திருவள்ளூர் மாவட்டம் அலமாதியை சேர்ந்தவர் அப்பு (எ) ராஜசேகர். இவரை கொடுங்கையூர் போலீசார் வழக்கு ஒன்றுக்காக நேற்று முன் தினம் இரவு கொடுங்கையூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென ராஜசேகருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொடுங்கையூர் போலீசார் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு ராஜசேகரின் உடல் நிலை மோசமடைந்ததால் தனியார் மருத்துவமனை நிர்வாகம், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ராஜசேகரை கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனை செய்த ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் வரும் வழியிலேயே ராஜசேகர் உயிரிழிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மரணமடைந்த ராஜசேகர் மீது சோழவரம் காவல் நிலையத்தில் 8 வழக்குகளும், வியாசர்பாடி காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், மணலி புதுநகர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், திருநின்றவூர் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும் என மொத்தம் 23 வழக்குகள் உள்ளன. ராஜசேகர் சோழவரம் காவல் நிலையத்தில் பி கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளி என காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் கைதி ராஜசேகர் மரணமடைந்ததை தொடர்ந்து சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜேஸ்வரி, துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கொடுங்கையூர் காவல் நிலைய குற்றவழக்கில் சம்மந்தப்பட்ட ராஜசேகரை அவரது வீட்டில் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது அவர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, உயிரிழந்த ராஜசேகரிடம் விசாரணை நடத்திய போலீசார் யார் யார்? ராஜசேகரை பிடித்தவர்கள் யார்? இரவு காவலில் காவல்நிலையத்தில் வைத்திருந்தவர்கள் யார்? என பல கோணங்களில் கொடுங்கையூர் காவல் நிலைய அதிகாரிகளிடம் நடத்தினர்.
இந்நிலையில், கொடுங்கையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன் தலைமை காவலர்களான ஜெயசேகர், மணிவண்ணன், முதல்நிலை காவலர் சத்தியமூர்த்தி ஆகியோரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனிடையே விசாரணைக் கைதி ராஜசேகர் காவல் நிலையத்தில் உயிரிழந்த வழக்கானது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி தலைமைச் செயலக காலனி போலீசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பட்டினபாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் காவல் நிலையத்தில் உயிரிழந்த வழக்கில் வழக்கில் A1 குற்றவாளியாக காவலர் பவுன்ராஜ், A2 குற்றவாளியாக தலைமை காவலர் முனாஃப், A3 குற்றவாளியாக சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், A4 குற்றவாளியாக ஊர்க்காவல் படை வீரர் தீபக், A5 குற்றவாளியாக ஆயுதப்படை காவலர் ஜெகஜீவன், A6 குற்றவாளியாக ஆயுதப்படை காவலர் சந்திரகுமார் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Must Read : பள்ளி, கல்லூரிகளில் யோகா - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
மேலும், அயனாவரம் காவல் உதவி ஆணையர் சரவணன் மற்றும் தலைமை செயலக காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு மாதங்களுக்குள் சென்னை காவல் நிலையங்களில் இரண்டு விசாரணை கைதிகள் விசாரணையின் போது உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.