ஹோம் /நியூஸ் /Chengalpattu /

550 ரூபாய்க்காக கோவளம் அருகே காவலாளி அடித்து கொலை..

550 ரூபாய்க்காக கோவளம் அருகே காவலாளி அடித்து கொலை..

காவலாளி கொலை

காவலாளி கொலை

Chengalpattu : கோவளம் செம்மஞ்சேரி குப்பம் பகுதியை சேர்ந்த காவலாளி தேசிங்கு கொலை வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கொலைக்கான காரணம் குறித்து பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 4 minute read
 • Last Updated :

  செங்கல்பட்டு மாவட்டம் சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளம் செம்மஞ்சேரி குப்பம் பகுதியை சேர்ந்த 65-வயதான முதியவர் கொலை வழக்கில், பெங்களூருவுக்கு வேலைக்கு செல்ல பணம் இல்லாததால் தனியாக தோட்டத்தில் இருந்த காவலாளியை கொலை செய்ததாக கைதானவர்கள் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.  

  கிழக்கு கடற்கரை சாலை கோவளம் செம்மஞ்சேரி குப்பம் பகுதியை சேர்ந்த 65-வயதான தேசிங்கு என்பவர் அதேபகுதியில் மருத்துவர் கே.கே.ராமசந்திரன் என்பவர்க்கு சொந்தமான சுமார் 13 ஏக்கர் பரப்பளவு கொண்ட தோட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளாக காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 17ஆம் தேதி தேசிங்கு மகன் 42-வயதான மேகவண்ணன் அப்பாவை பார்த்து சில நாட்கள் ஆகிறது என்று தோட்டத்துக்கு சென்றுள்ளார்.

  அங்கு அழுகிய நிலையில் சடலமாக கிடந்த தனது அப்பாவை கண்டு அதிர்ச்சியடைந்த மகன் இச்சம்பவம் குறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் தமிழன்பன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் தலையில் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில்  தேசிங்கு இறந்துகிடந்துள்ளார்.  போலீசார் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

  பின்னர், மகனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தனது அப்பாவிற்கும் வேறு யாருக்கும் எந்த முன்விரோதமும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் கொலை நடந்த தோட்டத்தில் தடயங்கள் ஏதேனும் கிடைக்கிறதா என சோதனையில் ஈடுபட்ட போலீசார் அங்கு இரத்தக் கறையுடன் சுத்தியல் இருந்ததை பார்த்து பறிமுதல் செய்தனர்.

  காவலாளி தேசிங்கு கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க உதவி ஆணையாளர்கள் ரியாசுதீன், ரவிக்குமார் ஆகிய இருவர் மேற்பார்வையில் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் தமிழன்பன், பாலகிருஷ்ணன், முருகன் மற்றும் காவலர்கள் புருசோத்தமன், கோபி, லூயீஸ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து புலன் விசாரணையை துவங்கினர்.

  சம்பவ இடத்திற்கு சென்ற தனிப்படை போலீசார் மூங்கிள் மற்றும் தைலம் மரங்கள் நிறைந்த பகுதியில் தனி ஒருவராக சிறிய வீட்டில் தங்கி வேலை செய்து வந்த தேசிங்கை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்தும் அவர்களின் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

  17ஆம் தேதி போலீசார் உடலை கைபற்றும்போது அழுகிய நிலையில் இருந்ததால் கொலை நடந்து ஒரு வாரத்திற்கு மேல் இருக்கும் என்பதை உறுதி செய்த தனிப்படை போலீசார் தேசிங்கு வழக்கமாக செல்லக்குடிய இடங்களுக்கு சென்று கடைசியாக எப்பொழுது மக்கள் தேசிங்கை பார்த்தார்கள் என்ற விவரங்களை சேகரித்தனர்.

  கடந்த 6ஆம் தேதி மாலை 4 மணிக்கு வழக்கமாக செல்லக்கூடிய டீ கடைக்கு சென்று மாலை 6:30 மணிக்கு பண்ணை தோட்டத்திற்கு திரும்பியது விசாரணையில் தனிப்படை போலீசார்க்கு தெரியவந்துள்ளது.  அதை தொடர்ந்து தோட்டத்தின் அருகில் உள்ள ஒரு வீட்டில் பாதுகாப்பிற்காக பொறுத்தியிருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பார்த்தபோது அன்று மாலை 7:30 மணியளவில் சந்தேகத்திற்கிடமாக மூன்று பேர் அவ்வழியே நடந்து சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்துள்ளது.

  சிசிடிவி காட்சியில் பதிவானவர்களின் பின்புறம் மட்டும் தெரிந்ததால் அவர்களை அடையாளம் காண்பது போலீசார்க்கு பெரிய சவாலாக இருந்துள்ளது. அதை தொடர்ந்து 3 நாட்களாக சிசிடிவி காட்சிகளை மட்டும் தனிப்படை போலீசார் கண்காணித்தும், அந்த மூன்று நபர்கள் குறித்து கூடுதல் தகவல் மற்றும் தடயங்கள் எதுவும் கிடைக்காததால் தனிப்படை போலீசார் தினறினர்.

  இந்நிலையில், இறந்தவரின் செல்போன் காணவில்லை என மகன் மேகவண்ணன் புகார் கொடுக்க அவரது செல்போன் என்னை தனிப்படை போலீசார் கண்காணிக்க ஆரம்பித்தனர். அப்பொழுது இதுவரை தேசிங்கு செல்போனிலிருந்து போகாத ஒரு நம்பர்க்கு  3 முறை போன் போயுள்ளது தெரியவந்தது.

  கொலையான தேசிங்கு செல்போனில் இருந்து சென்ற புதிய எண்ணை தொடர்பு கொண்ட தனிப்படை போலீசார், அவர் யார் அவரிடம் யார் பேசியது என்பதையும் புலன்விசாரணையில் கண்டறிந்தனர். அதன் மூலம் கோவளம் அருகே உள்ள திருவிடந்தை பகுதியை சேர்ந்த 25-வயதான சின்னதம்பி(எ)தமிழரசன், 26-வயதான பாண்டி, திருப்போரூரை சேர்ந்த 40-வயதான பாலாஜி ஆகிய மூவரையும் திருப்போரூரில் பதுங்கியிருந்தபோது தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

  பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து மூவரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சின்னதம்பி என்பவர் பெங்களூர்க்கு வேலை தேடி செல்ல உள்ள நிலையில், அங்கு செல்வதற்கு பணம் இல்லாததால் திருட்டு மற்றும் வழிபறியில் ஈடுபட்டாவது பெங்களூர்க்கு செல்ல வேண்டும் என்று மனநிலையில் இருந்த மூவரும் கடந்த 6ஆம் தேதி ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாமல் உள்ள அந்த பகுதி வழியாக நடந்து சென்றுள்ளனர்.

  அப்பொழுது தனியாக தோட்டத்தில் இருந்த காவலாளி தேசிங்குவிடம் மூவரும் சென்று பணம் கேட்டுள்ளனர். அதற்கு நீங்கள் யார் எதற்கு என்னிடத்தில் பணம் கேட்கிறீர்கள் என்னிடத்தில் பணம் இல்லை என அவர் கூற அவரது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த 550 ரூபாயை எடுத்துக்கொண்டுள்ளனர். அதனால் தேசிங்கு சத்தம்போட்டுள்ளார்.

  சத்தம்போட்டு நம்மை காட்டி கொடுத்துவிடுவார் என்று எண்ணிய அவர்கள் ஆத்திரத்தில் அருகில் இருந்த சுத்தியலை கொண்டு தேசிங்கு தலையின் பின் பகுதியில் அடித்து கொடூரமாக கொலை செய்ததும், பின்னர் தேசிங்கு செல்போனில் இருந்து பெங்களூருவில் உள்ள கைதான சின்னதம்பியின் நண்பர்க்கு தொடர்பு கொண்டு பணம் கிடைத்துவிட்டது நாளை வந்துவிடுவேன் என்று கூறியதாகவும் பின்னர் தேசிங்கு செல்போனை அவர்களே எடுத்துச் சென்றுள்ளனர் என விசாரணையில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தொடர்ந்து நடத்திய விசாரணையில், சின்னதம்பி குன்றத்தூர் காவல் நிலைய சரகத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவத்தில் 2020ஆம் ஆண்டு சிறை சென்றதும், பாண்டி மீது கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் வழிபறி வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. பாலாஜியின் அண்ணன் மகன் பாண்டி என்பது தெரியவந்துள்ளது.  பின்னர் சின்னதம்பி(எ)தமிழரசன், பாண்டி, பாலாஜி ஆகிய மூவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  Must Read : கன்னியாகுமரி இரட்டைக்கொலை... காட்டிக்கொடுத்த மங்கி குல்லா - கொள்ளையடித்த நகைகளை காதலிக்கு பரிசளித்ததாக கொள்ளையன் பகீர் வாக்குமூலம்

  இந்நிலையில், விரைந்து செயல்பட்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த உதவி ஆணையாளர்கள் ரியாசுதீன், ரவிக்குமார், ஆய்வாளர் கோவிந்தராஜ், உதவி ஆய்வாளர்கள் தமிழன்பன், பாலகிருஷ்ணன், முருகன் மற்றும்  காவலர்கள் புருஷோத்தமன், கோபி, லூயீஸ் ஆகியோர் கொண்ட தனிப்படையினரை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் வெகுவாக பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

  செய்தியாளர் - ப.வினோத்கண்ணன்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Chengalpattu, Confession, Murder