சென்னையை சேர்ந்த 14 வயது சிறுமி தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வருகிறாள். இந்நிலையில், சிறிய வயது முதல் கராத்தே கற்றுக்கொள்ள ஆசை இருந்ததால் சிறுமி முகப்பேர் பகுதியில் உள்ள பிரபல கராத்தே பயிற்சி பள்ளியில் கராத்தே மாஸ்டர் கருணாநிதி என்பவரிடம் கராத்தே பயின்று வந்துள்ளார். அப்போது, கருணாநிதி சினிமா படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக பணிப்புரிந்திருப்பதாக சிறுமியிடம் கூறினார்.
மேலும், அமைச்சர்கள் எல்லோரும் தனக்கு நன்றாக தெரியும் என அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பெற்றோர்களிடையே காண்பித்து மாணவர்களை கராத்தே பயிற்சி மையத்தில் சேர்த்து பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்நிலையில் 14 வயது சிறுமி கடந்த திங்கட்கிழமை பயிற்சி முடிந்து வீடு திரும்பாததால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் சிறுமி காணவில்லை என புகாரளித்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் சிறுமியை தேடிவந்த நிலையில், நேற்று சிறுமி வேறு ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து தனது பெற்றோருக்கு தொடர்பு கொண்டு தான் முகப்பேர் 7H பேருந்து நிலையத்தில் நிற்பதாக கூறினாள். அங்கு சென்ற சிறுமியின் பெற்றோர் சிறுமியை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் கராத்தே மாஸ்டர் கருணாநிதி ஒரு நாள் முழுவதும் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கதறி அழுதபடி கூறினாள்.
இதையடுத்து, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் கராத்தே மாஸ்டர் சிறுமியை அழைத்து சிறப்பு வகுப்பில் கராத்தே கற்றுக் கொடுக்கிறேன் எனக்கூறி வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அதனை வீடியோ பதிவு எடுத்து வைத்துக்கொண்டு தொடர்ந்து 7 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியது தெரியவந்தது.
இதையடுத்து கராத்தே மாஸ்டர் கருணாநிதியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தியதில், 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கராத்தே மாஸ்டர் கருணாநிதி மீது பாலியல் வன்கொடுமை, போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
பெண் பிள்ளைகளை சமூகவிரோத கும்பலிடம் இருந்து தற்காத்துக் கொள்ள சிலம்பம், கராத்தே, குங்ஃபூ உள்ளிட்ட தற்காப்பு கலைகளை தற்பொழுது உள்ள மாடர்ன் பெற்றோர்கள் தனி வகுப்பாக அனுப்பி வைக்கின்றனர் ஆனால் அந்த வகுப்பே குழந்தைகளுக்கு எமனாக மாறி விடுகிறது. இதனால் முறையாக அரசு சான்றிதழ் பெற்று நடத்தக்கூடிய கராத்தே நிறுவனங்களுக்கு மட்டுமே பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை அனுப்பி வைக்க வேண்டும் எனவும். அன்றாடம் வகுப்பில் என்ன நடந்தது, பயிற்சி மையங்களில் என்ன கற்றுக் கொடுத்தார்கள் பிள்ளைகளிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Local News