செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கடற்கரை பகுதியை ரூ.50 லட்சத்துக்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் எல்ஐசியை விற்பது, அரசு பேருந்தை விற்பது போன்ற நகைச்சுவை காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்பட்டன.அதுபோல், கடல் பகுதியையும் சர்வே எண் மாற்றி விற்பனை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. படத்தில் வரும் காட்சிகளைப்போலவே நிஜத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் தேவனேரி என்ற மீனவ கிராமம் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது.தேவனேரி மீனவ கிராமத்தில் சுமார் 40 சென்ட் அளவுள்ள கடற்கரை பகுதியில் திடீரென ஒருவர் வேலி அமைத்து, போர்வெல் கிணறும் போட்டிருக்கிறார். ஒருநபர் தங்கும் வகையில் சிறிய செட் ஒன்றும் அதில் அமைக்கப்பட்டுள்ளது.
கடற்கரை நிலத்தை யாரோ ஆக்கிரமித்து வேலி போடுவதாக மாவட்ட ஆட்சியர் உட்பட பல அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. உடனே ஆக்கிரமிப்பை அகற்றும்படி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டார். அதன்பேரில் திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகரன் தலைமையில் சென்ற அதிகாரிகள் அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
போர்வெல் குழாய்களை பிடுங்கி எறிந்தனர். ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றும்போது பிரச்சினைகள் ஏற்படாமல் தடுப்பதற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அந்த இடத்திற்கு உரிமையாளர் என கூறப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.
தேவனேரி கிராமத்தை சேர்ந்த சிலர் சேர்ந்த அரசுக்கு சொந்தமான 40 சென்ட் கடற்கரை நிலத்திற்கு போலியாக பத்திரம் தயார் செய்து ரூ.50 லட்சத்துக்கு விற்றிருப்பது தெரியவந்தது. கடற்கரை ஓரத்தில் சொகுசு பங்களா கட்டி, பீச் காற்று வாங்க ஆசைப்பட்டவர் ரூ.50 லட்சத்தை இழந்து தவித்து வருகிறார். பீச்சை விலைக்கு வாங்கியது யார்? மோசடியாக விற்றது யார் என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.