சென்னை திருவல்லிக்கேணி கற்பக கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவுடி ராஜா (எ) ஆட்டோ ராஜா (49). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி, கஞ்சா விற்பனை தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவ்வப்போது ஆட்டோ ஓட்டி தொழில் செய்து வந்த இவர், விக்டோரியா மருத்துவமனை சாலை-பாரதி சாலை சந்திப்பில் இவரது மனைவி நடத்தும் தள்ளு வண்டி சாப்பாடு கடையில் நின்று கொண்டிருந்த போது, முககவசம் அணிந்து வந்த மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
மனைவியின் கண்முன்னே நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஜாம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை நடந்த இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ராஜாவை கொலை செய்த குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்ததில், குற்றவாளிகள் சிலரை போலீசார் அடையாளம் கண்டனர். அவர்களின் மொபைல் நம்பரை ஆய்வு செய்தபோது, அவர்கள் அனைவரும் சென்னையை அடுத்த அச்சரம்பாக்கம் பகுதியில் ஒரே இடத்தில் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.
அங்கு சென்ற போலீசார், தலைமறைவாக இருந்த திருவல்லிக்கேணி மாடங்குப்பம் கெனால் தெருவைச் சேர்ந்த சூர்யா (25), அவரது தம்பி தேவா(23), ஜாம் பஜார் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (21), மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (எ) மதுரை அரவிந்த் (27) திருவல்லிக்கேணி மாடங்குப்பம் கெனால் தெருவை சேர்ந்த அருண் (எ) கருப்பாண்டி(25) ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (எ) சின்னா(22), திருவல்லிக்கேணி விக்டோரியா ஹாஸ்டல் சாலைப் பகுதியைச் சேர்ந்த பிரேம்(23) சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த வினோத்(22), வேளச்சேரி பவானி நகரை சேர்ந்த அருண்(23), ஜாம்பஜார் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (20), சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த வைத்தீஸ்வரன்(21) மற்றும் இரண்டு சிறுவர்கள் என மொத்தம் 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா விற்பனைப் போட்டியில் கொலை நடந்தது தெரியவந்தது. குறிப்பாக ஜாம் பஜார் பகுதியில் கஞ்சா விற்பனையில் கொடிகட்டி பறந்து வரும் பிரபல ரவுடிகளான வினோத் (எ) மாட்டாங்குப்பம் வினோத், இவரது சகோதரர் ரவுடி பாலாஜி ஆகியோரது தாய் மாமன் தான் கொலை செய்யப்பட்ட ராஜா(எ) ஆட்டோ ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
கஞ்சா விற்பனையில் திருவல்லிக்கேணி, ஜாம் பஜார், சேப்பாக்கம் பகுதிகளில் கொடிக்கட்டி பறந்து வரும் ரவுடிகளான வினோத் மற்றும் அவரது சகோதரர் பாலாஜி சிறைக்கு செல்லும் போதெல்லாம் அவர்களது தாய்மாமனான ரவுடி ஆட்டோ ராஜா ஜாமீனில் வெளியே கொண்டு வருவதும், அவர்கள் சிறையில் இருக்கும் போது அவர்களுக்கு பதிலாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதும், அவர்கள் சிறையிலிருந்து வெளிவந்ததும் தனது ஆட்டோவில் வைத்து கஞ்சா கடத்தி டெலிவரி செய்வதும் என ரவுடிகள் வினோத் மற்றும் பாலாஜிக்கு ஆட்டோ ராஜா உறுதுணையாக இருந்து வந்துள்ளார்.
இதனிடையே திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியை சேர்ந்த சிட்டி சேகர் என்பவரின் மகன்களான ரவுடி சூர்யா, மற்றும் ரவுடி தேவா ஆகியோரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால், அதே பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பி ரவுடிகளான வினோத், பாலாஜி மற்றும் இவர்களது தாய்மாமனான ரவுடி ஆட்டோ ராஜா ஆகியோர் இருப்பதால் சிட்டி சேகர் மற்றும் சிட்டி சேகரின் மகன்களான ரவுடிகள் சூர்யா, தேவா ஆகியோரின் கஞ்சா விற்பனை பாதித்ததாக தெரிகிறது. இதற்காக வினோத், பாலாஜி மற்றும் அவர்களின் தாய்மாமன் ஆகியோரை தீர்த்துக் கட்டுவதற்காக ரவுடி சகோதர்களான சூர்யா, தேவா ஆகியோர் காத்திருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் தனது தாய்மாமனான ரவுடி ஆட்டோ ராஜாவின் மனைவியுடன் கள்ள உறவில் இருந்த நபரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் ரவுடிகளான வினோத் மற்றும் பாலாஜி சிறை சென்றனர். இதனால் ஆட்டோ ராஜா மட்டும் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
ரவுடி ஆட்டோ ராஜா மட்டும் தனியாக இருப்பதை அறிந்த ரவுடி சகோதரர்களான சூர்யா, தேவா ஆகியோர் இதுதான் சமயம் என ஆட்டோ ராஜாவை கொலை செய்ய திட்டுமிட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முந்தினம் ( கடந்த 16ஆம் தேதி) மதியம் விக்டோரியா ஹாஸ்டல் சாலை, பாரதி சாலை சந்திப்பில் தனது மனைவி நடத்தி வரும் சாப்பாடு கடையில் ஆட்டோ ராஜா இருந்துள்ளார்.
அப்போது அங்கு 6 இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணிந்து வந்த ரவுடிகளான சூர்யா, அவரது சகோதரர் தேவா மற்றும் அவர்களது நண்பர்கள் என 13 நபர்கள் என ரவுடி ஆட்டோ ராஜாவை துடிக்கத் துடிக்க வெட்டி படுகொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அரும்பாக்கத்தில் கொலை :
போலீசாரின் தொடர் விசாரணையில், இதே கும்பல் அரும்பாக்கத்தில் கஞ்சா வாங்க வந்த இருவரை கத்தியால் கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு பின்னர் அங்கிருந்து ஜாம் பஜார் வந்து ரவுடி ஆட்டோ ராஜாவை கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.
குறிப்பாக ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார்( 25) மற்றும் ஸ்ரீரஞ்சன்(19) ஆகியோர் கஞ்சா வியாபாரியான சூர்யாவின் கூட்டாளியான அமர் மற்றும் தனுஷ் ஆகியோரிடம் கஞ்சா கேட்டதில் இருதரப்புக்கும் இடையே சண்டை எழுந்துள்ளது. இந்த சண்டையில் ரவுடி சூர்யா, அஜித்குமாரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஐந்து கத்திகளின் புகைப்படங்களை அனுப்பி இதில் எந்த கத்தியினால் சாக ஆசைப்படுகிறாய் என கேட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனால் இரு தரப்புக்குள்ளும் பிரச்னை பெரிதாகியுள்ளது. இதனால் சூர்யா மற்றும் அவரது நண்பர்களும் இருதரப்பும் சமாதானமாகி கொள்ளலாம் எனக்கூறி அஜித்குமார் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீ ரஞ்சன் ஆகியோரை அரும்பாக்கம் பகுதிக்கு வரவைத்துள்ளனர்.
பின்னர் ரவுடி சூர்யா, தேவா, அமர் ஆகியோர் தங்களது நண்பர்களுடன் சென்று அஜித்குமார் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீ ரஞ்சனை வாட்ஸ் அப்பில் அனுப்பிய அதே ஐந்து கத்திகளை வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அஜித்குமார் மற்றும் ஸ்ரீ ரஞ்சன் ஆகியோரை அமைந்தகரை போலீசார் மீட்டு கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதித்ததனர்.
Must Read : ஒரே நாளில் 3 பேருக்கு பாம்பு கடி.. 6 வயது சிறுவன் உயிரிழப்பு - ஆம்பூரில் சோகம்
கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் தீவிர சிகிச்சைப்பிரிவில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் தான் சூர்யா, தேவா மற்றும் அவர்களது நண்பர்கள் நேராக ஜாம் பஜார் சென்று ஆட்டோ ராஜாவை கொலை செய்ததும் ஜாம் பஜார் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 5 கத்திகள், ஒரு புல்லட் உட்பட 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் 11 நபர்களை சிறையிலும், 2 சிறார்களை அரசு கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர்.
கஞ்சா விற்பனையில் கொடிகட்டி பறக்க எதிர்தரப்பு ரவுடியை பட்டப்பகலில் 13 நபர்கள் சேர்ந்து வெட்டி படுகொலை செய்திருப்பது சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Ganja, Murder