Home /News /chennai /

குருவியிடம் போலீஸ் என கூறி ரூ. 24 லட்சம் வழிப்பறி.. சென்னையில் பலே சம்பவம்..

குருவியிடம் போலீஸ் என கூறி ரூ. 24 லட்சம் வழிப்பறி.. சென்னையில் பலே சம்பவம்..

கைதானவர்கள்

கைதானவர்கள்

Chennai | சென்னையில் வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்திவரும் கும்பலை குறிவைத்து அவர்களிடம் இருந்து தங்கத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பஷீர் அகமது. கடந்த 12 ம் தேதி 460 கிராம் தங்க நகையை, பூக்கடை பகுதியில் உள்ள என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் நகைக்கடையில் 24 லட்ச ரூபாய்க்கு விற்றுள்ளார். தங்கநகையை விற்றவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் திருவல்லிக்கேணி பகுதி வழியாக சென்றுள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது மற்றொரு இரு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் பஷீரை வழிமறித்துள்ளனர். வந்தவர்கள் தங்களை போலீசார் என்று அறிமுகம் செய்துகொண்டு பஷீர் வாகனத்தை சோதனை செய்துள்ளனர்.

அப்போது அவர் பையில் இருந்து ரூ 24 லட்சத்தை எடுத்தவர்கள் அதற்கு கணக்கு கேட்டுள்ளனர். பஷீர் அதற்கு முறையாக பதில் சொல்லாததால் ரூ 24 லட்சத்தையும் எடுத்துக்கொண்ட கும்பல் அருகில் இருக்கும் காவல் நிலையம் வந்து முறையான கணக்கை காண்பித்து பணத்தை பெற்றுச்செல்ல சொல்லிவிட்டு பணத்தை எடுத்து சென்றுள்ளனர்.

பஷீரும் அருகில் இருக்கும் காவல் நிலையம் சென்று விசாரித்துள்ளார். ஆனால் காவலர்கள் யாரும் சோதனைக்கு வரவில்லை என்று காவல்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்போதுதான், தான் ஏமாற்றப்பட்டது பஷீருக்கு தெரியவந்தது. இதையடுத்து பஷீர் கொடுத்த புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த பூக்கடை போலீசார் விசாரணையை தொடங்கினர்.

முதற்கட்ட விசாரணையில் பஷீர் அகமது வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வரும் குருவியாக இருந்துள்ளார். அப்படி வெளிநாடுகளில் இருந்து கடத்திவரப்படும் தங்கத்தை விற்று பணம் பெற்றுவரும் போது தான் கொள்ளை சம்பவம் அரங்கேறியிருப்பது தெரியவந்துள்ளது.

சிசிடிவி காட்சிகள், வாகன பதிவு எண் அடிப்படையில் நடத்திய விசாரணையில் நாகர்கோயிலை சேர்ந்த பசூல் மகமூத், அவருடைய மகன் பரூக் தாகா, இருதய ஆரோக்கிய பிரகாஷ், சென்னை வேளச்சேரியை சேர்ந்த காதர் மைதீன், நரேஷ், தியாகராஜன் உள்ளிட்ட ஆறு பேரை பூக்கடை போலீசார் பிடித்தனர்.

பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை பாரிமுனை பகுதியில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்படும் தங்கத்தை விற்பனை செய்யும் கும்பலை சில நாட்களாக இவர்கள் கண்காணித்து வந்ததாக கூறியுள்ளனர்.

கைதானவர்களில் ஒருவர்


அவர்களிடம் கொள்ளையடித்தால் ஏற்கனவே கடத்தல் தங்கம் என்பதால் போலீசாரிடம் புகார் போகாது என்று அவர்களை குறிவைத்துள்ளனர். அப்போது தான் வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்திவரும் குருவி பஷீரை கண்காணித்து அவரிடம் கைவரிசை காட்டியுள்ளனர்.

Also see... சிவன் அனுப்பினார், ரூ.45,000 கொடு.. நூதன மோசடியில் கொள்ளை.. பின்னணி என்ன?

பிடிபட்ட ஆறுபேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ 17 லட்சத்தை மீட்டனர். மீதம் ரூ 7 லட்சத்தை அந்த கும்பல் உல்லாசமாக செலவு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் குருவியாக இருந்த பஷீரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Arrested, Chennai, Crime News, Gold Robbery, Police

அடுத்த செய்தி