திருப்பதிக்கு ஒரு நாளைக்கு 1000 பேர் சுலபமாக சென்று தரிசனம் செய்துவிட்டு ஒரே நாளில் சென்னை திரும்பலாம் அதற்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீலக்கொடி கடற்கரை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் புதியதாக ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சிற்றுண்டி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் இன்று ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ராமச்சந்திரன், “இந்தியாவில் 9 கடற்கரைகளுக்கு நீலக் கொடி சான்றிதழ் உள்ளது. முதன்முதலாக இந்த கோவளம் கடற்கரைக்கு தான் நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்கான பூங்காக்கள், சாலைகள், குடில்கள், உணவகங்கள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாகவும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சுற்றுலாத்துறை சார்பில் அனைத்து படகு குழாம்களிலும் படகுகள் அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும் பேசியவர், தமிழகத்தில் இருந்து பக்தர்கள் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துவர 2 அல்லது 3 நாள்கள் ஆகிறது. இந்நிலையில் நாள் ஒன்றுக்கு 1,000 நபர்கள் திருப்பதி சென்று தரிசனம் செய்து திரும்ப தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் பேருந்துகள் சென்று வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை இயக்குனர் சந்திப் நந்தூரி, திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: ப. வினோத் கண்ணன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Local News, Tamilnadu, Tirupathi, Tourism