முகப்பு /செய்தி /சென்னை / சென்னையின் பிரதான சாலைகளில் வெட்டப்பட்டுள்ள 50 ஆண்டு பழமையான மரங்கள்

சென்னையின் பிரதான சாலைகளில் வெட்டப்பட்டுள்ள 50 ஆண்டு பழமையான மரங்கள்

வெட்டப்பட்டுள்ள மரங்கள்

வெட்டப்பட்டுள்ள மரங்கள்

Chennai News : சென்னையின் பிரதான சாலைகளில் மேம்பால பணிகளுக்காக 50 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தமிழகத்தின் பசுமை பரப்பளவை 33 சதவீதம் உயர்த்த பல கோடி மரங்கள் மாநிலம் முழுவதும் நடும் பசுமை தமிழகம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  அதே வேளையில் சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள், சாலை மற்றும் மேம்பால பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவது தொடர்கிறது. சமீபத்தில் கோட்டூர்புரம், மத்திய கைலாஷ், அடையாறு, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலம் மற்றும் வடிகால் பணிகளுக்காக பல மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. 50 ஆண்டுகள் பழமையான சுமார் 10 மரங்கள் வெட்டப்பட்டுள்ளது சூழல் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய மரங்கள் நடுவது என்பது எந்த அளவு முக்கியமோ, அதே அளவிற்கு தற்போது இருக்கும் மரங்களை பாதுகாப்பது என்பதும்  முக்கியம் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். மரங்களை அகற்ற வேண்டிய சூழல் இருப்பின், அந்தத் திட்டத்தை அரசு மறு பரிசீலனை செய்வதோடு, சூழலியலை பாதிக்காத  திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் பொறியாளர் பிரபாகரன் கூறுகையில், "சதுப்பு நிலங்கள், காடுகள் நிறைந்த இடமாக இருந்த சென்னையின் தற்போதைய பசுமை பரப்பு 15 சதவீதம் மட்டுமே. அதேபோல், சென்னையில் 1990-ம் ஆண்டு 20 சதவீதமாக இருந்த திறந்த வெளி இடங்கள், இப்போது 5 சதவீதமாக குறைந்துள்ளது. சென்னையில் பரவலாக மரங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கூடுதல் மரங்களை நடுவதற்கும், திறந்த வெளி இடங்களை அதிகப்படுத்தவும் நீண்ட கால திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.

புவி வெப்பமயமாதல் உலகெங்கும் பெரிய பிரச்சனையாக இருக்கும் நிலையில், 2030ம் ஆண்டில் புவியின் சராசரி வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸை எட்டிவிடும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், மக்கள் அடர்த்தி அதிகம் இருக்கக்கூடிய நாடுகள், நகரங்கள்  பாதிப்பை சந்திக்கும். ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்தால், அதிகமான கட்டுமானங்கள் இருக்கக்கூடிய நகரங்களில் அது 3 டிகிரி செல்சியஸ் பாதிப்பை பிரதிபலிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத வெப்பத்தை எதிர்கொள்ளும்  ஆபத்துக்கள் காத்திருப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதுபோன்ற ஆபத்துகளில் இருந்து சென்னை மாநகரையும், மாநகர மக்களையும் காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது” என்றார்.

First published:

Tags: Chennai, Local News