ஜொமோட்டோ நிறுவனத்தின் கொரோனா கால எமர்ஜென்சி சேவை: சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டு!

ஜொமோட்டோ நிறுவனத்தின் கொரோனா கால எமர்ஜென்சி சேவை: சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டு!

ஜொமோட்டோ

‘இதை ஆம்புலன்ஸ் சேவை போல கருதுங்கள், தயவுசெய்து அதை தவறாகப் பயன்படுத்த வேண்டாம்’ என ஜொமோட்டோ தளத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
கொரோனா எமர்ஜென்சி என்ற மனிதநேய சேவையை அறிமுகப்படுத்தியுள்ள ஜொமோட்டோ நிறுவனம் இந்த சேவையை யாரும் தவறாக பயன்படுத்திவிட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவவில் 2ம் அலை மிக அதிக அளவில் பரவி வருகிறது. இதன் காரணமாக மருத்துவ மற்றும் சுகாதாரத்துறையினர் போர்க்கால அடிப்படையில் செயலாற்றிக்கொண்டுள்ளனர். ஒரு நாளைக்கு சராசரியாக நோய்த்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. இதனையடுத்து ஹோம் குவாரண்டைனில் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுவாகவே வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் உணவு உள்ளிட்ட வசதிகளை அவர்களாகவே பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய நிலையில் இருப்பதால் அவர்களுக்கு உதவுவதற்காக உணவு டெலிவரி தொழிலில் முன்னணியில் இருக்கும் ஜொமோட்டோ நிறுவனம் ‘கொரோனா எமர்ஜென்சி’ சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி, ஜொமோட்டோ தளத்தில் உணவு ஆர்டர் செய்யும் கொரோனா நோயாளிகள் அல்லது சார்ந்தவர்கள் விரைவாக உணவு ஆர்டரை டெலிவரி பெற முடியும். இதற்காகவே ஜொமோட்டோ தளத்தில் ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. ‘கொரோனா எமர்ஜென்சி’ என்ற அந்த ஆப்ஷனை பயன்படுத்தி ஆர்டர் செய்யும் போது, உணவு தயாரித்தல், டெலிவரி இரண்டுக்கும் முன்னுரிமை கொடுத்து விரைவாக உரியவர்களுக்கு டெலிவரி செய்யப்படுகிறது. மேலும் இந்த சேவைக்கென தனியாக கூடுதல் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என ஜொமோட்டோ தெரிவித்துள்ளது. மேலும் இச்சேவைக்கென பிரத்யேக வாடிக்கையாளர் சேவையும் கொடுக்கப்படுகிறது. இதற்கென குறிப்பிட்ட ஹோட்டல்களுடன் ஜொமோட்டோ கைகோர்த்துள்ளது.

மேலும் இச்சேவையானது முற்றிலும் நேரடி தொடர்பு இல்லாமல் நடைபெறும் எனவும், தங்களின் டெலிவரிமேன்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜொமோட்டோ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜொமோட்டோவின் நிறுவனர் தீபேந்தர் கோயல் கூறுகையில், எங்களது சேவை மிகவும் தேவைப்படும் இந்த நேரத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய கைகோர்த்த அனைத்து உணவகத் நிறுவனங்களுக்கும் ஒரு பெரிய நன்றி என கூறினார்.

இருப்பினும், இது ஒரு உண்மையான அவசரநிலை மற்றும் முன்னுரிமையின் அடிப்படையில் ஆர்டர் தயாரிக்கப்பட வேண்டும் எனில் மட்டுமே, பயனர்கள் தங்கள் ஆர்டர் பக்கத்தில் இந்த விருப்பத்தைத் தேர்வுசெய்யுமாறு ஜொமோட்டோ வலியுறுத்துகிறது, ‘இதை ஆம்புலன்ஸ் சேவை போல கருதுங்கள், தயவுசெய்து அதை தவறாகப் பயன்படுத்த வேண்டாம்’ என ஜொமோட்டோ தளத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

ஜொமோட்டோ நிறுவனத்தின் இந்த மனிதநேய சேவையை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Published by:Arun
First published: