ஹோம் /நியூஸ் /Chennai /

இன்ஸ்டாகிராமில் பிளான்... 4 நாட்களில் 18 மொபைல் பறிப்பு.. மூளையாக செயல்பட்ட 16 வயது சிறுமி - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

இன்ஸ்டாகிராமில் பிளான்... 4 நாட்களில் 18 மொபைல் பறிப்பு.. மூளையாக செயல்பட்ட 16 வயது சிறுமி - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

மொபைல் பறிப்பு

மொபைல் பறிப்பு

இன்ஸ்டாகிராம் மூலம் மொபைல் பறிப்பதற்கு திட்டம் போட்டு மூளையாக செயல்பட்ட 16 வயது சிறுமி உட்பட ஐந்து நபர்களை ராயப்பேட்டை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :

  கோபாலபுரம் டி.ஏ.வி பள்ளி அருகே கடந்த 15 - ம் தேதி மாலை சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணின் செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் பறித்துச் சென்றனர். அதே இடத்தில் கடந்த 19ம் தேதி ஓய்வு பெற்ற அரசு ஊழியரான 62 வயது மூதாட்டி நடை பயணம் மேற்கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் அவரிடமிருந்து மொபைல் போனை பறித்துச் சென்றனர்.

  இதனிடையே கடந்த 8ஆம் தேதி ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை அருகே முதியவர் ஒருவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் செல்போன் பறித்துச் சென்றனர். இதேபோன்று தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில் மயிலாப்பூர், அபிராமபுரம், ராயப்பேட்டை பகுதிகளில் தனியாக நடந்து சென்ற பெண்கள் மற்றும் முதியவர்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் மொபைல் போன்களை பறித்து வந்தனர்.

  இந்த சம்பவங்கள் குறித்து ராயப்பேட்டை காவல் நிலையம், மயிலாப்பூர் காவல் நிலையம், அபிராமபுரம் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், குற்றவாளிகளை பிடிக்க ராயப்பேட்டை உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய தனிப்படை போலீசார் அனைத்துக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே நபர்கள் தான் என தெரிய வந்ததையடுத்து விசாரணையை துரிதப்படுத்தினர்.

  இந்தநிலையில் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த 19 ம் தேதி இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்ப வந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகியோர் பெட்ரோல் போட்டுவிட்டு ஊழியர்களிடம் பணம் தராமல் பிரச்னையில் ஈடுபட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

  இந்த நிலையில் ராயபேட்டை தனிப்படை போலீசார் மொபைல் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் குறித்த சிசிடிவி காட்சிகளை Chennai City Crime என்ற சென்னை காவல்துறை கிரைம் வாட்ஸ் அப் குரூப்பில் பதிவு செய்தனர். அதேபோல பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் தராமல் பிரச்சனை செய்த நபர்கள் குறித்த சிசிடிவி காட்சிகளை சிந்தாதிரிப்பேட்டை போலீசார் அக்குழுவில் பதிவிட்டுள்ளனர். இதனையடுத்து அனைத்து சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே குழுவைச் சேர்ந்த நபர்கள் என ராயபேட்டை தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது.

  இருசக்கர வாகன பதிவு எண்ணை வைத்து சோதனை செய்தபோது, அதன் உரிமையாளர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் இருசக்கர வாகனத்தின் உரிமையாளரின் மகனான சரவண பெருமாள்(19) என்பவர் கிடைக்கப்பற்ற சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து மொபைல் எண்ணை வைத்து சோதனை செய்தபோது திருவல்லிக்கேணி ஆதாம் மார்க்கெட் பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அவர் நண்பர்களோடு தங்கி இருப்பது தெரியவந்தது.

  இதனையடுத்து அங்கு சென்ற ராயப்பேட்டை தனிப்படை போலீசார் 16 வயது சிறுமி உட்பட நான்கு இளைஞர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் அவர்கள், தேனாம்பேட்டை எஸ்.எஸ். புரம் பகுதியைச் சேர்ந்த விவேக் (எ) குள்ளா(26), மெரினா பீச்சில் குதிரை ஓட்டி வரும் ஜெகன்(25), கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன்(24), தூத்துக்குடி மாவட்டம் சண்முகபுரத்தைச் சேர்ந்த சரவண பெருமாள்,(19), சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுமி என தெரியவந்தது.

  போலீசார் விசாரணையில் 16 வயது சிறுமி தூத்துக்குடியிலுள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றபோது அங்கு பழக்கமான சரவண பெருமாளை சென்னை வந்தால் நாம் சந்தோஷமாக இருக்கலாம் எனக்கூறி சரவணபெருமாளை அழைத்துக்கொண்டு அவரது இருசக்கர வாகனத்திலேயே சென்னை வந்துள்ளார் என்பதும், பின்னர் அந்த இருசக்கர வாகனத்தை வைத்தே மொபைல் பறிப்பு சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.

  அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் மண்டபத்தை சுற்றி திரண்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்

  குறிப்பாக 16 வயது சிறுமி தனது நண்பர்களிடம் மொபைலில் பேசினால் ஆபத்து வரலாம் என நினைத்து இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் சந்திக்க வேண்டும் என பதிவிட்டு வந்ததும் அதன் அடிப்படையில் மற்ற நண்பர்கள் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஒன்று சேர்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

  மேலும், அங்கு அடுத்த நாள் எங்கு மொபைல் பறிப்பில் ஈடுப்பட வேண்டும் என்பதை முதல் நாளிலேயே திட்டம் தீட்டி வந்துள்ளனர். தனியாக வரும் முதியவர்களிடம் மட்டுமே மொபைல் பறிப்பில் ஈடுபட வேண்டும் என்பதையும் 16 வயது பெண் திட்டம் போட்டு கொடுத்து வந்துள்ளார். அதன்படியே கடந்த 15 ம் தேதியிலிருந்து 19 ம் தேதி வரை 4 நாட்களில் மட்டும் இராயப்பேட்டை, அபிராமபுரம், ஆயிரம் விளக்கு, கிண்டி. கோட்டூர்புரம், மந்தைவெளி, எழும்பூர், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, சூளைமேடு, வேளச்சேரி என தனியாக சென்ற பெண்கள், முதியவர்களிடம் 18 செல்போன்களை பறித்து சென்றுள்ளனர்.

  அவற்றை மெரினாவில் குதிரை ஓட்டு வரும் ஜெகன் மூலம் திருவல்லிக்கேணி பகுதிகளில் விற்பனை செய்து அந்த பணத்தில் லாட்ஜ் எடுத்து கஞ்சா, மது, என சுகபோகமாக வாழ்ந்து வந்துள்ளனர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக மெரினா பீச்சில் குதிரை ஓட்டி வரும் ஜெகன் மற்றும் தேனாம்பேட்டையைச் சேர்ந்த விவேக்  மீதும் சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, மொபைல் மற்றும் செயின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் அடிக்கடி இவர்கள் சிறை சென்று வந்ததும் தெரியவந்தது.

  16 வயது சிறுமி இதற்கு முன் பல மொபைல் பறிப்பு சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார் என்றும் தற்போது தான் முதல் முறையாக போலீசாரிடம் கைதாகியுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த குற்ற சம்பவங்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்டு வந்தது தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் 16 வயது சிறுமி தான் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  இதனையடுத்து கைது செய்யப்பட்ட 16 வயது சிறுமி உட்பட 5 நபர்களிடமிருந்தும் 7 செல்போன்கள், 1 ஆப்பிள் ஐபேட், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்த ராயபேட்டை தனிப்படை போலீசார் 16 வயது சிறுமியை அரசு கூர்நோக்கு இல்லத்திலும் மற்ற 4 நபர்களை சிறையிலும் அடைத்தனர்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Chennai, Crime News