Home /News /chennai /

நாய் கடிப்பதால் பரவும் ரேபிஸ் நோய்க்கு தமிழ்நாட்டில் அதிகரிக்கும் உயிரிழப்பு... எச்சரிக்கும் மருத்துவர்கள்...

நாய் கடிப்பதால் பரவும் ரேபிஸ் நோய்க்கு தமிழ்நாட்டில் அதிகரிக்கும் உயிரிழப்பு... எச்சரிக்கும் மருத்துவர்கள்...

ரேபிஸ் நோய்

ரேபிஸ் நோய்

Chennai | ரேபிஸ் நோய் தாக்கினால் 100% மரணம். நாய் கடித்து ஒரு வருடம் கழித்து கூட அறிகுறிகள் தென்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
ரேபிஸ் நோய் தாக்கி தமிழ்நாட்டில் 37 பேர் ஒன்றரை ஆண்டுகளில் உயிரிழந்துள்ளனர். ரேபிஸ் நோய் நாய், பூனை, குதிரை உள்ளிட்ட விலங்குகளின் கடியினால் ஏற்படுகிறது என்றாலும் பெரும்பாலும் நாய்கடிப்பதனால் ஏற்படுகிறது. இந்த ரேபிஸ் வைரஸ் நோய் தாக்கினால் அதை குணப்படுத்த மருந்து கிடையாது என்பதால் 100% மரணம் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டில் 19 பேரும் இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் வாரம் வரை 18 பேரும் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே உயிரிழந்துவிட்டனர். நாய்கடியை கடியின் தீவிரம் பொருத்து மூன்று வகையாக பிரிக்கின்றனர்.

முதல் வகையில்: பற்கள் படவில்லை என்றால் தடுப்பூசி தேவையில்லை.

இரண்டாவது வகையில் : ரத்த கசிவின்றி தோலில் சிறிய அளவிலான கடி, சிராய்ப்புகள் இருந்தால் கடிபட்ட இடத்தை 15 நிமிடம் ஓடும் தண்ணீரில் கழுவ வேண்டும். கூடிய விரைவில் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

மூன்றாவது வகையில் : ஒன்றுக்கு மேற்பட்ட கடி, ரத்தம் கசியும் அளவு ஆழ்ந்த காயம் ஏற்பட்டிருந்தால், கண், மூக்கு, வாய் போன்ற இடங்களில் உமிழ்நீர் பட்டிருந்தால், தடுப்பூசி செலுத்துவதோடு,  immunoglobulin என்ற வெறிநாய்கடி எதிர்ப்பு புரதம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் அனுசுயா கூறுகிறார்.

இந்த வைரஸ் நரம்பு வழியாக சென்று மூளையை தாக்கக்கூடியது. கடிப்பட்ட இடத்தை பொருத்து மூளையை சென்றடையும் காலம் வேறுபடும். கடிப்பட்ட இடம் கண், மூக்கு, வாய் என மூளைக்கு அருகில் இருக்கும் இடங்களாக இருந்தால் விரைவில் மூளைக்கு சென்று பாதிப்பு விரைவாக தொடங்கும் என்பதால் உடனடி சிகிச்சை தேவைப்படும்.

வேறு இடங்களில் கடிபட்டிருந்தால், கடிபட்ட பிறகு,  அறிகுறிகள் தென்பட ஒரு ஆண்டு கூட ஆகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே லேசாக காயமாக இருந்தாலும் உடனே தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என வலியுறுத்துகின்றனர்.

இந்த வைரஸ் மூளையை தாக்கி பாதிப்பு தொடங்கிவிட்டால் அதன் பிறகு குணப்படுத்த மருந்து கிடையாது. மூளையை தாக்கும் முன் Anti-rabies vaccine என்ற தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டால் மட்டுமே மரணத்தை தவிர்க்க முடியும்.

நெஞ்சுகுழாய் சுருங்கிவிடும் என்பதால், தண்ணீரை பார்த்து அதீத பயம் ஏற்படுவது தான் இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும். இந்த அறிகுறி தொடங்கிவிட்டால் சில நாட்களில்  மரணம் நிச்சயம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.சென்னை

Also see... திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது..

ரேபிஸ் நோய் எந்த நாய் கடித்தாலும் ஏற்படாது. ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்டு வெறிபிடித்த நாய்களின் மூலம் மட்டுமே பரவுகிறது. எந்த காரணமும் இல்லாமல் குரைப்பது, தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பது, வாயிலிருந்து எச்சில் உமிழ்வது உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் அந்த நாய்களுக்கு ரேபிஸ் நோய் இருக்கலாம் என கால்நடை மருத்துவர் அசோக் குமார் தெரிவிக்கிறார்.  ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசியை 0,3,7,28,90 நாட்கள் என்ற இடைவெளியில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai, Disease, Doctor, Dog, Health

அடுத்த செய்தி