ஹோம் /நியூஸ் /செங்கல்பட்டு /

ஊரிலிருந்து ஒதுக்கப்பட்ட குடும்பங்கள்... வளர்த்த நாய்கள் சுட்டுக்கொலை - செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

ஊரிலிருந்து ஒதுக்கப்பட்ட குடும்பங்கள்... வளர்த்த நாய்கள் சுட்டுக்கொலை - செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

புதுநடுக்குப்பம் கிராமத்தில் அதிகாரிகள் விசாரணை

புதுநடுக்குப்பம் கிராமத்தில் அதிகாரிகள் விசாரணை

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரைவிட்டு ஒதுக்கிய ஐந்து குடும்பங்கள் வளர்த்த 4 நாய்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chengalpattu, India

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கடற்கரை ஓரத்தில் 44 மீனவ கிராமங்கள் உள்ளன, ஒவ்வொரு மீனவர் கிராமங்களிலும்  ஊர் கட்டுப்பாடு என்ற முறை இருந்து வருகிறது. ஊர் கட்டுப்பாட்டை கடைபிடிக்க பஞ்சாயத்துதாரர்கள் 10 பேர் என்ற முறை பல மீனவ கிராமங்களில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த புதுநடுக்குப்பம் கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து, வருமானம் ஈட்டி  வாழ்ந்து வருகின்றனர். இந்த சிறிய கிராமத்தில் 100க்கும் குறைவான பொதுமக்களே வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த பகுதியில் பாளையத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் இளமதி(52), வேலாயுதம்(48), சேகர்(46), ஆரணி (42), ஆரணி (62) ஆகிய ஐந்து நபர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக அவர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் எங்கள் 5 பேரையு,ம் அந்த இடத்தை சென்னையை சேர்ந்த இறால் கம்பெனி உரிமையாளர் ஒருவருக்கு விற்று விடுமாறு  கூறி 100 ரூபாய் வெற்று பத்திரத்தில் கையெழுத்திட்டு தருமாறு தொடர்ந்து மிரட்டி வந்தார். ஆனால் நாங்கள்  கையெழுத்திட மறுத்து விட்டோம், இதன் காரணமாக பஞ்சாயத்துகாரர்கள் கிராமத்தை சேர்ந்த 5 குடும்பங்களையும் ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர்” என அதில் கூறியிருந்தனர்.

    இந்நிலையில், அந்த கிராமத்தில் உள்ள கடைகளில், சம்பந்தப்பட்ட ஐந்து குடும்பத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பால், மளிகை சாமான் உள்ளிட்ட எந்த வித பொருட்களும் விற்க கூடாது என பஞ்சாயத்துகாரர்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக  தெரிகிறது.

    இதேபோல் கிராமத்திலிருந்து ஆட்டோவில் செல்வதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது தவிர கடந்த 1ம் தேதி நடைபெற்ற,  இளமதி என்பவரின் மகன் அஜித்குமார் திருமண நிகழ்ச்சியில் கிராமத்தில் வசிக்கும் அனைத்து குடும்பங்களையும் கலந்து கொள்ள கூடாது என பஞ்சாயத்துகாரர்கள் அறிவித்ததாக தெரிகிறது.

    பஞ்சாயத்துதாரர்களின் உத்தரவை மீறி திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், ஒவ்வொரு நபர்களுக்கும் தலா 10,000 அபராதம் கட்டவேண்டும் என்று பஞ்சாயத்துதாரர்கள் உத்தரவிட்டதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். இதேபோல பிரதானமாக மீன் பிடி தொழில் செய்யும் படகை கடலில் இருந்து, கடற்கரையில்  டிராக்டர் உதவியுடன் இழுத்து நிலை நிறுத்துவதற்கு, அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளனர்.

    இதனால் பல நாட்களாக மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை என்று கூறுகின்றனர். மேலும் உச்சகட்டமாக கடந்த 26ம் தேதி செல்ல பிராணிகளாக வளர்த்து வந்த நான்கு நாய்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். “இந்த நாய்களை  சுடுவதை போல் உங்களையும், குடும்பத்தையும் சுட்டு விடுவோம்” என கொலை மிரட்டல் விடுத்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக வீடியோவும்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புகாரின் அடிப்படையில் மதுராந்தகம் கோட்டாட்சியர் (பொறுப்பு) சீதா சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் இதுகுறித்து காவல்துறையினரும் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட நாய்களின் சடலத்தை தோண்டி எடுத்தனர்.

    இதனையடுத்து நாய்களுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருவாய் கோட்டாட்சியர் இரு தரப்பையும் அழைத்து நோட்டீஸ் வழங்கி ஒரு சில தினங்களில் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.

    மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நாய்கள் திரும்பி கிடைக்குமா? எனவே இதற்கு சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டும்  என கோரிக்கை வைத்தனர். ஊர் பஞ்சாயத்து கட்டுப்பாடு என்ற போர்வையில் சில கிராமங்களில் பல்வேறு தரப்பு மக்கள் பாதிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. நாயை சுடுவது போல் என்று கூறுவதும் நாயை சுடுவது உங்களையும் சுடுவோம் என்று எச்சரிப்பது இந்த காலத்திலேயும் சட்டத்தை மீறும் செயலாகவே இது பார்க்கப்படுகிறது.

    செய்தியாளர் : ராபர்ட் எபினேசர் 

    Published by:Karthi K
    First published:

    Tags: Chengalpattu, Gun shoot, Killed dog, Local News