சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து மாணவர்களை சீரழிக்கும் சம்பவம் அரங்கேறி வருவதாக பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஷ் தங்கையாவிற்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து செம்மஞ்சேரி சரக உதவி ஆணையாளர் ரியாசுதீன் மேற்பார்வையில் ஆய்வாளர் நடராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ராகவன், மணிவண்ணன், காவலர்கள் லோகு, மேகஷ், குமரகுரு ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையில், சோழிங்கநல்லூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பிரதான சாலையில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் ஏதேனும் சந்தேகப்படக்கூடிய வகையில் பார்சல் வந்தால் செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும்படி ஆய்வாளர் முன்னதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், பெங்களூரிலிருந்து அடிக்கடி ஒரே பெயருக்கு ஒரு பார்சல் வருவதாகவும், அவர்கள் மீது சந்தேகமாக உள்ளதாகவும் ஆய்வாளருக்கு தகவல் வந்துள்ளது. அதன்படி
போலீசார் கூரியர் நிறுவனத்தை நோட்டமிட்டபடி மறைந்திருந்தனர்.
அப்போது, மூன்று வாலிபர்கள் ஆட்டோவில் வந்து ஒரு சிறிய பார்சலை வாங்கி சென்றதும், அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடமிருந்த பார்சலை பிரித்து சோதனை செய்தபோது அதில் வலி நிவாரணி மாத்திரையான டைடோல் (Tydol) என்ற 300 போதை மாத்திரை இருந்தது தெரியவந்தது.
பின்னர் அவர்கள் வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா 1.5 கிலோ இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் ஆட்டோ, கஞ்சா, போதை மாத்திரை ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மூவரையும் செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த 24 வயதான ஆட்டோ ஓட்டுநர் குள்ளு (எ) இனியவன், தாழம்பூர் ஊராட்சியை சேர்ந்த 20 வயதான பிரவீன் என்பதும் மற்றொருவர் இளம்சிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து மூவரிடமும் நடத்திய விசாரணையில் குள்ளு (எ) இனியவன் மீது அபிராமபுரம் காவல் நிலையத்தில் திருட்டு, வழிபறி மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
மேலும் இளம்சிறாருக்கு ஒரிசா மாநிலம் பூர்வீகம் என்பதும், இந்தி தாய்மொழி என்பதாலும் வடமாநிலங்களில் உள்ளவர்களிடம் இந்தியில் பேசி அங்கிருந்து கூரியரில் சென்னைக்கு போதை மாத்திரைகளை அனுப்ப ஆன்லைனில் ரூபாய் 30,000யை முன்பணமாக செலுத்திய பின்னரே அங்குள்ளவர்கள் கூரியர் மூலம் போதை மாத்திரைகளை அனுப்பி வந்துள்ளதும் தெரியவந்தது.
வலி நிவாரணி மாத்திரைகளை தமிழகத்தில் மருத்துவர்கள் அனுமதியில்லாமல் வழங்காத நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து மாத்திரைகளை சட்டவிரோதமாக சென்னைக்கு கடத்தி வந்து முழுக்க முழுக்க கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்ததும், கல்லூரி மாணவர்கள் ஆர்வமாக இந்த போதை மாத்திரைகளை வாங்கி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எவ்வளவு நேரம் போதை? :
போதை மாத்திரையை ஊசி மூலம் நரம்பில் செலுத்திக்கொண்டால் சுமார் 7 மணி நேரம் போதை தலைக்கேறி குறையாமல் இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
அதிர்ச்சியடைந்த போலீசார் :
சாதாரணமாக மருந்தகத்தில் ஒரு மாத்திரையின் விலை 34 ரூபாய் 6 பைசாக்கு விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் இவர்கள் ஒரு மாத்திரையை 100 ரூபாய்க்கு வாங்கி அதை கல்லூரி மாணவர்களுக்கு 500 ரூபாய்க்கு விற்பனை செய்து 5 மடங்கு லாபத்தை சம்பாதித்து வந்ததாக கூறியது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாகியது.
அதேபோல் ஆந்திர மாநிலத்திலிருந்து தனியார் டிராவல்ஸ் மூலம் கோயம்பேடுக்கு தடை செய்யப்பட்ட கஞ்சாவை கடத்தி வந்து சென்னை புறநகர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததும், ஒரு கிலோ கஞ்சாவை ரூபாய் 8,000க்கு வாங்கி வந்து அதை ரூபாய் (50,000) ஐம்பது ஆயிரத்திற்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கைதான மூவரில் இருவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இளம்சிறாரை செங்கல்பட்டு நீதிபதி முன்னாள் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒப்படைத்தனர்.
தடைசெய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்களை சாதூரியமாக கைது செய்த செம்மஞ்சேரி சரக உதவி ஆணையாளர் ரியாசுதீன், ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர்கள் ராகவன், மணிவண்ணன், காவலர்கள் லோகு, மகேஷ், குமரகுரு ஆகியோரை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
செய்தியாளர் - வினோத் கண்ணன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News