின் கணக்கில் வராத பணம் என்பதால் வட்டி வேண்டாம் எனவும் கூறி ஆவணங்களில் கையெழுத்து வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
சில்ட்ரன்ஸ் பேங்க்(Children's Bank) எனப்படும் குழந்தைகள் விளையாட பயன்படுத்தப்படும் விளையாட்டு பணத்தை உண்மை பணம் என நம்ப வைத்து அதன் மூலம் மோசடி செய்து வந்துள்ளார்.
இதற்காக, இவர் போலியான ரூபாய் 20 கோடி அளவுக்கு குழந்தைகள் விளையாட பயன்படுத்தப்படும் சில்ட்ரன்ஸ் பேங்க் பணத்தை மும்பையில் இருந்து ஆர்டர் செய்து தனது வீட்டில் கட்டுக்கட்டாக அடுக்கி வைத்து வந்துள்ளார்.
குறிப்பாக ஏடிஎம் மையங்களில் பணத்தை மிஷினில் நிரப்பியவுடன் அதில் கட்டப்பட்டிருக்கும் பேண்டை ஏடிஎம் ஊழியர்கள் அங்குள்ள குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்கள். அதனை பொறுக்கி வந்து விளையாட்டு பணத்தின் மேல் பொறிக்கப்பட்டிருக்கும் சில்ட்ரன்ஸ் பேங்க் என்ற வார்த்தையின் சில்ட்ரன்ஸ் என்ற வார்த்தையின் மேல் ஒட்டி அதனை பார்ப்பதற்கு ஒரிஜினல் பணம் போல் தொழிலதிபர்களிடம் காட்டி மோசடி செய்ய வலைவிரித்துள்ளார்.
மேலும், கடன் கேட்டு இவரை அணுகும் தொழிலதிபர்களிடம் உங்களுக்கான கடன் தொகை வந்துவிட்டதாகவும் தங்களை நேரில் சந்திக்க வேண்டும் எனவும் கூறி தனி இடங்களுக்கு சுரேஷ்குமார் வர செய்கிறார். பின்னர் உடல் முழுவதும் போலி தங்க நகைகளை அணிந்து கொண்டு விலை உயர்ந்த வாடகை கார்களில் நம்பர் பிளேட்டை மாற்றி தொழிலதிபர்களை சந்திக்க செல்வார் எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனிமையில் தொழிலதிபர்களை சந்திக்கும் சுரேஷ்குமார் முன்னரே ஒரிஜினல் ரூபாய் நோட்டுகள் போல மாற்றி வைத்திருக்கும் சில்ட்ரன்ஸ் பேங்க் நோட்டுகளை காட்டி ரூபாய் பத்து லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சம் வரை மாலைக்குள் அனுப்பி விட்டால் நாளை காலை தங்களது பணத்தை இதே இடத்தில் வந்து கொடுத்து விடுவதாக கூறி பின் தொழிலதிபர்களிடம் லட்சங்களில் பணத்தைக் கறந்ததும் சிம்காடுகளையும் போலி நம்பர் பிளேட்டுகளையும் தூக்கி எறிந்து விட்டு தலைமறைவாகி வந்துள்ளார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேபோல சென்னை, திருச்சி, மதுரை கோயம்புத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 50 க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களிடமிருந்து ரூபாய் 5 கோடி வரை சுரேஷ்குமார் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. மேலும், இவர் மீது கோயமுத்தூர் பீளமேடு காவல் நிலையத்தில் செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சுரேஷ்குமாரிடமிருந்து 14 செல்போன்கள், ஒரு லேப்டாப், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார் பள்ளி படிப்பையே தாண்டாதவர் என்பதை அறிந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Adayar, Cheating case, Chennai, Crime News