ஹோம் /நியூஸ் /Chengalpattu /

வங்கதேச இளைஞருக்கு போலியான ஐடி கார்டு மூலம் இந்திய பாஸ்போர்ட்... செங்கல்பட்டில் இருவர் கைது

வங்கதேச இளைஞருக்கு போலியான ஐடி கார்டு மூலம் இந்திய பாஸ்போர்ட்... செங்கல்பட்டில் இருவர் கைது

இருவர் கைது

இருவர் கைது

Chengalpattu : நாவலூரில் போலி அடையாள அட்டைகள் பெற்றுத்தரும் மோசடி நபரும், சட்டவிரோதமாக இந்திய நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருந்த வங்கதேசத்தை சேர்ந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :

  செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் போலியான முறையில் அடையாள அட்டைகளை பெற்று அதன் மூலம் பாஸ்போர்ட் பெற்ற வங்கதேசத்தை சேர்ந்த நபர் மற்றும் அவருக்கு போலி அடையாள அட்டை பெற்றுதந்த தரகர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூரில் தாழம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலு தலைமையிலான போலீசார் கடந்த செவ்வாய் கிழமை ( 21ஆம் தேதி) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நாவலுார் சந்திப்பு அருகே போலீசாரின் வாகனத்தை கண்ட இருவர் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை இருவரை போலீசார் விரட்டி பிடித்தனர்.

  பிடிப்பட்ட இருவரிடமும் விசாரித்ததில், ஒருவர் வங்கதேசத்தை சேர்ந்த 27 வயதான ரஜ்மான் உசேன் மற்றும் படூரைச் சேர்ந்த 44 வயதான கிரிதரன் என்பது தெரியவந்தது. போலீசாரை பார்த்து ஓடியது குறித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரனாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

  விசாரணையில் வங்கதேசத்தை சேர்ந்த ரஜ்மான் உசேனிடம் வங்கதேச பாஸ்போர்ட் மற்றும் இந்திய நாட்டின் பாஸ்போர்ட் என இரண்டு பாஸ்போர்ட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவர் பெயரில் இரண்டு நாட்டின் பாஸ்போர்ட் உள்ளதை கண்ட போலீசார்க்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால், தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். அப்பொழுது ரஜ்மான் உசேன் வங்கதேசத்தில் இருந்து கொல்கத்தா வந்ததும் அங்கிருந்து கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு வந்து அங்குள்ள ஒரு பாஸ்ட்புட் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

  மேலும் அவர், துபாய் செல்ல திட்டமிட்டு இருந்ததால் இந்திய பாஸ்போர்ட் தேவைப்பட்ட நிலையில் அதற்கு இந்திய குடியுரிமை அடையாள அட்டையான ஆதார் கார்டு முதலில் தேவைப்பட்டதால் கொல்கத்தாவில் உள்ள அவரது நண்பர் ராஜூபாய் கேளம்பாக்கம் அருகே படூர் ஊராட்சியில் உள்ள கிரிதரன் என்பவரை அறிமுகப்படுத்தி செல்போன் எண்ணை வழங்கி உள்ளார்.

  ஆன்லைனில் டிக்கெட் பெற்று தருதல், அடையாள அட்டைகள் பெற்று தருதல், இ-சேவை மையம், டிராவல்ஸ் ஆகியவற்றை படூரில் நடத்தி வரும் கிரிதரனை நேரில் சந்தித்த ரஜ்மான் உசேன், ஆதார் பெற்றுதர ரூபாய் 4,500 கொடுத்துள்ளார். பின்னர் ஒரு இடத்திற்கு சென்று ரஜ்மான் உசேன் கைரேகைகளை பதிவு செய்து கொடுத்துள்ளார்.

  அதன் பின்னர், சில நாட்களில் ரஜ்மான் உசேனுக்கு ஆதார் கார்டு வந்துள்ளது. ஆதார் கார்டை வைத்து பான்கார்டு (PAN CARD) பெற்றுள்ளார். அதை தொடர்ந்து ஆதார் மற்றும் பான் கார்டை வைத்து இந்திய நாட்டின் பாஸ்போர்ட் வாங்க கிரிதரனிடம் ரூபாய் 10,000 ஆயிரம் கொடுத்ததாகவும், முறையாக பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்ததை தொடர்ந்து நுண்ணறிவு பிரிவு போலீசார் இருப்பிடம் மற்றும் அடையாள அட்டை, சான்றிதழ்களை சரிபார்த்த பின்பே ரஜ்மான் உசேனுக்கு பாஸ்போர்ட் கிடைத்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

  டிராவல்ஸ் நிறுவனம் மற்றும் இ.சேவை மையம் நடத்தி வரும் கிரிதரன் போலி அடையா அட்டைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் எடுத்து பலருக்கு வினியோகித்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் கிரிதரனின் அலுவலகத்தை போலீசார் சோதனையிட்டதில் அங்கு 25க்கும் மேற்பட்ட ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, பான் கார்டு மற்றும் ஏடிஎம் கார்டுகள் இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கிரிதரனிடமிருந்து 25க்கும் மேற்பட்ட அடையாள அட்டைகள் மற்றும் ஏடிஎம் கார்டுகள், ஒரு பாஸ்போர்ட், 2 கணினிகளையும், ரஜ்மான் உசேனிடமிருந்து 2 பாஸ்போர்ட், ரூபாய் 68,000 ரொக்க பணம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

  Must Read : கன்னியாகுமரி இரட்டைக்கொலை... காட்டிக்கொடுத்த மங்கி குல்லா - கொள்ளையடித்த நகைகளை காதலிக்கு பரிசளித்ததாக கொள்ளையன் பகீர் வாக்குமூலம்

  இரவு ரோந்து பணியின்போது போலி அடையாள அட்டைகள் பெற்றுத்தரும் மோசடி நபரையும், சட்டவிரோதமாக இந்திய நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருந்த வங்கதேசத்தை சேர்ந்த நபரையும் கைது செய்த ஆய்வாளர் வேலு, உதவி ஆய்வாளர்கள் முத்துகுமார், பார்த்திபன், காவலர்கற் அப்துல் முனாஸ், ராஜேஷ் ஆகியோரை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் வெகுவாக பாராட்டினார்.

  செய்தியாளர் - ப.வினோத்கண்ணன்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Arrested, Chengalpet, Fraud, Passport