Home /News /chengalpattu /

கட்சி தாவியதால் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. வீட்டு சுவரில் ஆபாச அர்ச்சனை.. திமுக- பாமக மோதலால் பரபரப்பு

கட்சி தாவியதால் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. வீட்டு சுவரில் ஆபாச அர்ச்சனை.. திமுக- பாமக மோதலால் பரபரப்பு

கட்சி தாவியதற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

கட்சி தாவியதற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

அரசியலில் கட்சிவிட்டு கட்சி மாறுதல் புதிது இல்லை. இப்படி இருக்க பாமகவிலிருந்து திமுகவுக்கு மாறியவர்களை குறிவைத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டரை சமூக வலைதளத்தில் பரப்பிவரும் எதிர் தரப்பால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chengalpattu | Tamil Nadu
    பாமகவில் இருந்து திமுகவிற்கு மாறிய ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், வார்டு கவுன்சிலர்களின் வீட்டு சுவரில் அநாகரிகமான வார்த்தைகளை எழுதியும், உருவ பொம்மை எரித்தும், கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்த பாமக கட்சியை சேர்ந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பணங்காட்டுப்பாக்கம் ஊராட்சியில் பாமகவினருக்கு மவுசு அதிகம். இந்த ஊராட்சியில் இதுவரை ஒருமுறைதான் (கடந்த 2006ஆம் ஆண்டு) தேர்தல் போட்டியிட்டு நடைபெற்றுள்ளது. வழக்கமாக இந்த பணங்காட்டுப்பாக்கம் ஊராட்சியில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் ஊராட்சிமன்ற தலைவராகவும், துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    அப்படி இந்த முறையும் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியின்றி ஊர் ஒற்றுமையுடன் தனசேகர் (52) என்பவரை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார்கள். மேலும், அருண்குமார் (34) என்பவர் பாமகவின் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி அன்று  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர் அருண்குமார் தலைமையில் 2வது வார்டு உறுப்பினர் நரசிம்மன் உள்ளிட்ட சுமார் 2000த்திற்கும் மேற்பட்டோர் பாமகவில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

    இவர்களை தொடர்ந்து பாமகவை சேர்ந்த பணங்காட்டுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர் பாமகவில் இருந்து விலகி கடந்த ஜுன் மாதம் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். பாமகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் அருண்குமார் வீட்டின் சுவற்றில் முன்னதாக வரைந்து வைத்திருந்த மாம்பழம் சின்னத்தின் மீது அருண்குமாரை ஆபாச வார்த்தைகளை கொண்டு திட்டி எழுதியுள்ளனர். இதேபோல் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டின் சுவரிலும், வார்டு உறுப்பினர் வீட்டின் சுவரிலும் மிக அநாகரிகமான வார்த்தைகளை எழுதியுள்ளார்.

    ALSO READ | 10-ம் வகுப்பு மாணவிக்கு லவ் டார்ச்சர்.. கணக்கு வாத்தியார் அட்டகாசம் - போக்சோவில் கைது

    ஊர் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர் கட்சி மாறியதால் கடந்த ஜுன் மாதம் 7ம் தேதி பணங்காட்டுப்பாக்கத்தில் ஊர் கூட்டம் நடத்தினர். அதில் தனசேகர் கட்சி மாறியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.  அன்று நள்ளிரவு சுமார் 1:30 மணியவில் அப்பகுதியில் இளைஞர்கள் சிலர் மின்சாரத்தை துண்டித்துவிட்டு ஒன்றிய குழு உறுப்பினர் அருண்குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர் இருவரின் உருவ பொம்மையை எரித்துள்ளனர். அதை தொடர்ந்து மறுநாள் காலை 8ஆம் தேதி காயார் காவல் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர் புகார் அளித்துள்ளார்.

    பணங்காட்டுப்பாக்கம் ஊராட்சியில் தொடர்ந்து பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் போலீசார் இந்த புகாரை தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர்க்கு மாற்றியுள்ளனர். இது சம்மந்தமாக கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி இருதரப்பினர் வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜராகியுள்ளனர்.

    அதை தொடர்ந்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வண்டலூர் வட்டாட்சியர் பாலாஜி தலைமையில் கடந்த மாதம் 28ஆம் தேதி அழைத்தபோது திமுகவிற்கு கட்சி மாறிய தரப்பினர் சென்ற நிலையில் எதிர்தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு வராமல் புறக்கணித்துள்ளனர்.

    ALSO READ | நட்சத்திர விடுதியில் ஜோடி நடனம் ஆட அனுமதிக்காததால் ரகளை.. பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்கு

    இந்நிலையில் கடந்த மாதம் 30ஆம் தேதி ஒன்றிய குழு உறுப்பினர் அருண்குமார், ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர், வார்டு உறுப்பினர் நரசிம்மன் ஆகிய மூவரும் இறந்துவிட்டதாக அவர்களுக்கு தனித்தனியே கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை தயார் செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். மேலும், முதலில் சாணத்தால் எழுதியிருந்த ஆபாச வார்த்தைகளை அழித்து விட்டு, பெயிண்டால் எழுதியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காயார் போலீசார் வீட்டின் சுவரில் எழுதி வைத்திருந்த அநாகரிகமான வார்த்தைகளை அழிக்க சொன்னதை தொடர்ந்து வீட்டு உரிமையாளர்கள் பெயிண்ட் அடித்து அழித்துள்ளனர்.

    அரசியலில் கட்சிவிட்டு கட்சி மாறுதல் புதிது இல்லை. இப்படி இருக்க பாமகவிலிருந்து திமுகவிற்கு கட்சி மாறியதால் ஊராட்சி மன்ற தலைவரையும், ஒன்றிய குழு உறுப்பினரையும், வார்டு உறுப்பினரையும் அநாகரிகமான வார்த்தைகளில் அவர்களது வீட்டின் சுவரில் எழுதி இழிவுப்படுத்துவதால் ஊர் கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளது.

    செய்தியாளர்:  ப.வினோத்கண்ணன், இசிஆர்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Chengalpattu, Chengalpet, Crime News, DMK, PMK

    அடுத்த செய்தி